புதுடில்லி, ஜூன் 8 தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த ரிட் மனுவில், தவெக கட்சி மற்றும் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குதிரை பேரம்
மனுவில் கூறப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது பதவிகளை திடீரென பதவி விலகி தவெக இணைந்துள்ளனர். இது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரான செயலாகும்.
இந்த விவகாரத்தில் தவெக என்ற கட்சி மிகப்பெரிய அளவில் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபட்டு, சட்ட விரோதமாக இந்த சட்ட மன்ற உறுப்பினர்களைத் தன் வசப்படுத்தி யுள்ளது.
எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பின்வருபவர்கள் எதிர்மனு தாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்:
ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்திய தேர்தல் ஆணையம் சிபிஅய் தமிழ்நாடுஅரசுதமிழ்நாடுசட்டமன்ற பேரவைத் தலைவர் தவெகழகத்தின் பொதுச்செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா).
“குதிரை பேரத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகா ரத்தைப் பயன்படுத்த வேண்டும்.”
சிபிஅய் விசாரணை
தவெகழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் குற்றச் சாட்டுக்கு உள்ளான 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது சிபிஅய் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
தேர்தல் முடிந்த பிறகு, எவ்வித நியாயமான காரணமும் இன்றி பதவியை விட்டு விலகல் அல்லது சட்டமன்ற பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்படும் உறுப்பினர்கள், மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் தனது சிறப்புப் அதிகாரமான பிரிவு 142-அய் பயன்படுத்தி கடுமையான புதிய விதிகளை உருவாக்க வேண்டும்.
நீதிமன்றம் புதிய விதிகளை உருவாக்கும் வரை, சம்பந்தப்பட்ட 4 முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்களும் சுயேச்சையாகவோ அல்லது வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவிலோ இடைத் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த மனு, விரைவில் உச்ச நீதிமன் றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
