திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தடங்கள் அதன் போராட்டங்களால் உருவானவை. திராவிட இயக்கத் தீரர்களின் தியாகங்கள் வரலாற்றை நினைவூட்டும் தழும்புகளாக நிலைத்திருக்கின்றன. மொழிப் போர்க்களத்திலும், குலக்கல்வி எதிர்ப்பிலும், இடஒதுக்கீட்டுக்கானப் போராட்டத்திலும் ஒட்டுமொத்த இந்தியாவையும் தெற்குத் திசை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது திராவிட இயக்கம். வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்டுள்ள போராட்டங்களின் வரிசையில் தந்தை பெரியார் முன்னெடுத்த, ஜாதி யைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் மகத்தான ஒன்றாகும்.
போராட்டமும்– புதிய சட்டமும்!
ஜாதி ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் அமைந்திட தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் பெரியார். 1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் நாள் தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதியை ஆதரிக்கும் பிரிவுகள் நீடிப்பது கூடாது என்பதால், அவற்றை நீக்க வலியுறுத்தி அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். அவருடைய அறிவிப்புக்கு மாநாட்டில் திரண்டிருந்த தொண்டர்கள் ஆதரவளித்து முழக்கங்கள் எழுப்பினர். சட்டப் போராட்டத்தில் பங்கேற்க விருப்பமும் துணிவும் உள்ளவர்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளச் செய்தார் பெரியார். 1957 நவம்பர் 26 அன்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டம் நடத்தப்படும் என நாள் குறிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்திலும் பல பிரிவுகள் உள்ளன. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவுகளை எரித்தால் என்ன தண்டனை என்று அப்போதைய சட்டத்தில் இல்லை. சென்னை மாநிலத்தை பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. பச்சைத் தமிழர் எனக் காமராஜரை ஆதரித்து வந்தார் பெரியார். எனினும், பெரியார் முன்னெடுக்கும் அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தடுப்பதற்கும்-மீறினால் தண்டனை வழங்குவதற்கும் ஆலோசனைகள் நடத்தியது காங்கிரஸ் அரசு. இதனைத் தொடர்ந்து தேசிய அவமதிப்புத் தடைச் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்தது.
பெரியாருக்காக
அண்ணாவின் முழக்கம்!
அரசியலமைப்புச் சட்டத்தை எரித்தால் 3 ஆண்டு கள் கடுங்காவல் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம் நடைபெற்றது. அன்றைய நாளில் முதலமைச்சர் காமராஜர் அவையில் இல்லை. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க் களும், மற்ற கட்சி எம்.எல்.ஏ.க் களும் அந்த சட்டமுன்வடிவை ஆதரித்துப் பேசினர். 3 ஆண்டுகள் போதாது, இன்னும் பல ஆண்டுகள் தண்டனை தர வேண்டும் என வலி யுறுத்தியவர்களும் உண்டு. பெரியாருக்கும் அவரது இயக்கத்தினருக்கும் எதிராக காங்கிரஸ் அரசு கொண்டுவந்த கடுமையானத் தண்டனைச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்தான்.
பெரியாரிடமிருந்து 1949 இல் பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி, 1957 இல் முதன்முதலில் தேர்தல் களம் கண்டு 15 உறுப்பினர்க ளுடன் அண்ணாவும் முதன்முறையாக சட்டமன்றம் சென்றிருந்த நேரம் அது. பாதை வேறாக இருந்தாலும், திராவிடத்தின் இலக்கு ஒன்றுதான்-கொள்கையும் இலட்சியமும் அரசியல் காரணங்களுக்காக மாறுவ தில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தேசிய அவமதிப்புத் தடைச் சட்டத்தின் நோக்கத்தையும், அதன் தண்டனை முறையையும் கடுமையாக எதிர்த்துப் பேசினார் அண்ணா.
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதை பண்டிதர் நேருவும் பேசியிருப்பதை சுட்டிக்காட்டி, 1950ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அரசிய லமைப்புச் சட்டத்தில் பல முறை திருத்தங்கள் செய்திருக்கும்போது, அதில் உள்ள சில பிரிவுகளை எதிர்த்துக் கொளுத்துவது என்பது அவமதிப்பாகாது என்பதையும் விளக்கி, சட்டத்தைக் கைவிட வலி யுறுத்தினார் அண்ணா. எனினும், காங்கிரஸ் அரசு அந்த சட்டத்தை நிறைவேற்றியது.
தீ பரவியது!
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் குறித்து பல ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார் பெரியார். ஒவ்வொரு ஊரிலும் திராவிடர் கழகத்தினர் ஆண்களும் பெண்களுமாக வந்து, போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். சிறைத்தண்டனை குறித்து எவரும் அஞ்சவில்லை. போராட்ட முறைகளையும் பெரியார் அறிவித்தார். போராட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் வழக்காடக் கூடாது என்றும், வாக்குமூலத்தை மட்டும் படித்துவிட்டு, தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
1957 நவம்பர் 26ஆம் நாளன்று தமிழ்நாடு முழுவதும் (குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், திருச்சி, கோவை மாவட்டங்கள், அன்றைய வடஆற்காடு- தென்ஆற்காடு மாவட்டங்கள் ஆகிய வற்றில்) 10 ஆயிரம் பேருக்கு மேல் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சாதிப்பிரிவுகளைக் கொளுத்தினர். 4000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை ஒவ்வொருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டன. பெரியாரும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், போராட்டம் எழுச்சி யுடன் நடைபெற்றது. பெண்கள் கைக்குழந்தைகளுடன் கைதாகி, நீதிமன்றத்தில் வாக்குமூலத்தைப் படித்து சிறைத் தண்டனைப் பெற்றனர்.
கொடூர சிறைத் தண்டனைகள்!
அரசியலமைப்புச் சட்டத்தை எரித்துத் தண்டனைப் பெற்றவர்களை அரசியல் கைதிகளாக நடத்தாமல், குற்றவாளிகள் போல கடுமையானத் தண்ட னைக்குள்ளாக்கியது சிறை நிர்வாகம். கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் சிறை த்தண்டனைப் பெற்ற திராவிடர் கழகத்தின் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பல கடுமையானப் பணிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அன்றைய தஞ்சை மாவட்டத்தில் தோலி என்ற ஊரைச் சேர்ந்த பெரியார் தொண்டர் ஆர்.சுப்பிர மணியம். திருத்துறைப்பூண்டி தாலுகா திராவிடர் கழகத் தலைவராக இருந்தார். உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகில் தோலி ஆர்.சுப்பிரமணியமும் அவருடனான கருஞ்சட்டையினரும் அரசியலமைப்புச் சட்டத்தை எரித்துக் கைதானார்கள். அவர்களுடன் முத்துப்பேட்டை பகுதியில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களும் கைதாகி நாகப்பட்டினம் நீதி மன்றத்தில் வழக்கை எதிர்கொண்டனர்.
பெரியார் அறிவுறுத்தியபடி, சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது நியாயம்தான் என வாக்குமூலத்தைப் படித்து, தண்டனைக்குத் தயாரானார் தோலி ஆர்.சுப்பிரமணியம். அவருக்கு 10 மாத கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்ப ளித்தார் நாகை சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட். மற்றவர்களுக்கு 2 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வெறுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. கடுங்காவல் தண்டனை பெற்ற தோலி சுப்பிரமணியம் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் தஞ்சை ராஜகிரி தங்கராசு உள்ளிட்ட 150 கருஞ்சட்டையினர் அரசியலமைப்புச் சட்ட எரிப்புத் தண்டனைக் கைதிகளாக புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராளிகளை வாரம் ஒரு முறை சந்தித்து அவர்களுக்கு எண்ணெய், சீயக்காய், சோப்பு, பல்பொடி போன்றவற்றை வழங்குவது வழக்கம். பெரியாரும் சிறையில் இருந்ததால், அன்னை மணியம்மையாரும், சட்டக்கல்லூரி மாணவராக இருந்த ஆசிரியர் வீரமணி யும் இயக்கப் பணிகளைக் கவனித்ததுடன், சிறையில் இருந்த தொண்டர்களையும் சந்தித்து வந்தனர்.
புதுக்கோட்டை சிறையில் தோலி சுப்பிரமணியம், கணபதி, ராஜகிரி தங்கராசு ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்கள் தங்கள் உள்ளங்கைகளை மடக்கி வைத்தபடியே பேசிக் கொண்டிருந்தனர். ஆசிரியர் வீரமணி இதைக் கவனித்து என்னவென்று விசாரித்த போதுதான், கடுங்காவல் தண்டனைப் பெற்ற தோலி சுப்பிரமணியத்துக்கும், மற்றவர்களுக்கும் இரும்பு உலக்கையால் நெல் குத்தும் வேலையை சிறை அதிகாரிகள் கொடுத்திருந்தது தெரியவந்தது. இரும்பு உலக்கையைப் பிடித்து, பகல் நேரங்களில் நெல்லைக் குத்தி அரிசியாக்கும் கடுமையான வேலையைச் செய்ததால், அவர்களின் உள்ளங்கை புண்ணாகி விட்டது. இயக்கத்தை வழிநடத்தும் தலைவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டாம் என்பதால் தோலி சுப்பிரமணியம் மறைக்க முயன்றிருக்கிறார். ஆசிரியர் அறிந்து கண்டுபிடித்திருக்கிறார்.
உயிர் ஈந்த தியாகிகள்
உறுதி குலையாத தொண்டர்கள்!
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்றவர்கள் கடும் சித்திரவதைகளை எதிர்கொண்டனர். இந்த சித்திரவதைகளால் பட்டுக்கோட்டை இராம சாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி, லால்குடி நன்னி மங்கலம் கணேசன், வரகநேரி சின்னச்சாமி ஆகியோர் சிறையிலேயே பலியானார்கள். திராவிடர் கழகத்தினர் சிறையில் இறந்ததைக்கூட வெளியில் தெரிவிக்காமல் சிறை வளாகத்திலேயே அதிகாரிகள் புதைத்து விட்டனர். பின்னர், மணியம்மையார் அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தி, சிறைவாசல் வரை சென்று போராடி, இறந்தவர்களின் உடல்களைப் பெற்று, ஊர்வலமாக சுமந்து சென்று, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தார்.
வாளாடி பெரியசாமி என்பவர் 14 வயது சிறுவன் சிறையில் இருப்பதைப் பார்த்தார். அங்கு ஆய்வு செய்ய வந்த ஆளுநர் விஷ்ணுராம் மேதி. அரசியலமைப்புச் சட்டத்தை எரித்துவிட்டு சிறைப்பட்டிருப்பதை அறிந்தவர், “இனிமேல் இந்த மாதிரி செய்யமாட்டேன் என்று எழுதிக்கொடு. உன்னை விடுதலை செய்யச் சொல்கிறேன்” என்றார். அதற்கு அந்த சிறுவன், “இல்லை.. மறுபடியும் என் தலைவர் பெரியார் கிளர்ச்சி நடத்தினால், மீண்டும் கொளுத்திவிட்டு வருவேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
சிறையில் உயிர்நீத்த நன்னிமங்கலம் கணேசன் குடும்பத்தினருக்கு மணியம்மையார் ஆறுதல் சொன்னபோது, கணேசனின் வாழ்விணையர், “தலை வர் பெரியாரை அடுத்த கிளர்ச்சியை அறிவிக்கச் சொல்லுங்க. அதில் கலந்துகொள்ள என் மகன் தயாராக இருக்கி றான்’’ என்றார் கொள்கை உறுதிமிக்க அந்தப் பெண்மணி.
தோலி சுப்பிரமணியத்தின் ஊரில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக நடப்பதும், தமிழர் திருநாளாக அதை அவரே முன்னின்று சொந்தப் பணத்தை வழங்கிக் கொண்டாடுவதும் வழக்கமாக இருந்த நிலையில், அவர் அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறையில் இருந்ததால் 1958 ஆம் ஆண்டு ஜனவரியில், ஊரில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படவில்லை. மார்ச் மாதம் அவர் விடுதலையானபிறகு நடந்த பாராட்டு விழாதான் பொங்கல் போல கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் திராவிடர் கழகத்தி னர் சிறை மீண்டபோது பாராட்டு விழாக்கள் கோலா கலமாக நடைப்பெற்றன. ஆண்டுக்கணக்கில் தண்டனைப் பெற்று, விடுதலையான பிறகும், சிறைக் கொடுமைகளின் பின்விளைவுகளால் 15க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது.
சுதந்திர இந்தியாவில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி, ஜாதியற்ற சமுதாயம் என்ற உயர்ந்த இலட்சியம் ஒன்றுக்காகத் தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று, அரசியலமைப்புச் சட்டத்தை எரித்துக் கைதாகி, உயிரிழப்புக்கும் அஞ்சாமல் சிறை சென்று, கடுமையானத் தண்டனைகளை எதிர்கொண்ட தீரமிக்க அறவழிப் போராட்டம் வேறெதுவும் கிடையாது.
போராளி தோலி சுப்பிரமணியம் நூற்றாண்டு – தொடரும் கொள்கைப் பயணம்!
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராளி தோலி சுப்பிரமணியத்திற்கு இது நூற்றாண்டு. அவருடைய பெயரன் நந்தா ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறார். அங்கும் திராவிடத்தைப் பரப்புகிறார். புதுக்கோட்டை சிறையில் இருந்த கணபதியின் மகன்தான் தி.மு.க.வின் தஞ்சை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்-கும்பகோணம் தொகுதியின் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினரான சாக்கோட்டை க.அன்பழகன். பெரியாரின் தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணங்களில் மெய்க்காவலராக இருந்த தண்டவாளம் அரங்கராசுவின் மகன் அர.திருவிடம் தலைசிறந்த திராவிட இயக்கப் படைப்பாளியாக-பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர். திருவிடத்தின் மகன் செழியன் தி.மு. கழகப் பணிகளில் ஈடுபாடுள்ள வழக்குரைஞராக செயல்படுகிறார். இப்படி இன்னும் எண்ணற்றவர்கள் மூன்று தலைமுறைகளாகத் தங்களை திராவிட இயக்கத்திற்கு அர்ப்பணித்துப் பணியாற்றி வருகிறார்கள்.
70 ஆண்டுகளுக்கு முன் இதே (நவம்பர் 26) நாளில் நடந்த மாபெரும் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். இந்தியப் பாதுகாப்புச் சட்டம், மிசா, தடா, பொடா எனக் கடுமையான சட்டங்களை எதிர்கொண்டு, சிறை சென்று இயக்கத்தைக் காத்த வர்கள் நம் தலைவர்களும், தொண்டர்களும். சினிமா செட்டுகளில் மட்டுமே சிறையைப் பார்தது, பஞ்ச் டயலாக் பேசியவர்களின் கைகளில் சிக்கிச் சீரழியும் நாட்டை மீட்கும் வலிமையும், நம் திராவிட இயக்கத்திற்கே உரியது.
