புனே, ஜூன் 11 நாளை மறுதினத் திற்குள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டு விலகா விட்டால், டில்லியில் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் டிப்கேயாக அறிவித் துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி முறை சார்ந்த குளறுபடிகள் குறித்துப் பேசுகையில் பாஜாக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது
“மாணவர்களை நேரடியாகப் பாதிக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து நாட்டின் இளைஞர்கள் இனிமேலும் மவுனமாக இருக்கத் தயாராக இல்லை. ஒரு விசயம் இப்போது மிகத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது; நாட்டின் இளைஞர்கள் இனி எதற்கும் பயப்பட மாட்டார்கள், போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்கவும் மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.
கல்வித்துறையில் நிலவும் குளறுபடி களையும் அதன் விளைவுகளையும் பட்டியலிட்டார். அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது:
தேர்வு குளறுபடிகள்
நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE), கியூட் (CUET) போன்ற முக்கியத் தேர்வுகள் தொடர்பான தொடர் சிக்கல்களால் நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக இதுவரை பல மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் அவல நிலை நீடிக்கிறது.
தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவுகள் அரங்கேறுகின்றன; தேர்வு எழுதும்போது சர்வர்கள் செயலிழக்கின்றன. இதனால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
20ஆம் தேதி டில்லி முற்றுகை
“மாணவர்களின் இந்த அவலச் சூழலுக்குப் பொறுப்பேற்பதற்கு தற்போதைய அரசில் யாரும் தயாராக இல்லை. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருகிற 13ஆம் தேதிக்குள் தனது பதவியை விட்டு விலகவேண்டும். அவ்வாறு அமைச்சரின் பதவி விலகல் குறித்த அறிவிப்பு வராவிட்டால், புனேயில் இருந்து எங்கள் நாடு தழுவிய இயக்கத்தை (போராட்டத்தை) தொடங்குவோம்.”
“அமைச்சரின் பதவி விலகல்கடிதம் வராத பட்சத்தில், வருகிற 20ஆம் தேதி நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான இளைஞர்கள் டில்லியில் திரள்வார்கள். கல்வி அமைச்சர் தனது பதவியை விட்டு விலகும் வரை அவர்கள் டில்லியை விட்டுத் திரும்பிச் செல்ல மாட்டார்கள்; டில்லியில் காலவரையற்ற போராட்டம் தொடரும்,” இவ்வாறு அவர் பேசினார்.
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு விடுக் கப்பட்டுள்ள இந்த நேரடி எச்சரிக்கை, அரசியல் மற்றும் மாணவர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
