வரலாற்றைத் திரிக்கவே சரஸ்வதி நதிக் கதைகள் – எச்சரிக்கை!

3 Min Read
- Advertisement -

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்னும் பெயர்களில் நடக்கும் அறிவு, பொருள் கேடுகள் ஒரு புறம் என்றால், அதன் அடுத்த கட்டமாக, பண்பாட்டுப் படையெடுப் புக்கான வழியாக இவ் விழாக்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன ஆர்.எஸ்.எஸ்.சும் சங்பரிவாரும்!

இவ்வாண்டு சரஸ்வதி பூஜை தொடர்பாக நாளேடுகளில் வந்த கட்டுரைகளில், வழக்கமான சரஸ்வதி கடவுள் பற்றிய செய்திகளுடன், சரஸ்வதி நதி பற்றிய கட்டுக் கதைகளும் ஏராளமாக வெளியிடப்பட்டிருப்பது எதார்த்தமானதல்ல… இயல்பானதுமல்ல! சரஸ்வதி என்றொரு நதி ஓடியதாக மக்கள் மனதில் நிறுவும் வேலையே இது!

சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்புக்கு முன்னர், இந்தியா என்பது வேத நாகரிகத்திலிருந்து தொடங்குகிறது என்று எந்த தொல்லியல் சான்றுகளுமின்றி, இட்டுக் கட்டி எழுதப்பட்ட வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களைக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கட்டமைத்தனர். ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹரப்பாவிலும், மொஹஞ்சதாராவிலும், ஆதிச்சநல்லூரிலும் தொடங்கிய அகழாய்வுகள் இந்தியாவின் வரலாற்றை வேறு விதமாக அடையாளம் காட்டத் தொடங்கின. காய்தல், உவத்தலின்றி ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு, மொழி ஆராய்ச்சி, வரலாற்றைத் தேடுதல், தொல்லியல் ஆய்வுகள், மத வழிபாட்டு இடங்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் ஆகியவற்றின் மூலம்தான் இந்திய வரலாற்றை மீட்டெடுத்தனர். இந்தியாவில் இருந்த அரசுகளுக்குள் நடந்த போர்களால், காலங்காலமாக அரண்மனைகளும், கோயில்கள் போன்ற கட்டடங்களும் சிதைக்கப்பட்டே வந்துள்ளன. சைவம், வைணவம் போன்றவை அரசு மதங்களான காலகட்டத்தில் பவுத்தம், சமணம் உள்ளிட்ட மதங்கள் அழிக்கப்பட்டதுடன், அவற்றின் தடங்களும் மறைக்கப்பட்டன; பல வழிபாட்டுத் தலங்களும், சிற்பங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, வடிவங்கள் மறைக்கப்பட்டன.

புத்தரின் சிந்தனைகளை உலகெங்கும் கொண்டு சேர்த்த அசோக மாமன்னரின் வரலாறே 19-ஆம் நூற்றாண்டு வரை மறைக்கப்பட்டிருந்தது. பிராமி எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியபோதுதான், அசோகர் என்றொருவர் ஆட்சி செய்த தரவுகளே கிடைக்கத் தொடங்கின. 1830-களில் நார்வே நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் லாசென் என்பவரும், 1837-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பிரின்செப் என்பவரும் பிராமியை வாசிக்கத் தொடங்கி, இந்தியாவெங்கும் உள்ள கல்வெட்டுகளின் மூலம் அசோகரின் வரலாற்றை மீட்டெடுத்தனர். இலங்கையின் வரலாறான மகாவம்சமும், அசோகவதனம் போன்ற பவுத்த நூல்களும்தான் இதற்கு உதவின. இவற்றையெல்லாம் மறைத்துத்தான், ராமன், கிருஷ்ணன், சகுனி, பலராமன் என்று கதை கட்டி, அதையே வரலாறாக மாற்றி வைத்திருந்தனர் ஆரியர்கள்.

பல நூற்றாண்டுகளாக ‘அரும்பாடுபட்டு’ மறைத்து வைத்திருந்த வரலாறு, அவர்களின் கட்டுப்பாட்டை மீறி வெளிவருவது, தங்களின் இருப்புக்கு ஆபத்து என்று ஆரியம் கருதுகிறது. மீண்டும் அதே போன்ற கதை கட்டுதலையும், ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு வரலாற்றைத் திரிப்பதையும் வெகு வேகமாக இப்போது செய்துகொண்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்துக்கான தொல்லியல் சான்றுகளும், அவற்றிலிருந்து கிடைக்கும் வரலாறும் தெளிவாகத் தெற்கு நோக்கிக் கைகாட்டும் வேளையில், அதைச் சரஸ்வதி நாகரிகம் என்று திரிப்பதில் மும்முரமாக இருக்கிறது பா.ஜ.க! கடந்த சில ஆண்டுகளாகவே ‘சிந்து – சரஸ்வதி நாகரிகம்’ என்று பேசத் தொடங்கியவர்கள், ‘இப்போது சரஸ்வதி – சிந்து நாகரிகம்’ என்று சரஸ்வதியை முதலிடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அடுத்து சிந்துவை அழித்துவிடுவார்கள்.

“ராக்கிகடி: சரஸ்வதி – சிந்து நாகரிகத்தின் பிறப்பிடம்” என்ற பெயரில் அரியானா மாநிலத்தின் தொல்லியல் துறை மாநாடு வரும் அக்டோபர் 22 முதல் 24-ஆம் தேதி வரை மாநாடு நடத்துகிறது. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், படிப்படியாக, பேராசிரியர்கள், ஆய்வாளர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பேசவைத்துவிடலாம் என்று கருதுகிறது ஆர்.எஸ்.எஸ்! ஆனால், இதை மக்கள் மத்தியில் எப்படி நம்ப வைப்பது? அதற்குத் தான் சரஸ்வதி பூஜையைப் பயன்படுத்துகிறது ஆரியம். ஊடகங்களில் சரஸ்வதி நதிக் கதைகள் உலவவிடப்படுகின்றன. இனமலர்கள் மட்டுமல்ல, நம்மவர்களின் ஏடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல!  அதற்கு அறிவியல் தரவுகள் என்ன இருக்கின்றன என்று கேட்போமே! அதற்காகவே சில வார்த்தைகளை வைத்திருக்கிறார்கள். ‘சூட்சுமமாய் சொன்னார்கள், பூடகமாய்ப் பேசினார்கள், தத்துவமாய் எழுதினார்கள், ஞானமரபு, நதியையும் பேச்சையும், வாக்காற்றலையும் ஒப்பிட்டு எழுதினார்கள், நதியாய் தோன்றி சிந்தனை ஒளியாய் மலர்ந்த சரஸ்வதி’ என்றெல்லாம் உண்மைக்கு மாறான ஒன்றைப் பற்றி எழுதும்போது அதற்கு பொன்னால் பூண் அணிவிப்பார்கள்.

இந்த ஏமாற்று வித்தைகளை மதத்துடன் தொடர்பு படுத்துவது வெகுமக்களை ஏமாற்றுவதற்காகவே! அதன் உண்மையான நோக்கங்கள் வரலாற்று மறைப்பு – திரிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, ஆரிய ஆதிக்கம் ஆகியவையே என்பதை வெகுமக்களிடம் கொண்டு செல்வதும் – இந்தப் பண்டிகைகளைத் தோலுரிப்பதும் முக்கியமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *