தமிழ்நாடு அரசு பதிவுத் துறையைத் தனியார்மயமாக்குவதா?
அரசு, பொதுமக்கள், ஊழியர்கள், பதிவுத் துறையைச் சார்ந்து பணியாற்றுவோருக்கு எந்தப் பயனும் இல்லையே!
பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை அரசுக்குத் தரும் பதிவுத் துறையில் தனியார் பெருநிறுவனங்கள் ஏன்?
தமிழ்நாடு அரசு பதிவுத் துறையைத் தனியார்மய மாக்குவதா? அரசு, பொதுமக்கள், ஊழியர்கள், பதிவுத் துறையைச் சார்ந்து பணியாற்றுவோருக்கு எந்தப் பயனும் இல்லையே! பல்லாயிரம் கோடி ரூபாய் வரு வாயை அரசுக்குத் தரும் பதிவுத் துறையில் தனியார் பெருநிறு வனங்கள் ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை என்பது அரசுக்கு ஆண்டுதோறும் மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருகிற துறையாகும். கடந்த 2025-2026 நிதியாண்டில் மட்டும் ரூ.25,546 கோடிகளுக்கு மேல் தமிழ்நாடு அரசுக்கு வருவாயை ஈட்டித் தந்துள்ளது. ஜிஎஸ்டி முறை அமலான பின்னர் மாநில அரசின் வரி அதிகாரங்களுக்கு உட்பட்டு இருக்கிற எஞ்சிய இனங்களில் மிக முக்கியமானது பதிவுத் துறை மூலம் கிடைக்கும் வருவாய்.
கண்டனத்துக்குரியதாகும்!
அத் துறையில் தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்துவதற்கான பணிகளைத் த.வெ.க. அரசு தொடங்கியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பத்திரப் பதிவுத் துறையை மறைமுகமாகத் தனியார் மயமாக்கும் இந்த ஏற்பாடு கண்டனத்துக்குரியதாகும்.
சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரியவருகிறது!
அண்மையில், மாதிரிப் பதிவு மய்யங்களை நடத்து வதற்குத் தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று டெண்டர் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அம்பத்தூர், திருவான்மியூர், தியாகராய நகர், செங்கல்பட்டு, கோவை ஆகிய 5 இடங்களில் சோதனை முயற்சியாக முதற்கட்டமாகவும், மேலும் 20 இடங்களில் இரண்டாம் கட்டமாகவும் தனியார் பத்திரப் பதிவு மய்யங்கள் அமைக்க அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதாகவும் தெரிகிறது. முதலில் அய்ந்தாண்டுகள் சேவை வழங்கவும், பிறகு இரண்டாண்டுகள் நீட்டிக்கப்படவுமான வாய்ப்புடன் பதிவுத் துறையையே தனியார் மயமாக்குவதற்கான தொடக்கமே இது என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரியவருகிறது.

தமிழ்நாடு அரசின் பதிவுத் துறையைத் தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன? இதனால், பெரும் பெரும் கார்ப்பரேட் தனியார் நிறுவனங்கள் பயன்பெறுமே தவிர, அரசுக்கோ, பொதுமக்களுக்கோ, ஊழியர்களுக்கோ பயன் உண்டா? நியமனங்களில் சமூக நீதி, இட ஒதுக்கீடு இருக்காதே!
எந்தவொரு துறையையும் நவீனமயமாக்குவதும், கணினிமயமாக்குவதும், அதன் செயல்பாடுகளை தொழில்நுட்ப ரீதியாக எளிமையாக்குவதும் வரவேற் கத்தக்கது. முன்பே, அத்தகைய பணிகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்குத் தனியாரி டம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொரு பதிவுக்கும், முத்திரைத் தாள் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டணங்களைத் தவிர, தனியாக, இப் பதிவுகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்குச் சேவைக் கட்டணம் கொடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் மீது சுமத்தப்பட்டும் கூடுதல் சுமை அல்லவா? அதிலும், சாதாரண சேவைக் கட்டணம் ரு.2090-இல் தொடங்கி, தட்கல் பிரீமியம் சேவைக் கட்டணம் – ரூ.10,630 வரை தனியார் நிறுவனங்கள் வசூலிக்கலாமாம்.
தமிழ்நாடு முழுவதும் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 35 லட்சம் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதிவுக் கட்டணம் ரூ.2000 முதல் ரூ.10,000 வரை – சராசரியாக ரூ.5,000 என்று கணக்கிட்டால் கூட, ரூ.1,750 கோடியிலிருந்து ரூ.2,000 கோடி வரை தனியார் நிறுவனத்துக்குச் செல்லும். அதில் 25 முதல் 35 சதவிகிதம் மட்டுமே அரசுக்கு அத் தனியார் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எஞ்சிய சுமார் 1,300 கோடி ரூபாயை மக்களிடமிருந்து பறித்து, தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன? இந்த வருவாயைக் கணக்கிட்டு, எந்தப் புதிய வசதியையும் தமிழ்நாடு அரசே செய்து விடலாமே! சார் பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கையை, பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமே! அதன் பலனாக நேரடியாக வேலைவாய்ப்பைக் கூட உருவாக்கலாமே!
அது மட்டுமல்லாமல், கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட 3.0 என்ற முறையிலான ‘நேரடியாக வரவேண்டிய அவசியம் இல்லாமல் பதிவு செய்யும் முறை’ என்பது பல்வேறு சிக்கல்களுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும், மேலும் பல சிக்கல்கள் இருப்பது குறித்து அன்றைய பதிவுத் துறை அமைச்சரிடமே முறையிடப்பட்டதால், அதன் ஆபத்தைப் புரிந்துகொண்டு அத் திட்டத்தை உடன டியாகச் செயல்படுத்துவதிலிருந்து, பிரச்சினைகளைச் சரி செய்வதற்காகத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது தி.மு.க. அரசு.
மக்களின் சொத்துப் பாதுகாப்புக்கே ஆபத்து எழும்!
ஆனால், பிரச்சினைகள் குறித்து கவலை கொள்ளாமல், அதை இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது த.வெ.க. அரசு. ஆள் இல்லாமல் பதிவேற்றும் முறையில் ஏராள மான சிக்கல்கள் எழ வாய்ப்பிருப்பதைக் குறித்து பத்திரப் பதிவு ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் உள்ளிட்டோர் விரிவாக பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிப் போராடி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, இதன் மூலம் மக்களின் சொத்துப் பாதுகாப்புக்கே ஆபத்து எழும் என்று அச்சம் தோன்றியுள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்று எழுந்துள்ள கேள்விக்கு, இதுவரை அரசிடமிருந்து பொறுப்பான பதில் எதுவும் வரவில்லை. சுயதொழிலாகச் செய்துவரும் பல்லாயிரம் பேரின் வாழ்க்கை இப்போது ஏதோ ஒரு தனியார் கார்ப்ப ரேட் நிறுவனத்தின் கைகளுக்குப் போகப் போகிறது.
ஆங்கிலம் அறியாத மக்களுக்கான
அநீதி அல்லவா?
இன்னொருபுறம், சொத்துப் பதிவின் போது, சொத்து விவரங்களை (Schedule) ஆங்கிலத்தில் தான் பதிவு செய்ய முடிகிறது என்று பல சார் பதிவாளர் அலுவலகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் செய்யுங்கள் என்று கேட்டதற்கு, ‘அதற்கு வாய்ப்பில்லை, ஆங்கிலத்தில் மட்டும் தான் பதிவு செய்ய முடிகிறது’ என்று அலுவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது.
உயர்நீதிமன்ற நடைமுறைகளே தமிழில் வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டுமே சொத்து விவரங்களைப் பதிவு செய்ய முடியும் என்று தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி நெருக்கடி தருவது, ஆங்கிலம் அறியாத மக்களுக்கான அநீதி அல்லவா?
புதிய தொழில்நுட்பங்களை, புதிய முறைகளைக் கண்ணை மூடிக் கொண்டு நாம் எதிர்ப்பவர்கள் அல்லர். ஆனால், அதனால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பி ருக்கிறது என்று சந்தேகம் எழும்போது, அதைச் சரி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
அத்துடன், வருவாய் தரக் கூடிய அனைத்துத் துறைகளையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, மக்களையும், அரசையும் ஒரு சேர நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் மூலம் பயன் அடையப்போவது யார் என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் வலியுறுத்துகிறோம்!
பதிவுத் துறையில் தனியார் மயம் என்பதும், ஆங்கில மயம் என்பதும் அவசியமற்றது; முறைகேடுகளுக்கு வழியமைக்கக் கூடியது; கண்டிக்கத்தக்கது; பொது மக்களின் நலன்களைப் பலி கொடுப்பது. இதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
4.11.2026
