டிசிஎஸ் (TCS) நிறுவனம் அறிவிப்பு!
மும்பை, ஜூன் 11- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேக வளர்ச்சியால், தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவானான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இனி வரும் காலங்களில் பழையபடி அதிக எண்ணிக்கையில் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்போவதில்லை என்று டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் பேசுகையில், வரும் காலங்களில் பல்வேறு பணிகளை மனிதர்களுக்குப் பதிலாக மிகத் துல்லியமாகச் செய்யக்கூடிய அதிநவீன ‘AI ஏஜெண்டுகள்’ (AI Agents) களமிறக்கப்பட்டுச் செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப உலகின் இந்த அத்தியாவசிய மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனம் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மென்பொருள் துறையில் நிலவி வரும் வேலைவாய்ப்பு அச்சங்கள் குறித்துப் பேசிய அவர், தற்போதைக்கு நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை நீக்கும் ஆட்குறைப்பு (Layoffs) நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால், அதே வேளையில் வழக்கமாக ஆண்டுதோறும் அய்டி (IT) துறையில் நடத்தப்படும் மெகா கேம்பஸ் நேர்காணல்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கிலான புதிய பணியாளர் சேர்க்கை (Mass Hiring) இனி கணிசமாகக் குறையும். தற்போதுள்ள ஊழியர்களுக்கு புதிய ஏஅய் தொழில்நுட்பங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி அய்டி நிறுவனமான டிசிஎஸ்-இன் இந்த அறிவிப்பு, மென்பொருள் துறைக்குத் தயாராகி வரும் இளம் பட்டதாரிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
