லக்னோ, மே 29 உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக, “மாநிலத்தில் குஜராத் மாடல் டிரான்ஸ்பார்மர் வெடித்துவிட்டது” என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில், அதனைச் சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களிலும் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்கள் போராட்டம்
தொடர் மின்வெட்டைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகிலேஷ் காரசார விமர்சனம்:
இந்த மின்வெட்டுப் பிரச்சினை குறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் யோகி அரசைச் சாடிப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் குறிப்பிட்டிருப்ப தாவது:
“உத்தரப்பிரதேசத்தில் குஜராத் மாடல் டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறிவிட்டது. பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு பொருத்தப்பட்ட திறன்மிகு மின் மீட்டர்கள், தற்போது மின்சாரம் இல்லாததால் செயலிழந்து கிடக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பாஜ தலைவர்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜவின் பெரிய தலைவர்களே இந்த நிர்வாகத் திறனின்மையால் தோல்வி அடைந்துவிட்டனர். அப்படியிருக்க, அவர்களின் சீடர்களிடமிருந்து மக்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? மாநிலத்தில் எந்தவொரு பிரச்சினை ஏற்படும்போதும், பாஜ தலைவர்கள் கைகளை உயர்த்திச் சரணடைவது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மின்வெட்டு நெருக்கடிக்கு பாஜ அரசின் பதில் என்ன?”
இவ்வாறு அகிலேஷ் தனது பதிவில் மிகவும் காட்டமாக வினவியுள்ளார். மின்வெட்டு விவகாரத்தில் பாஜ அரசுக்கு எதிராக அகிலேஷ் வெளியிட் டுள்ள இந்த அறிக்கை தற்போது உ.பி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
