புதுடில்லி, மே 23- நாடு முழுவதும் உள்ள அழகு கலை மய்யங்கள் (பியூட்டி பார்லர்கள்) மற்றும் கிளினிக்குகளில், அழகு சிகிச்சை என்ற பெயரில் ஊசி மூலம் மருந்துகளைச் செலுத்தும் நடைமுறை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக வலைதள விளம்பரங்களைக் கண்டு ஈர்க்கப்பட்டு பலரும் இத்தகைய சிகிச்சைகளை நாடிச் செல்கின்றனர்.
இந்நிலையில், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போலி நிபுணர்களின் அங்கீகாரமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும் ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஊசி மூலம் மருந்து செலுத்தத் தடை
ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப் பட்டுள்ளதாவது:
அழகு சாதனப் பொருட்களின் வரையறை
உடலை அழகுபடுத்த, தூய்மைப்படுத்த, கவர்ச்சியை மேம்படுத்த அல்லது தோற்றத்தை மாற்றியமைக்க… உடலின் மீது தேய்க்க, ஊற்ற, தூவ அல்லது தெளிக்கப் பயன்படுபவை மட்டுமே அழகு சாதன பொருட்கள் ஆகும்.
ஊசி வடிவில் உடலுக்குள் செலுத்தப்படும் எந்தவொரு தயாரிப்பும் அழகு சாதனப் பொருட்களின் வரையறைக்குள் வராது.
தகுந்த மருத்துவப் படிப்போ, அங்கீகாரமோ இல்லாத அழகுக் கலை நிபுணர்களோ அல்லது தனிநபர்களோ, வாடிக்கையாளர்களுக்கு ஊசி மூலம் எந்தவொரு மருந்தையும் செலுத்த சட்டப்படி அனுமதி இல்லை.
அழகு சாதனப் பொருள் என்ற பெயரில், விதிகளை மீறி ஊசி மூலம் மருந்துகளைப் பயன்படுத்தும் அழகு கலை மய்யங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விதிமீறல்கள், தவறான விளம்பரங்கள் அல்லது தகுதியற்ற நபர்களால் வழங்கப்படும் ஊசி வழி அழகு சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இது போன்ற சட்டவிரோத நடைமுறைகளைக் கண்டறிந்தால், ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடமோ அல்லது அந்தந்த மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரிகளிடமோ மின்னஞ்சல் மூலமாக உடனடியாகப் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
