விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் பொதுவாழ்வில் தேவை! தேவை!!

6 Min Read

தமிழ்நாட்டின் பொது உரிமைகளுக்குக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த முறையில் குரல் கொடுப்பதும்
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உரிய நிதியை அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியதும் வரவேற்கத்தக்கவை!
ஆக்கப்பூர்வ அணுகுமுறைகள் பெருகட்டும்!
பழைய திட்டங்களின் பெயர் மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல!

தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு பாரபட்சம் இல்லாமல் ஒதுக்க வேண்டும் என்ற தீர்மானம் கட்சி வேறுபாடின்றி ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது; இந்த நிலை தொடரவேண்டும். ஆக்கப்பூர்வ அணுகுமுறைகள் பெருகட்டும்! பழைய திட்டங்களின் பெயர் மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்றைய (7.8.2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில், நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின் போது, நமது மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு  உரிய நியாயமான அளவில் ஒதுக்க வலியுறுத்தும் தீர்மானத்தை, எதிர்க்கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர்கள்மூலம் வரவேற்று, ஆதரவு கொடுத்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைவர் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பின் மூலம் சுமூகமாக நிறைவேற்றியது மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டே நிதியை குறைத்துள்ளது!

ஆண்டுதோறும் உ.பி. மற்றும் பீகார் (பா.ஜ.க. ஆளும்) மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடும், சிறப்பான நிர்வாகம் நடத்தி, வளர்ச்சியைக் காட்டும் தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு, திட்டமிட்டே ஆண்டுக்காண்டு நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு குறைத்தும் வந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய அரசுக்கு வரி வரு வாயாக ஒரு ரூபாய் சென்றால், அதிலிருந்து நமக்கு 29 காசுகள் மட்டுமே பகிர்வாக வருகிறது என்று தமிழ்நாடு மேனாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறாரே!

ஆனால், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசால் 3 ரூபாய் 33 காசும், பீகாருக்கு, 9 ரூபாய் 22 காசும், மத்திய பிரதேசத்திற்கு 2 ரூபாய் 79 காசும் வழங்கப்பட்டன என்று ஒன்றிய நிதியமைச்சகத்தின் புள்ளிவிவரங்களே எடுத்துக்காட்டவில்லையா?

இன்றும் அந்த நிலை மாறவில்லையே!

எடுத்துக்காடாக, நீர் மேலாண்மைக்காக உத்தரப்பிர தேசத்திற்கு ரூ.2,711 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு. தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.96.52 கோடி தான் என்பன போன்று எத்தனை எத்தனையோ  நடப்புகளைக் காட்டலாம்.

மிகவும் தந்திரமாக, இந்த அதிக நிதி ஒதுக்கீட்டை நிதிக்கமிஷன் ஆய்வு என்றெல்லாம் (பாரபட்சத்தைச் சட்டபூர்வமாக்கும் வகையில்), தமிழ்நாட்டிற்கு வந்து விரிவாக ஆய்வு நடத்தியப் பின்னரும் குறைந்த ஒதுக்கீடு விகிதம் தருவதா? காரணம் கேட்டால், தமிழ்நாடு போன்றவை வளர்ந்த மாநிலம் என்று கூறுவதா?

அனைத்துக் கட்சிகளும் அத்தீர்மானத்தை வரவேற்றது சிறப்பானதாகும்!

வளர்ச்சியைப் பாராட்டுவதற்குப் பதிலாக, வளர்ச்சியைத் தண்டிப்பதா நியாயம்? என்று பலமுறை, பாதிக்கப்பட்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வற்புறுத்திக் கேட்டும் கூட, அதற்கு ஒன்றிய அரசு இணக்கம் காட்டவில்லை என்பதால், அனைத்துக் கட்சிகளும் அத்தீர்மானத்தை வரவேற்றது சிறப்பானதாகும். சில மணிநேரத்தில் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி, உரிமைக்குக் குரல் கொடுக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று காட்டியுள்ளனர்.

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசின்
உள்ளார்ந்த கொள்கை!

இதை ஆளுங்கட்சியான புதிய கட்சியும், முதல மைச்சரும் நன்கு மதித்து, இத்தகைய அரசியல் சூழலை மேலும் வளர்த்து, கருநாடகவின்  மேகதாது அணைக் கட்டுத் தடுப்பு முயற்சியானாலும், கல்வி உரிமைகளை மாநில அரசிடமிருந்துப் பறிக்கும்  ஒன்றிய அரசின் தொடர் திணிப்பு முயற்சிகளானாலும்,  தொகுதி மறுவரையறை, ஒன்றியத்தில்  மகளிர் இடஒதுக்கீடான 33 சதவீத ஒதுக்கீட்டினை செயல்படுத்தும் முயற்சியானாலும், மாநில உரிமைகள் சம்பந்தப்பட்ட விஷயத்திலும், சுருதி பேதமற்று அனைவரது குரலும் சேர்ந்து ஒலிக்கவேண்டும். இந்த ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசின் உள்ளார்ந்த கொள்கையான ‘‘மாநிலங்களே இருக்கக்கூடாது,  கூட்டாட்சிக்குப் பதில், ஒற்றை ஆட்சியாக இருக்க வேண்டும்’’ என்பதை எவ்வளவுப் பிடிவாதமாகவும், அதே சமயத்தில் மிகத் தந்திரமாகவும் செய்கின்றது, நாளும்! அதைப் புரிந்துகொண்டு, எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும்.

தொடரட்டும் இந்த ஆக்கப்பூர்வ
அரசியல் ஒருங்கிணைப்பு!

தமிழ்நாட்டின் சமூகநீதி உணர்வு என்னும் நெருப்பை, எந்த ஆட்சியும் விரல் விட்டு அணைக்க முயல முடியாது என்ற தனி வரலாறு பெரியார் மண்ணான தமிழ்நாட்டுக்கு உண்டு. இது அரசியலுக்கு அப்பாற்பட்டு, மொழி உரிமை, கல்வி உரிமை, பணி உரிமை, வர்ண ஜாதி ஒழிப்புச் சரித்திரத்தில் தனித்தன்மையானதாகும். பெரியார் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்ட பின்னணியின் உணர்வுகள் இதன் அடிநாதம் என்பது வரலாறு சுட்டிக்காட்டும் – மறுக்கக் கூடாத சிறப்புப் பாடமாகும்! தொடரட்டும் இந்த ஆக்கப்பூர்வ அரசியல் ஒருங்கிணைப்பு!

அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவதுபற்றி முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும். இதில் கட்சிகளின் கருத்தினை மதித்து, இணக்கமாகக் கூட்டத்தினைக் கூட்டி – கருநாடகம்போல, தமிழ்நாடு ஒன்றுபட்டு, குரல் கொடுப்பதற்கு, ஒன்றுபட்ட முடிவுகளில் தமிழ்நாடு அரசு தம்முடன் உள்ளது என்று காட்டுவது தமிழ்நாடு அரசுக்கு வலிமையே தவிர, எந்த வகையிலும் பின்ன டைவு ஆகாது.

அதுபோலவே முந்தைய தி.மு.க., அ.தி.மு.க.  அரசுகளின் திட்டங்களைத் தொடருவது நல்ல அரசியல் நடைமுறை – அவற்றால் மக்கள் அடையும் பயன் கண்ணோட்டத்தில் வரவேற்கத்தக்கது.

என்றாலும், பழைய அந்த சிறப்பான மக்கள் நலத் திட்டங்களுக்குப் பெயர் மாற்றங்கள் தேவையற்றன!

அது த.வெ.க. ஆட்சிக்குப் பெருமை தராது; நடை முறையில் குறிப்பிடத்தக்கப் பயனும் தராது என்பதைச் சுட்டிக்காட்டுவது நமது அனுபவக் கடமையாகும்.

அரசியல் நனி நாகரிகத்தினைக் காத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1967 இல் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் காமராசரின் பகல் உணவுத் திட்டத்தை ரத்து செய்யாது, தொடர்ந்து நடத்தினார்.

கலைஞர் ஆட்சி, அந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கியது.

எம்.ஜி.ஆர் ஆட்சியில், சத்துணவுத் திட்டம் என்று கூறி, அந்தத் திட்டத்தைத் தொடர்ந்தார்.

மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர், சத்துணவுத் திட்டப் பெயரை மாற்றாமல், 2 முட்டை அல்லது 2 வாழைப்பழம் என்று சத்துணவிற்கு மேலும் சத்து சேர்த்தார்.

அம்மா உணவகம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கி நடத்தப்பட்டது. மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்ததும், அதனைத் தொடர்ந்து நடத்திடவே ஆணையிட்டார்!

பாடப் புத்தகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் படம் போட்டு அச்சிட்ட பைகளை அதிகாரிகள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க முனைந்தபோதுகூட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘வேண்டாம், அப்படியே தொடரட்டும்’’ என்று கூறி, அரசியல் நனி நாகரிகத்தினைக் காத்தார்!

பழைய திட்டங்களை யார் கொண்டு வந்து செயல்படுத்தினாலும், அந்தத் தலைவர்கள், முதல மைச்சர்கள் பெயர்தான் மக்கள் மத்தியில் நிற்குமே தவிர, புதிய பெயர்கள் மக்கள் மத்தியில் ஒருபோதும் நிலைத்திடாது!

புதிய திட்டங்களை, புதிய அரசு கொண்டு வரும்போது வேண்டுமானால், அரசு விரும்பும் பெயர்களை வைத்துக் கொள்ளலாம்!

மக்களுக்கு நல்லாட்சியைத் தருவதில்
குறியாகச் செயல்படுவதே முக்கியம்!

அதுபோல, பொதுநலம், கல்வி முதலியவை எந்த அரசு வந்தாலும் தொடர வேண்டியவையே!

அரசு என்பது வேறு; கட்சி என்பது வேறு!

முதலமைச்சர் என்றாலும், அவர் வாக்களித்தவர்க ளுக்கும், வாக்களிக்காதவர்களும் சேர்த்தே முதலமைச்சர் என்பதுதானே ஜனநாயகம்?

எனவே, அரசு – ஆளுமை வேறு; கட்சிகள் – காட்சிகள் வேறு என்பதை ஆளும் முதலமைச்சரும், அவரது அரசும் உணர்ந்து, மக்களுக்கு நல்லாட்சியைத் தருவதில் குறியாகச் செயல்படுவதே முக்கியம்!

விமர்சனங்களை ஏற்கும் மனப் பக்குவம், பொதுவாழ்க்கையில் மிகமிகத் தேவை.

எதற்கெடுத்தாலும் கைது, பிறகு நீதிமன்றங்களினால் அம் முடிவை மாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுவது – எவ்வகையிலும் விரும்பத்தக்க அரசியல் அணுகுமுறை ஆகாது.

83 ஆண்டு பொது வாழ்க்கையும், அரசியல் நடப்புகளையும் கண்ட அனுபவத்தின் காரணமாக, உரிமையுடன் இதனைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாட்டுநலன் கருதி நாம் சுட்டிக் காட்டுகிறோம்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை         

8.8.2026     

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *