புதுடில்லி, மே 27 பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி, இந்தியாவில் கடந்த 10 நாட்களில் 4ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) தள பதிவில் பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பணவீக்க நாயகன்: பிரதமர் மோடி ‘பணவீக்க நாயகன்’ போலச் செயல்பட்டு, மக்களின் பாக் கெட்டைச் சத்தமின்றி கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டுகிறார்.
தேர்தல் அரசியல்: வரவிருக்கும் பொருளாதார புயல் குறித்து பல மாதங்களாக எச்சரித்தேன். ஆனால், பிரதமர் தேர்தல்களில் மும்முரமாக இருந்தார்.
விலை உயர்வு: தேர்தல்கள் முடிந்த மறுகணமே, பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.7 வரை உயர்த்தி விட்டனர். தேர்தலின் போது வாக்குறுதிகளை அளிப்பது, மற்ற நேரங்களில் மக்களைச் சுரண்டு வதுதான் இவர்களின் வேலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி அரசின் கீழ் ஏற்பட்டுள்ள விலை உயர்வை புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுள்ளார்:”எரிபொருள் கொள்ளை எனும் தினசரி தாக்குதல் இன்னும் ஓயவில்லை. இந்தத் தினசரி கொள்ளையால் பயன்பெறுவது யார்?” என்று கார்கே கேள்வி எழுப்பி யுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில்:
ரஷ்யாவும், ஈரானும் நமக்கு மலிவான விலையில் போதுமான எண்ணெய் மற்றும் எரிவாயுவை வழங்குகின்றன.
அதிகரித்து வரும் பணவீக்கத்தால் 140 கோடி மக்கள் அவதிப்படும் நிலையிலும், பிரதமருக்கு என்ன நிர்பந்தம் இருப்பதால் அவர்களிட மிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்க மறுக்கிறார் என வினவி யுள்ளார்.
மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்வாலா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சராசரியாக 38 டாலர் குறைந்துள்ள தால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சிஎன்ஜி விலைகளை பாஜக அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
