இழிவான இச் செயலில் ஈடுபட்டிருப்போர் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும்!

- Advertisement -

 நூலகங்களுக்குப் புத்தகங்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடா? வெட்கம்! வெட்கம்!
நடுநிலையான சட்டப்படியான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு,

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

நூலகங்களுக்குப் புத்தகங்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடா? வெட்கம்! வெட்கம்! நடுநிலையான சட்டப்படியான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, இழிவான இச் செயலில் ஈடுபட்டிருப்போர் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

Contents

கோவையில் கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் உருவாக்கப்பட்ட “பெரியார் அறிவுலகம்” என்னும் அறிவார்ந்த அறிவியல் உலகம், நூலகத்தைப் பார்த்து, கொண்டாடி மகிழ்ந்திருந்த சூழலில், எதற்காக அந்தச் சிறப்பான அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதையே சிதைக்கும் விதமாகவும், கொச்சைப்படுத்தும் விதமாகவும் ஒரு பேரதிர்ச்சி தரும் செய்தி நேற்று (6.11.2026) வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையையும், அதனைத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளையும் மிகுந்த கவனத்துடன் படித்தோம்; பார்த்தோம். (தோழர் எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை தனியே வெளியிடப்பட்டுள்ளது.)

முழுக்க முழுக்க தவறான, பொய்யான தகவல்களைக் கொண்ட போலியான புத்தகங்கள்!

தமிழ்நாட்டின் அறிவு அடையாளமாக உரு வாக்கப்பட்டிருக்கும் “பெரியார் அறிவுலகம்” நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ் நூல்கள் பகுதியில், சில புத்தகங்கள் அகல்விளக்கு பதிப்பகம், ஃபீனிக்ஸ் பதிப்பகம் என்ற பெயரில் இயங்கும் பதிப்பகங்களின் பெயரில் முழுக்க முழுக்க தவறான, பொய்யான தகவல்களைக் கொண்ட போலியான புத்தகங்களாகச் சுமார் 1800-க்கும் மேல் இடம்பெற்றுள்ளன என்று சான்றுக்குச் சில படங்களுடன் எடுத்து எழுத்தா ளர் பெருமாள் முருகன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனங்கள், செய்திகள் வெளிவராது என்று கருதியிருக்க மாட்டார்களா?

தமிழ்ப் பதிப்புலகத்துக்கே இழிவைத் தேடித் தரும் இந்த மோசடி நம்மைக் கொதிப்படையச் செய்கிறது. போலியான பெயரில் எழுத்தாளர்கள், போலி முகவரி களுடன் பதிப்பகங்கள், செயற்கை நுண்ணறிவு கொண்டு நிரப்பப்பட்டுள்ள கட்டுரைகள் என எவ்வளவு துணிச்சல் இருந்திருந்தால் இத்தகைய அப்பட்டமான மோசடி நடைபெற்றிருக்கும்! இவையெல்லாம் நூலகத்தில் வைக்கப்படுமே, பலரும் படிப்பார்களே, அப்போது இதைப் பற்றி விமர்சனங்கள், செய்திகள் வெளிவராது என்று கருதியிருக்க மாட்டார்களா? அல்லது யார் இதையெல்லாம் படிக்கப் போகிறார்கள் என்று கருதினார்களா?

இப்படியொரு செய்தி வெளிவந்ததும், முறைப்படி இதற்கான அரசு ரீதியான நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, நேற்று (6.11.2026) காலை முதலே இதனை ‘‘அரசியல்’’ ஆக்கும் நடவடிக்கைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பது பெரும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். நேற்று காலையிலேயே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், உடனடியாக இதற்குத் திமுக தான் காரணம் என்று அரசியலாக்கத் தொடங்கினார். அடுத்தடுத்து, புதிய புதிய செய்திகளும், சான்றுகளும் வரவர, இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கின. ஊடகங்களும், சமூக ஊடகங்களும் விசாரணை (Media Trial) நடத்திக் கொண்டிருக்கின்றன. அதன்மூலம் அவதூறுகள் பெருகுமே தவிர, ஆக வேண்டிய காரியம் நடக்குமா?

 

வரலாற்றுப் புரட்டுக்கு இதோ ஒரு சான்று!

‘தமிழ்நாடு முதலமைச்சர்களின் வரலாறு’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு பக்கம், இப் புத்தகங்களில் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர்களாகப் பதவி வகிக்காதவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சர்களாக இருந்தவர்களின் பதவி வகித்த ஆண்டுகளும் தவறாக இடம்பெற்றுள்ளன. அதாவது முத்துவேலு சுப்பையா, மு.க.ராமசாமி, எம்.ஏ.திலகராஜேந்திரன் என்னும் பெயர்கள் முதலமைச்சர் பட்டியலில் உள்ளன. எம்.கருணாநிதி 1967-லும், ஸ்டாலின் 1969-1975,1989-1991 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்ததாகவும் அப்புத்தகத்தில் முழுக்கப் பிழையான, பொய்யான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

 

 

ஆட்சியில் இருப்பவர்கள் கையில் தானே நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரம் இருக்கிறது!

இது அரசியல் செய்ய வேண்டிய பிரச்சினையா? ஆட்சியில் இருப்பவர்கள் கையில் தானே நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதற்கு என்ன தாமதம்?

நாம் அறிக்கை எழுதும் இந்த நிமிடம் வரை சட்டப்படி இந்த முறைகேட்டை விசாரிக்க எந்தக் குழுவும், அரசு ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

பொத்தாம்பொதுவாக எல்லோரும் பேசி, அதன் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்வதற்குக் காலக் கெடு கொடுக்கப்படுகிறதா?

பதிப்பாளர்கள் வரவேற்றனர்!

நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் இருக்கும் பிரச்சினைகள் பல காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. 2011-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட புத்தகங்கள் குறித்து கடும் கண்டனங்களை அப்போதே பதிப்பாளர்கள் வெளியிட்டனர். பல முறை அரசுகளிடம் முறையிட்டும், முறையான நடவடிக்கைகள் இல்லை என்று பதிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருந்த நிலையில், கடந்த தி.மு.க. ஆட்சியில், 2024 ஆம் ஆண்டு வெளிப்படையான நூல் கொள்முதல் முறையை அறிமுகப்படுத்தினர். அய்.எஸ்.பி.என். பெற்றுள்ள நூல்களைத் தான் வாங்கமுடியும் என்பது உள்ளிட்ட அதன் நடைமுறைகள் கடுமையானவையாக இருந்தாலும், தரமானவையாக புத்தகங்கள் அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவையாக இருந்தன. இதன் மூலம் இதில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அமைந்ததைப் பதிப்பாளர்கள் வரவேற்றனர்.

அதே போல, சிறப்பு நூலகங்களுக்குப் புத்தகங்க ளைப் பரிந்துரை செய்வதற்காக, தனித்தனியே வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல்கள் எல்லாம் வெளிப்படையானவை. இத்தகைய குழு ஒன்றில் இடம்பெற்றிருந்தவர் தாம் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களும். தாங்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் அல்லாமல், வேறு புத்தகங்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி கொள்வதில் நியாயம் இருக்கிறது. அதே போல, எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களும், மூத்த பத்திரிகையாளர் விஜய்சங்கர் அவர்களும் தாங்கள் பரிந்துரைத்த புத்தகங்களைக் குறித்த செய்திகளைத் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியில் இருக்கும் அதிகாரிகள் யார்?

  1. வல்லுநர் குழு பரிந்துரைத்த புத்தகங்கள் அல்லா மல், புத்தகங்களைக் கொள்முதல் செய்தவர்கள் யார்?
  2. எந்தெந்த புத்தகங்கள் எப்போது கொள்முதல் செய்யப்பட்டன?

இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை அரசியல் கண்ணோடு பார்க்காமல், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

  1. இந்திரன் மாறினாலும், இந்திராணி மாறுவதில்லை என்பதைப் போல ஆட்சி மாறினாலும், இத்துறைகளில் இருக்கும் அதிகாரிகள் மட்டும் மாறுவதில்லை என்னும் நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் அதிகாரிகள் யார்?

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கும் காலத்தில் வாங்கப்பட்ட புத்தகங்கள் யாவை?

புத்தகப் பட்டியலைத் தேர்ந்தெடுக்கும் குழுவுக்கும் மேலாக, அதை இறுதி செய்யும் குழு, விலை உறுதி செய்யும் குழு, உயர்மட்டக் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் இதில் எப்படி அமைந்தன?

இந்தக் குறிப்பிட்ட புத்தகங்களைக் கொள்முதல் செய்யப் பரிந்துரைத்தவர்கள் யார்? அல்லது பரிந்து ரைகள் அல்லாமல் இந்தப் புத்தகங்களை வாங்கியோர் யார்?

ஏராளமான கேள்விகள் எழுகின்றன!

இது, இப்போது ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தில் மட்டும்தான் நடைபெற்றுள்ளதா?

தந்தை பெரியாரின் பெயரில் உயரிய நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய மோசடி நடைபெற்றுள்ளதா?

இன்னும் எந்தெந்த நூலகங்களுக்கு இத்தகைய புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன?

போலிப் புத்தகங்களுக்கு அய்.எஸ்.பி.என். எண்களை வாங்கிக் குவித்துள்ளார்கள் என்றால், முறைப்படி நாம் அய்.எஸ்.பி.என். வாங்க முயற்சிக்கும்போதெல்லாம் சந்திக்கும் இடையூறுகள், வரம்புகளையெல்லாம் தாண்டி, ஆயிரக் கணக்கில் எப்படி வாங்கினார்கள்?

இதன் வேர் எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

இது அரசியல் பிரச்சினையல்ல என்பதை அரசும், பிறரும் உணரவேண்டும்.

‘பெரியார் அறிவுலகம்’ குறித்தப் பெருமையான நிகழ்வு நடந்து கடந்த இரு நாட்களாக அதைக் குறித்துப் பேசப்பட்டுவந்த நிலையில், இந்த விளம்பரத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் இருந்த பார்ப்பன ஊடகங்கள், இதைக் கொண்டு பெரியார் பெயரைக் கொச்சைப்படுத்த முடியுமா என்று பார்க்கிறார்கள். அநீதிகளை வெளிக் கொண்டு வந்த பெரியார் பெயரில் அமைந்துள்ள அறிவுலகம் தான், இத்தகைய மோசடி குறித்தும் முதல் கவனம் குவிக்கக் காரணமாகியுள்ளது.

பெரியார் அறிவுலகத்தின் மீதான
எரிச்சலைக் காட்டலாமா?

எதைக் குறித்தும் உடனே  பதில் அளிக்காத, கருத்து சொல்லாத முதலமைச்சர், இந்தப் பிரச்சினை குறித்து நேற்று உடனடியாக கருத்துத் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதில் ஆட்சியாளருக்கான பொறுப்பு இன்றி, ‘பெரியார் அறிவுலகமா? ஊழல் உலகமா?’ என்று எழுதியிருப்பதன் பின்னணியில், பெரியார் அறிவுலகத்தின் மீதான எரிச்சலைக் காட்டலாமா?

இது எந்தச் சார்புகளுமற்று விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. முறைகேட்டில் ஈடுபட்டோர் யாராயினும், அவர்கள் உரிய குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கென்று உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டு, உரிய வல்லுநர்கள் குழுவும் அதில் இடம்பெறும்வகையில் ஆணையிட்டு, முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் அறிவுச் சமூகத்தின் மீது வீசப்பட்டுள்ள கறை துடைத்தெறியப்பட வேண்டும்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

7.11.2026        

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *