93 ஆண்டுகள் ஒருவர் வாழ்வது பெரிதல்ல; ஆமைகள் கூட 150 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றன. இன்றைய மருத்துவ வசதியால் மனிதனின் வாழ்நாள் காலம் அதிகரித்து விட்டது.
9 வயதில் ஒரு குழந்தை மேடையில் பேசுவது பெரிதல்ல; அதற்கும் குறைவான வயதில் பேசியவர்கள் கூட உண்டு. ஆனால், அது பலருடைய வாழ்வில் தொடர்வ தில்லை.
தொடர்ந்து மேடைப் பேச்சாளராக இருப்பதும் பெரிதல்ல; மூடநம்பிக்கைகளையும், வெற்றுப் பேச்சுகளையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் தோரணமாக்கிப் பிழைப்பு நடத்துவோர் உண்டு.
பள்ளி மாணவப் பருவத்தில் ஏற்ற கொள்கையை, எழுதிக் கொடுத்த பேச்சைப் பேசத் தொடங்கியவர் தான். அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே சொந்தமாகப் பேசத் தொடங்கினார்; கூட்டத்தைக் கேட்போரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.
11 வயதில் திருமண நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார். 12 வயதில் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். 13 வயதில் மாநாட்டுக் கொடி ஏற்றிவைத்துப் பேசினார். 14 வயதில் பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார். மாணவப் பருவத்திலேயே “முழக்கம்”, “புதுமை” என்று இரண்டு கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்தினார்.
பேச்சாளராகத் தொடங்கிய பொதுவாழ்க்கை பிரச்சாரகர், மாணவர் கழகச் செயலாளர், எழுத்தாளர், வழக்குரைஞர், திராவிடர் கழகத்தின் கூட்டுச் செயலாளர், கழகத்தின் பொதுச் செயலாளர், ‘விடுதலை’ நாளேட்டின் பொறுப்பாசிரியர், ஆசிரியர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர், பெரியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றின் நிறுவனர் – கல்வியாளர், திராவிடர் கழகத் தலைவர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர், இந்தியா முழுமைக்குமான சமூகநீதிப் பாதுகாவலர், தகைசால் தமிழர் என்று 83 ஆண்டுகளில் அவர் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளையும், வரித்துக் கொண்ட கொள்கை யின் வெற்றிகளையும் திறம்பட செய்து வென்று காட்டும் விற்பன்னர்! அவர் தான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
9 வயதில் சிறுவன் வீரமணி என்று மேசையில் ஏற்றி நிறுத்திப் பேச வைத்தவர்களே, பின்னாளில் ‘எங்கள் தலைவர் இவர்’ என்று ஏற்றுப் பெருமை கொண்டனர். 83 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேசுகிறார். 93 வயதிலும் அன்றாடம் எழுதுகிறார்; தொடர்ந்து பயணிக்கிறார்; போராட்டங்களில் ஈடுபடுகிறார்; கைது, சிறை, அடக்கு முறை என்று எதைக் கண்டும் அஞ்சாமல் ஆயிரம் இளைஞர்கள் பட்டியலைக் கேட்டால், ‘அதில் நான் தான் முதல் தொண்டன்’ என்று முன்னிற்கிறார்.
பெரியாரின் கருத்துகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கப் “பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்” என்று திட்டமிட்டுக் களம் அமைக்கிறார். பெரியாரைச் சுமந்துகொண்டு கண்டங்கள் தாண்டிப் பயணிக்கிறார். பல மொழிகளுக்கும் பெரியாரைக் கொண்டு சேர்க்கிறார். சுயமரியாதை என்னும் பெரியாரின் உயிர்நாடிக் கொள்கை உலக மானுடத்துக்கே உரியது என்பதை எங்கும் நிறுவுகிறார்.
வாரத்துக்கு இரு நாள் ஓய்வு; ஆண்டுக்கு ஒரு சுற்றுலா; நாளொன்றுக்கு எட்டு மணி நேர உழைப்பு; உரிய நேரத்தில் பத்திய உணவு, உறக்கம் என்று அழகிய நீரோடையாக அமையவில்லை அவர் வாழ்வு! எல்லா நாளும் எழுத்து, நாளொன்றுக்கு மூன்று, நான்கு நிகழ்ச்சிகள், தொடர்ந்து வாசிப்பு – அதுவும் பொழுதுபோக்குக்கு அல்ல – மானுட சமூகத்தின் மேன்மைக்கு, அன்றாட நிகழ்வுகளையும், அரசியலையும் பெரியாரியக் கண்ணாடியுடன் நுணுக்கமாகக் கண்காணித்தல், வடக்கும் தெற்குமாக நீளும் பயணம், ஆழ்ந்த உறக்கம் கொள்ள முடியாது – நடு இரவில் தொடங்கி, அதிகாலை அவசரமாக முடியும் தூக்கம், பெட்ரோல் பங்குகளில் வாகனத்தை நிறுத்தி, வண்டிக்குள் இருந்தபடியே உட்கொள்ளும் உணவு, தொண்டர்கள் எதைக் கொடுத்து அனுப்பினார்களோ அதுதான் சாப்பாடு, அதிகாலை முதல், நள்ளிரவு தாண்டியும் தொடரும் கூட்டங்கள், மாநாடுகள், போராட்டக் களங்கள் என்று காட்டாற்றைப் போல காடு மேடுகளைத் தாண்டும் வாழ்க்கை!
60 வயதில் ஓய்வு கொண்டவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்திப் பாராட்டுகிறார்; ஆனால் இவர் ஓய்வு எடுத்தாரில்லை! சூரிய மின்னாற்றல் பெறும் மாற்று எரிசக்தி நிலையத்தை தொடங்கி வைக்கிறார்; ஆனால், மாற்றுச் சொல்ல முடியாத சூரியனாய் இவரே ஆற்றலை உமிழ்கிறார். காலை – தஞ்சையில்; மதியம் திருச்சியில், மாலை சின்னாளப்பட்டியில், இரவு குற்றாலத்தில் என்று கடமையாற்றும் இவருக்குப் பயந்து பத்து வாகனங்கள் ஓய்ந்து விட்டன. உடன் ஓடி வந்தவர்கள் பலரும் கூட ஓய்ந்துவிட்டனர்.
“கடிகாரமும் ஓடத் தவறிடும் – இவர்
கால்களோ என்றுமே ஓடிடும்” என்று எழுதப்பட்ட பாடலுக்குக் கூட வயது 45 ஆகிவிட்டது! அவர் கால்கள் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அவர் எழுத்தோட்டம், பேச்சோட்டம், உயிரோட்டம் தான் – சமூகநீதியின் மூச்சோட்டம்! நீள்க நீள்க எம் தலைவ!
1943 ஜூன் 27 கடலூரில் முதல் கூட்டத்தில் ஆற்றத் தொடங்கிய உரையிலிருந்து தொடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் பொதுவாழ்க்கைக்கு இன்று 84 அகவை தொடங்குகிறது!
92 ஆண்டுப் பத்திரிகையின் 64 ஆண்டு ஆசிரியர் என்பதும், 93 ஆண்டுகளில் 84 ஆண்டுகள் பொதுவாழ்வு என்பதும் எவருக்கும் இல்லாத சிறப்பு – எவராலும் வெல்ல முடியாத சாதனை! இன்னுமொன்று பாக்கியிருக்கிறது – பொது வாழ்விலும் தாண்டுக நூற்றாண்டை! அதுவும் உங்களால் தான் முடியும்! உங்களால் முடியாதது வேறு யாரால் முடியும்?
