ஈரான் போர் எதிரொலி
பெட்ரோல், டீசல்
விலை உயருகிறது
புதுடில்லி, ஏப்.17 ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை குறைந்து விட்டது. இதனால் உலக சந்தையில் அதிக விலை கொடுத்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நேரடியாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும்.
ஏற்ெகனவே ஷெல், நயாரா போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி விட்டன. ஆனால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் , பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை இதுவரை பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தவில்லை. பிரீமியம் பெட்ரோல் விலைகள் மட்டுமே உயர்த்தப்பட்டன. போருக்கு முன்பு என்ன அளவில் இருந்ததோ அதே அளவில் தான் பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது.
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு
பெட்ரோல், – டீசல் விலை இம்மாத இறுதியில் உயருகிறது. அதன்படி பெட்ரோல் விலை ரூ.119 ஆகவும், டீசல் விலை ரூ.127 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு எரிபொருள் விலையை உயர்த்தாமல் விற்பனை செய்வதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 18 ரூபாயும் ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையிலும் 35 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்து 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல், டீசல் விற்பனை விலையை மாற்றாமலேயே வைத்துள்ளன.
போருக்கு முன் இந்தியாவிற்கு 90 ரூபாய்க்கு கிடைத்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 150 ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது. இந்த நிலையில் மெக்வாரி எனும் பன்னாட்டு நிதி சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் வருவாய் நிலைமை மோசமாக உள்ளது என குறிப்பிட்டு இருக்கிறது.
சென்னை குடிநீர் ஏரிகளில்
9.6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு
கோடைகாலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது
அதிகாரிகள் தகவல்
சென்னை, ஏப்.17 சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிகள் உள்ளன.
குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு
இந்த ஏரிகளில் மொத்தம் 13 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது நல்ல மழை பெய்ததால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்தது.
இதனால் குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்தும் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் நகரில் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் குடிநீர் ஏரிகளில் மொத்தம் 10½ டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. கடும் வெப்பம் மற்றும் குடிநீர் தேவை காரணமாக கடந்த 15 நாட்களில் ஒரு டி.எம்.சி. தண்ணீர் ஏரிகளில் குறைந்து உள்ளது. இது வழக்கத்தை விட அதிகம் ஆகும். நேற்று 16.4.2026 காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 9.6 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மில்லியன் கன அடியில் 2939 மி.கனஅடியும் (80.63 சதவீதம்), பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடியில் 2323 மி.கனஅடியும்(71.90 சதவீதம்), சோழவரம் ஏரியில் 1081 மி.கன அடியில் 505 மி.கன அடியும்(46.72 சதவீதம்), புழல் ஏரியில் 3300 மி.கஅடியில் 2214 மி.கன அடியும்(97.09 சதவீதம்), கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 428 மி.கன அடியும்(85 சதவீதம்), வீராணம் ஏரியில்1465 மி.கன அடி யில் 1207 மி.கன அடியும்(82 சதவீதம்) தண்ணீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

