புதுடில்லி, மே 18 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய பல்வேறு துறை சார்ந்த 16 நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பொது கணக்கு கமிட்டியிலும் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும், சமீபகால மாக நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நிலைக்குழு கூட்டம் நடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 11 உறுப்பினர்கள் (Quorum) பங்கேற்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், போதிய உறுப்பினர்கள் வராத காரணத்தால் சமீபத்தில் மட்டும் நாடாளுமன்றக் குழுக்களின் 5 முக்கியக் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழு
தொலைத்தொடர்பு உற்பத்தித் துறையில் நாட்டின் தன்னிறைவு குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்தக் கூட்டம், உறுப்பினர்கள் வராததால் ரத்து செய்யப்பட்டது.
நீர்வளத் துறை குழு: கடந்த ஜனவரி 5 அன்று போதிய நாடாளுமன்ற உறுப் பினர்கள் இல்லாததால் இதன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு: ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற விருந்த இக்குழுவின் கூட்டமும் போதிய வருகை இல்லாததால் தள்ளி வைக்கப்பட்டது.
12 பேர் மட்டுமே பங்கேற்பு: ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற வேளாண்மை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், மொத்த உறுப்பினர்களில் வெறும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்த தரவுகளின்படி, 16 நிலைக்குழுக்களின் கூட்டங்களில் சராசரியாக 47 சதவீத உறுப்பினர்கள் தொடர்ந்து கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருவது தெரியவந்துள்ளது.
மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் இத்தகைய உயர்மட்டக் குழு கூட்டங்களில், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது பரவலான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
