சென்னை ஜூன் 07 “நம்முடைய தயவோடு தமிழ்நாட்டில் நடைபெறும் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் தலைமையில், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
விசுவாசத்தைப் பாராட்டிய ஸ்டாலின்
“75 ஆண்டு கால லட்சியப் பயணத்தை முடித்து பவள விழா கொண்டாடியுள்ள, 6 முறை தமிழ்நாட்டை ஆண்ட திமுகவிற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். பொதுவாக ஆளுங்கட்சியை நோக்கித்தான் பலரும் போவார்கள். ஆனால், இன்றைக்கு திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் வேளையில், பதவிக்காகவோ சொகுசுக்காகவோ வராமல் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் வந்துள்ளீர்கள்.
அதிமுகவில் விசுவாசமாக இருந்ததாக கஜேந்திரன் குறிப்பிட்டார். ஒரு தொண்டனோ, தலைவரோ தான் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அதை நான் பாராட்டுகிறேன். அதே விசுவாசத்துடன் அவர் திமுகவிலும் பணியாற்றுவார்.”
திமுகவின் வரலாற்றுப் பயணம்
திமுகவின் தேர்தல் வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், 1957-இல் 15 இடங்கள், 1962-ல் 50 இடங்கள் என வளர்ந்து 1967-இல் அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்ததைக் குறிப்பிட்டார். மேலும், 1975 நெருக்கடி நிலையை எதிர்த்ததால் 1976-இல் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டதையும், 1991-ல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததால் ஆட்சி கலைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். “வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். வெற்றியைக் கண்டு வெறி கொள்வதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடுவதும் இல்லை என்பதே திமுககாரன்” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
நம் தயவில்தான் ஆட்சி நடக்கிறது!
தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின்: “இன்றைக்கு நாம் ஆட்சிப் பொறுப்பை இழந்திருந்தாலும், எதிர்க்கட்சியாகப் பணியாற்றுகிறோம். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதே நம்முடைய தயவிலும், நம் கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவிலும் தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
அவர்கள் கூட்டணி குறித்துப் பேச வந்தபோது, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, அதன் மூலமாக பாஜக உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் நான் அவர்களை வழியனுப்பி வைத்தேன். எனவே, நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் உறுதி ஏற்போம்” என்று முழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
