அழகிய பெரியவன்
அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். ‘நூல்களைப்’ பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை!
கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங் களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம்.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட் டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப் பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தா லேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும்.
பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு.
பிப்ரவரி, மார்ச் வரையிலும் கூட பரிந்துரை பணிகள் முடியவில்லை. ஏப்ரலில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். அப்படியானால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே பணத்தை எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும்.
பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் ‘பெயர்’களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது!
