புதுடில்லி ஜூன் 26- உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையின் அவலநிலை குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது. அங்குள்ள அரசு மருத்துவர் ஒருவர். தடையை மீறி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதாகக் கூறி இந்த வழக்கு முதலில் தொடங்கப்பட்டது.
பின்னர் அங்குள்ள பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருவதாகவும், அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவப் பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் கடந்த மே 4-ஆம் தேதி கவலை தெரிவித்திருந்தது. அரசு போதுமான நிதி மற்றும் வசதிகளை வழங்கிய போதிலும், மருத்துவர்களின் இத்தகைய செயல்பாடுகளாலேயே அந்த அரசு மருத்துவமனையின் நிலைமை மோசமடைந்து உள்ளதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும் தனியாகத் தொழில் செய்யும் அரசு மருத்துவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும் ஆணையிட்டது.
தனியாகத் தொழில்
இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, அந்த மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறை இணைப் பேராசிரியர் மருத்துவர் சந்தோஷ்குமார் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஜாய்மால்யாபாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் உத்தரவில் தலையிட தாங்கள் விரும்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதி பி.வி.நாகரத்னா கூறுகையில், “உயர்நீதிமன்றம் ஒரு பெரிய பொதுநலன் சார்ந்த விசயத்தைக் கையாண்டு வருகிறது. அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற இந்த நோக்கம் மிகவும் நல்லது. நீங்களும் ஒரு மருத்துவர்தான். இந்த நடவடிக்கைகள் தனிப்பட்ட முறையில் உங்கள் மீது மட்டும் எடுக்கப்பட்டவை அல்ல. தனியாகத் தொழில் செய்யும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் எதிரானதுதான்” என்று குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் தனது மனுவை நிராகரிக்கப் போவதை உணர்ந்த மனுதாரரின் மூத்த வழக்குரைஞர் பிரதாப் சர்மா. மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்தனர்.
