திருச்சி, நவ. 8- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் சிறப்புக் கருத்தரங்கம் 06.11.2026 அன்று மாலை 2 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இராட செந்தாமரை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு திராவிடர் கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். அவர் தமது உரையில் அரசியல் அமைப்பின் கடமைகளை நிறைவேற்றக்கூடிய நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக உரையாற்றினார்.
மேலும் அறிவியல் படிக்கக் கூடிய மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையோடு இருக் கிறார்களா என்றால் அது கேள்விக் குறியாகத்தான் இருக்கின்றது. உயிர் காக்கும் மருத்துவத்துறையில் கூட மூடநம்பிக்கைகள் அதிகம் காணப்படுகின்றன. குடும்பத்தில் பெண் குழந்தைகள் அதிகம் பிறந்தால் அதற்கு அறிவியலின்படி குரோமோசோம்களின் தன்மையில் ஆண்களே காரணம் என்று தெரிந்தாலும் பெண்களையே காரணம் காட்டும் சமூகம் இன்றும் இருக்கின்றது. அம்மை நோய்க்கு தடுப்பூசியைக் காட்டிலும் கடவுள் நம்பிக்கை கைகொடுக்கும் என்று நம்புவது இவை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்.
மருந்தியலோடு வாழ்வியலையும்…
அனைத்து மதங்களிலும் பண்டிகைகள் அதிகம் இருக்கின்றன. அவைகளை கொண்டாடுவதின் பின்புலத்தையும் வரலாற்றையும் எடுத்துப்பார்த்தால் அவைகள் அனைத்தும் புராணக் கதைகளாக அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒத்துவராதவைகளாக இருக்கின்றன. அதனால்தான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் பூலோக அறிவும், விஞ்ஞான அறிவும் இல்லாத அன்றைய காலகட்டத்தில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்களால்தான் இதுபோன்ற கதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மருந்தியல் படிக்கக்கூடிய மாணவர்கள் மருந்தியலோடு வாழ்வியலையும் நன்கு கற்று பகுத்தறிவான சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பெரியார் மருத்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள். பணித்தோழர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முன்னதாக பெரியார் மன்றச் செயலர் அ.ஷமீம் வரவேற்புரையாற்றினார். இணைச் செயலர் பேராசிரியர் எஸ். பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் சிறப்புக் கருத்தரங்கம்
Leave a Comment
