சொல்ல முடியுமா?
சாமியைச் செருப்பாலடித்தேன் என்றால், இன்று நேற்றா அதைச் செய்கிறேன்? 40, 50 வருடமாக அதைச் செய்துதான் வருகிறேன்! இந்தத் தொண்டை ஏன் செய்து வருகிறேன்? விளம்பரம் பெறுவதற்கா? வருவாய் பெறுவதற்கா? நான் என்ன அன்னக்காவடியா? ஈரோடு வந்து பாருங்களேன் – பெரும் பகுதி கோயில்கள் எல்லாம் எங்கள் வீட்டு உபயமாகத்தானே இருக்கும். எங்கள் தகப்பனார் செய்யாத திருப்பணியா? அத்தகைய வீட்டில் பிறந்த நான் இன்றைக்குக் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் எந்தப் பற்றுக்கும் இலக்காகாமல் மனிதப் பற்றோடு சிந்தித்ததால்தானே! சிந்தித்ததால் தான் கடவுள் என்பது இல்லாத ஒன்று என்கிறோம். நாங்கள் சிந்திக்காமல், தான் போன போக்கில் இவ்வாறு கூறுகிறோம் என்று யாரானாலும் சொல்ல முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
