திராவிடர் கழக வரலாற்றில் நவம்பர் 26ஆம் தேதியை மறக்க முடியாது – இன்னும் சொல்லப் போனால் திராவிடர் கழக வரலாற்றில் மட்டுமல்ல – தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மறக்க முடியாது.
இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டும் என்றால்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!’’
‘‘பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்!’’
என்று தத்துவப் பார்வையில் நவம்பர் 26 என்பது மிக முக்கியமான நாள்!
தந்தை பெரியாரின் கட்டளைப்படி ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு திராவிடர் கழகத் தோழர்களால் கொளுத்தப்பட்ட நாள்!
‘சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா?’ என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்வியை நியாயப்படுத்த ‘இந்திய அரசே, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவை நீக்கு!’ என்பதற்கு விடை காணும் நாள்.
ஜாதியை ஒழிக்க எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்பதற்கான சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்ட நாள்.
1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூரில் தந்தை பெரியார் 79ஆம் பிறந்த நாள் விழா – ஜாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) தனி மாநாடும் நடைபெற்றது.
இம்மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
‘‘அரசியல் சட்டத்தில் கண்டுள்ள மதப் பாதுகாப்பு, மத உரிமை என்பதில் இந்துமதம் என்பதை எடுத்துக் கொணடால், அது வர்ணாசிரமதர்மம் என்கிற, பிறவியில் மக்களை ஜாதிகளாகப் பிரித்து, அவரவர் களுக்குத் தொழிலையும் கற்பித்து, ஒரு பிறவி உயர்ந்தது, முதன்மையானது. மற்றொரு பிறவி தாழ்ந்தது, இழிவானது என்பதான கருத்துகளை அமைத்து, அந்த அமைப்பைக் காப்பதுதான். மத, சுதந்தரம் என்பதாக சாஸ்திரங்களிலும் மற்றும் மத ஆதாரங்களிலும் கூறுவதைக் கொள்கையாகவும், நம்பிக்கையாக வும் கொள்வதை உரிமையாக்குவதாக ஆகிறது. இந்த உரிமையானது இந்நாட்டு, இந்துப் பொதுமக்களில் 100-க்கு 3 பேர்களை மேல் ஜாதி, உயர்ந்த பிறவி, உடல் உழைப் பில்லாமல் இருந்து கொண்டு மற்றவர்கள் உழைப்பில் சுகவாசிகளாக வாழ்வதென்றும், 100-க்கு 97 பேர்களான மக்களைக் கீழ் ஜாதி இழிமக்கள் என்றும் உடலுழைப்பு வேலை செய்து கொண்டு அடிமையாய், பாட்டாளியாய், வாழ வேண்டியவர்கள் என்றும், பின் சொல்லப்பட்ட மக்கள் கல்வியறிவுக்கும், நீதி, நிர்வாக உத்யோகங்கள், பதவிகளுக்கும் தகுதியற்றவர்களென்றும் ஆக்குவதாக இருப்பதால், இந்த மதக் காப்பாற்று உரிமை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டு மென்பதும் அவசியமென்று இம்மாநாடு கருதுகிறது.
இந்தக் காரியங்கள் சாதாரணமான தன்மையில் மாற்றப்படாவிட்டால் எந்தவிதமான முறையைக் கையாண்டாவது மாற்றித் தரும்படி செய்ய வேண்டி யது பொது மக்களின் இன்றியமையாத கடமை யென்று இம்மாநாடு கருதுகிறது. மற்றும் இந்த அரசியல் சட்டமானது பொது ஜனவோட்டு உரிமையில்லாமலும் சரியான தேர்தல் முறையில்லாமலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளப் பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையினால் வகுக்கப்பட்ட சட்டமாதலாலும்,
இந்தச் சட்டத்தைத் தயாரித்த ஆறு பேர்களில் பெரும்பான்மையானவர் பார்ப்பனர் ஆதலாலும், பார்ப்பனர் முஸ்லீம், பஞ்சமர் ஆகியவர்களைத் தவிர்த்த பொது ஜனத் தொகையில் 100-க்கும் 75 பேர்களாயுள்ள ‘சூத்திரர்’ என்று ஆக்கப்பட்டிருக்கின்ற பெருங்குடி மக்களுக்கு பிரதிநிதித்துவமில்லாத ஒரு சட்டம் செய்யும் குழுவைக் கொண்டு இச்சட்டம் வகுக்கப்பட்டிருப்பதாலும்,
இந்த சட்டமானது ‘நான்காம் ஜாதி’ என்று கூறப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தத் தக்கதாக ஆகாது என்று இம்மாநாடு கருதுகிறது.
இப்படிப்பட்ட காரணங்களால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, ஜாதி, மதம் ஆகியவை காரணமாக, நீதி, சமத்துவம், சகோதரத் துவம், சுதந்திரம் ஆகியவை அளிக்கப்படாததாயிருப்பதால், இவைகளை முன்னிட்டு இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடானது என்று கருதுவதால், இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக, 1949 நவம்பர்
26-ஆம் தேதி என்ற அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து இந்த நவம்பர் மாதம் 26-ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறது.
(‘விடுதலை’ -5.11.1957)
உலக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டம் நடைபெற்றதில்லை.
அப்படியொரு போராட்டத்தை நடத்திக் காட்டியது – தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் மட்டுமேதான்!
அரசியல் சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை? அப்படியொரு பிரிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை.
அவசர அவசரமாக (6.11.1957) சென்னை சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா – 1957) என்று அதற்குப் பெயரிடப்பட்டது – நவம்பர் 11 அன்று நிறைவேற்றப்பட்டது.
3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பதுதான் அந்த சட்டம்.
அஞ்சினாரா அஞ்சாத சிங்கம் தந்தை பெரியார்? அனல் பறக்கும் அறிக்கையினை வெளியிட்டார்.
‘‘சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசாங்கத்தினர் ஜாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும் என நமக்குச் சவால் விட்டிருக்கின்றனர். இந்த சவாலுக்கு நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள் தானா?’’
‘‘சட்டம் கொளுத்தி சாம்பலை சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்! சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்’’ என்று அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியார்.
மற்றொரு அறிக்கை என்ன தெரியுமா?
‘‘நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும் அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும், பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல.
இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’ (‘விடுதலை’ 21.11.1957) என்பதுதான் அந்த அறிக்கை!
இப்படியொரு அறிக்கையை இன்னொருவரால் வெளியிட முடியுமா? இதனை ஏற்றுக் கொண்டு 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தி இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை ஏற்ற வரலாறு எங்கு உண்டு?
கர்ப்பிணிப் பெண்களும் இந்தப் போராட்டத்தில் குதித்து சிறையேகியதுண்டு; சிறையில் பிறந்த குழந்தைகளும் உண்டு. இந்தக் குழந்தைகளுக்குச் ‘சிறைப் பறவை’ என்றும் ‘சிறை வாணி’ என்று பெயர் சூட்டியதும் உண்டு.
தோழர்களே, இந்த நவம்பர் 26க்கு இவ்வளவு மகத்தான வரலாறு உண்டு.
அந்த ஜாதியை ஒழிக்கும் களத்தில் இன்றும் நின்றுகொண்டு தான் உள்ளோம்.
தந்தை பெரியார் அறிவித்த கடைசிப் போராட்டமான ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை’’ என்பதும்கூட ஜாதி ஒழிப்புப் போராட்டம்தான்.
சட்டப்படி ஜாதி இன்னும் ஒழிக்கப்படவில்லை என்றாலும், பெயருக்குப் பின் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்வதை வெட்கப்படும்படி செய்திருக்கிறோம்.
இந்த நிலை தந்தை பெரியார் பிறந்த – திராவிடர் கழகம் பாடுபடுகிற தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு – அதில் வெற்றிதான்!
ஆனாலும் ஜாதியின் ஒரு சிறிய செதில் இருக்கும் வரை நம் போராட்டம் தொடரும்.
94 வயதிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்தத் தடத்தில் உறுதியாக நிற்கிறார் –வெற்றி நமதே!
மறக்காதீர், நவம்பர் இருப்பத்தாறை – அது கொடுக்கும் செய்தியை!
