மாஸ்கோ, ஜூன் 25- இந்திய உச்ச நீதிமன்ற பிரதிநிதிகள் குழுவுடன் மாஸ்கோ சென்றுள்ள இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், ரஷ்ய கூட்டமைப்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இகோர் கிரஸ்னோவ்வை மாஸ்கோவில் உள்ள மார்பிள் ஹாலில் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பது அவசியம் குறித்தும், நீதி வழங்கும் முறையை மேம்படுத்தவும்,
நீதியை எளிதில் அணுகுவதை உறுதி செய்யவும், நீதிமன்ற நடைமுறைகளில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட இருநாடுகளின் நீதித்துறையும் மேற்கொண்ட டிஜிட்டல் மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடந்தன.
உயர்தரம் வாய்ந்த நீதித்துறை சார்ந்த கல்வியின் முக்கியத்துவங்கள் பற்றியும் அப்போது சுருக்கமாக விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் அவர்களது குழுவினரின் வருகைகள், குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூட்டு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு தரப்பினரின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்ரோப்பாவில் கடும் வெப்ப அலை; பொதுமக்கள் அவதி!
லண்டன், ஜூன் 25- பிரான்சு மட்டுமின்றி இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் வெப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
வெப்பஅலை
இந்த நிலையில், அய்ரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்பஅலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரான்சில் நேற்று வரலாறு காணாத அளவு அதிகபட்ச வெப்பம் பதிவானது.
அந்நாட்டின் தேசிய சராசரி வெப்பம் 29.8 டிகிரி செல்சியஸை எட்டியது. பல இடங்களில் பகல்நேர வெப்பம் 40 டிகிரி செல்சியஸை (104 பாரன்ஹீட்) தாண்டியுள்ள நிலையில், அங்கு வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த வார இறுதியிலிருந்து 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பருவ நிலை
வட ஆப்பிரிக்கா, சஹாரா பாலைவனப் பகுதிகளில் இருந்து வரும் வெப்பக் காற்றால், அய்ரோப்பாவில் இந்த ‘ஒமேகா பிளாக்’ எனப்படும் காற்று நகர்வற்ற தீவிர வெப்ப நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக, உலகளாவிய சராசரியைவிட அய்ரோப்பா இருமடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
