அரசு மருத்துவமனைகளில் இனி குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ்! முதலமைச்சர் காப்பீடு இல்லாதவா்களுக்கு புதிய வசதி

- Advertisement -

சென்னை, நவ.27 தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுவரும் சிறுநீரக நோய் பாதிக்கப்பட்டோருக்கான ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் (டயாலிசிஸ்) அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறை செயல்வடிவம் பெற்றால், அரசு மருத்துவமனைகளில் இனி முதலமைச்சர் காப்பீடு இல்லாதவா்களும் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சைகளைப் பெற முடியும். எவ்வாறு சி.டி.ஸ்கேன், எம்ஆா்அய் ஸ்கேன் பரிசோதனைகள் மலிவான கட்டணத்தில் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறதோ, அதுபோலவே ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகளையும் வழங்க உள்ளதாக டிஎன்எம்எஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகள், மாநகராட்சி மருத்துவ மய்யங்கள் என 146 இடங்களில் அரசு சார்பில் டயாலிசிஸ் மய்யங்கள் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,400 டயாலிசிஸ் சாதனங்கள் அங்கு பயன்பாட்டில் உள்ளன.

அதன் வாயிலாக கடந்த நிதியாண்டில் மட்டும் 9,400 மருத்துவப் பயனாளிகளுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்ட டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த சிகிச்சைகள் அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்பட்டன.

இந்த நிலையில், மருந்துகள், மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து டயாலிசிஸ் மய்யங்களையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள 140 சிடி ஸ்கேன் கருவிகளையும், 51 எம்ஆா்அய் ஸ்கேன் கருவிகளையும் டிஎன்எம்எஸ்சி நிர்வாகம்தான் இயக்கி வருகிறது. அதேபோன்று புற்றுநோய் பாதிக்கப்பட்டோர்களுக்கான லீனியா் அக்சிலரேட்டா் எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை உபகரணங்களும் அதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அங்கு பணியாற்றும் தொழில்நுட்புநா்கள் மற்றும் ஊழியா்களுக்கான ஊதியம், உபகரண பராமரிப்பு என அனைத்து விஷயங்களையும் டிஎன்எம்எஸ்சி நிர்வகித்து வருகிறது.

அதனால்தான் அந்த ஸ்கேன் வசதிகளை காப்பீடு இல்லாதவா்களும் ரூ.500 அல்லது ரூ.2,000 செலுத்தி பயன்படுத்திக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.

அதே நடைமுறையில் தற்போது டயாலிசிஸ் மய்யங்களையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வா் காப்பீடு உள்ளவா்களுக்கு மட்டுமே இப்போது அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சேவை வழங்கப்படுகிறது. டிஎன்எம்எஸ்சி கட்டுப்பாட்டின் கீழ் அது கொண்டுவரப்பட்டால், அனைவருக்குமான சேவையாக அது செயல்படுத்தப்படும்.

இதுதொடா்பாக டிஎன்எம்எஸ்சி மேலாண் இயக்குநா் எஸ்.பி.அம்ரித் கூறியதாவது: முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு டயாலிசிஸ் சிகிச்சைக்கு தற்போது ரூ.1,100 ஒதுக்கப்படுகிறது. அதே கட்டணத்தில் காப்பீடு இல்லாதவா்களுக்கும் அந்த சிகிச்சையை அளிக்க வாய்ப்புள்ளது.

டயாலிசிஸ் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் டயலைசா், வடிகுழாய் (ப்ளட் டியூப்) உள்ளிட்ட உபகரணங்களை மறுபயன்பாடு செய்யக் கூடாது என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக டிஎன்எம்எஸ்சி மேலாண் இயக்குநா் அம்ரித் கூறுகையில், ‘தற்போது மாநில அரசு வகுத்துள்ள நடைமுறைப்படி அந்த உபகரணங்களைப் பயன்படுத்தி வருகிறோம்; புதிய உத்தரவின்படி அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் அதைப் பின்பற்றுவோம்’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *