மும்மொழிக்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்பதை பிரகடனப்படுத்துவோம்!

தமிழ்நாடு அரசின் முக்கிய கொள்கை முடிவாக சட்டமன்றத்தில் மூன்று முக்கிய கொள்கை திட்ட மாற்றங்களை அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றினார்.

  1. ‘சுயமரியாதைத் திருமணங்கள்’ சட்டப்பூர்வமாகச் செல்லும் – முன்பு நடந்தவை உட்பட என்ற சட்டத் திருத்தம்.
  2. சென்னை மாநிலம் (Madras State) என்ற பெயரை மாற்றி ‘தமிழ்நாடு’ என்று அழைத்தல்.
  3. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளே பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழிகள். ஹிந்தித் திணிப்புக்கு என்றும் இடந்தராமை என்பதை வலியுறுத்தி ‘தமிழ் வாழ்க’ என்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கத்தோடு நிறைவேற்றப்பட்டது!

பிறகு தி.மு.க. ஆட்சி மாறி அ.தி.மு.க. ஆட்சி வந்தபோதும் இதே இருமொழிக் கொள்கைதான் நடைமுறையிலிருந்தது.

இடையில் இரண்டு, மூன்று முறை (டில்லி) குடியரசுத் தலைவர் ஆட்சி, ஆளுநர் ஆட்சிகள் வந்த நிலையிலும்கூட, இந்த நிலைப்பாடுதான் தொடர்ந்ததே தவிர, ‘மும்மொழித் திட்டம்’ என்ற சாக்கில் ஹிந்தி, பிறகு சமஸ்கிருதம் என்ற ஆரிய மொழி கலாச்சாரத் திணிப்புக்கு இடந்தராத நிலைதான் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல் – 58 ஆண்டுகளாக – தொடர்ந்து வருகிறது.

இதனை எப்படியாவது மாற்றி ஹிந்தியை (மறைமுக மாகவாவது) தமிழ்நாட்டில் இளம் பிள்ளைகளுக்குத் திணிக்க வேண்டும் என்பதற்கு நாளும் முயற்சி செய்து ‘சி.பி.எஸ்.இ.’ என்ற ஒன்றிய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். கொடுங்கரம் நீளுகிறது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளிலும் அதைச் செய்ய
‘பி.எம்.சிறீ திட்டத்தைஏற்றால்தான் ‘சமக்ர சிக்‌ஷா’ என்ற கல்வித் திட்டத்துக்குத் தர வேண்டிய நிதியை (2333 கோடி ரூபாய்) ‘‘மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான் தான் தருவோம்’’ என்று அடாவடி அரசியல் நிலைப்பாட்டாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்பவர் அதிகார ஆணவச் செருக்குடன் கூறிய நிலையில், முந்தைய  ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ‘‘பத்தாயிரம் கோடி ரூபாயை தருகிறேன் என்று ஆசை காட்டி அழைத்தாலும், ஒருபோதும் ஹிந்தித் திணிப்புக்கான மும்மொழித் திட்டத்தை எங்களது அரசு ஏற்கவே ஏற்காது’’ என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களது ஆட்சியின்  நிலைப்பாட்டைப் பற்றி அவர் திட்டவட்டமாக அறிவிப்பது முக்கியம்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர்  ராஜ்மோகன் அவர்கள் முதல் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘இரு மொழிக் கொள்கை அதாவது, ‘அவரவரின் தாய்மொழி’ மற்றும் ‘உலகத்துடன் உறவாட ஆங்கிலம்’ என்பதுதான் த.வெ.க.வின் கொள்கை.’’ என்றார் – அதை வரவேற்கிறோம்.

ஆனால், ‘‘சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பி.எம்.சிறீ. திட்டம் குறித்து அடுத்தடுத்து விவாதித்து முடிவு எடுப்போம்’’ என்று கூறியிருப்பதில் கொள்கைத் தெளிவற்ற தொனி தெரிகிறது! அதுபற்றி திட்டவட்டமாக  அறிவிப்பது அவசர அவசியம்.

‘முதலில் ஒரு சிறு ஓட்டையைப் போட அனுமதித்து விட்டால், பிறகு நாளா வட்டத்தில் ஒரு யானையையே நுழைய விடும் அளவுக்கு அதைப் பெரிதாக்க ஒன்றிய
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு தயாராக இருக்கிறது’ என்பதை உணர்ந்து, விரைந்து தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

‘ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு எதிரான மொழிப் போர்’   என்பது நூறாண்டு வரலாறு கொண்டது என்பதை மறந்து விடக் கூடாது.

1926இல் தான் முதன் முதலில் ‘ஹிந்தியின் ரகசியம்’ என்ற அறிக்கைமூலம் ‘குடிஅரசு’ ஏட்டில் தந்தை பெரியார் ‘முதல் எச்சரிக்கை மணி’யை அடித்து தமிழ்நாட்டை எழுப்பினார் என்ற வரலாறு அறிய வேண்டிய முக்கிய வரலாறு ஆகும். 1937–1938 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக்கூட அக்கட்டுரையே முன்னோட்டமாகும் என்பதை இன்றைய இளையோர் அறிந்து கொள்ளுதல் முக்கியமாகும்!

பல மொழிகளைத் தாமே விரும்பிக்  தாமே விரும்பிக் கற்பது வேறு; வலுக்கட்டாயமாக ஒரு மொழியை ஆதிக்கச் சின்னமாக திணிப்பது வேறு – சரியான புரிதல் தேவை?

 

 

(கி. வீரமணி)

ஆசிரியர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *