டாக்கா, நவ. 4- அண்டை நாடான வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஆடை தொழிலாளர்கள் தொடர்ந்து 2ஆம் நாளாக 2.11.2026 அன்று போராட்டத் தில் ஈடுபட்டனர்; அப்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது.
வங்கதேசத்தின் ஏற்றுமதி வருவாயில் 40 லட்சத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட ஆடை உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2ஆம் பெரிய ஆடை ஏற்றுமதி நாடாக வங்கதேசம் திகழ்வது குறிப் பிடத்தக்கது.
இந்நிலையில், வங்கதேசத்தில் அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வைச் சுட்டிக்காட்டி, தற்போது வழங்கப்பட்டுவரும் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமான 12,500 தாகாவை (ரூ.9,532), 30,000 தாகாவாக (ரூ.22,877) உயர்த்தக் கோரி ஆடை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து புதிய பரிந்துரைகளை வழங்குவதற்காக, சிறப்பு ஊதியக் குழுவை அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகும் தொழிலாளர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்கின்றனர். தலைநகர் டாக்கா, காஜிபூர், அஷுலியா உள்ளிட்ட முக்கியத் தொழிற்நகரங்களில் வாகனங்களை சேதப்படுத்தியும், சாலைகளை மறித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். வன்முறை காரணமாக பதற்றமான பகுதிகளில் உள்ள சுமார் 670 ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்போராட்டத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவான சில ஆலை உரிமையாளர்களே வன்முறையைத் தூண்டிவிடுவதாகவும் உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது குற்றஞ்சாட்டினார். இதனிடையே, தொடர்ந்து நடைபெறும் இந்த வன்முறையால் மேற்கத்திய நாடுகளின் வர்த்தக ஆர்டர்கள் ரத்து செய்யப்படலாம் என ஆடை ஏற்றுமதியாளர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
