ஒரு கருத்தோ, எழுத்தோ, பேச்சோ, படைப்போ அல்லது மனித உறவுகளோ நம் மனதைத் தொட்டு நம்முடைய உணர்வுகளோடு தொடர்பை ஏற்படுத்துவது தான் ‘emotional connect’ எனப்படும் உணர்வுப்பூர்வமான இணைப்பு. மனிதர்களை இணைப்பது எப்போதும் வார்த்தைகள் மட்டுமல்ல. சில நேரங்களில் ஒரு பார்வை, ஒரு மவுனம், ஒரு அக்கறை, சமயத்தில் கண்ணீர், ஒரு புன்னகை போன்றவை வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆயிரம் உணர்வுகளைச் சொல்லிவிடுகின்றன.
ஒருவரின் மனதில் நாம் இடம்பிடிப்பதும், நம் மனதில் ஒருவர் ஆழமாகப் பதிந்திருப்பதும் வெறும் பழக்கத்தால் உருவாவதில்லை. அதன் பின்னால் ஓர் உணர்வுப்பூர்வமான இணைப்பு இருக்கிறது. ஒருவரை நாம் புரிந்துகொள்வது என்பது அவர் பேசும் வார்த்தைகளைப் புரிந்துகொள்வது என்றில்லாமல், அவர் சொல்லாமல் மறைக்கும் வலியையும் புரிந்துகொள்வது; வெளிப்படுத்தாமல் வைத்திருக்கும் பயத்தைப் புரிந்துகொள்வது; அதேபோலச் சிரிப்புக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கண்ணீரையும் உணர்வதுதான் உண்மையான உணர்வுப்பூர்வமான இணைப்பு.
இந்த எமோஷனல் கனெக்ட் என்பது உணர்ச்சி வசப்படுத்துவது அன்று. அது ‘நான் உன்னைப் புரிந்து கொள்கிறேன், உன் உணர்வு எனக்கு நன்றாகப் புரிகிறது’ என்று சொல்லாமல் சொல்லி நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு பாலம் எனலாம். இந்தப் பாலம் இல்லாத இடத்தில், உறவுகள் இருக்கலாம்; ஆனால் நெருக்கம் இருக்காது. உரையாடல்கள் இருக்கலாம்; ஆனால் புரிதல் இருக்காது. பெரிய நட்பு வட்டமாகக்கூட இருக்கலாம்; ஆனால் தனிமை நீங்காது. மனிதர்களை இணைக்கும் இந்த உணர்வுப்பூர்வமான ஓர் உறவு எப்படி உருவாகிறது, அது ஏன் சிலரிடம் மட்டும் இயல்பாக உருவாகிறது, சிலரிடம் உருவாகாமல் போக என்ன காரணம், ஆண் பெண் இருவரில் யாரிடம் அதிக அளவில் இந்த உணர்வுப்பூர்வமான இணைப்பு காணப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒருவர் நம்மைக் கவனமாகக் கேட்டு, புரிந்து கொண்டு மதித்து, பாதுகாப்பான உணர்வைத் தரும்போது அவருடன் உணர்வுப்பூர்வமான இணைப்பு உருவாகிறது. நம்பிக்கை, அக்கறை ஆகியவை மனித மனம் எதிர்பார்க்கும் முக்கிய விஷயங்கள். அந்த நம்பிக்கை, அக்கறை, பகிர்தல், உணர்வுகளை மதித்தல் ஆகியவை சிறந்த இணைப்பை ஆழப்படுத்துகின்றன. சிலரிடம் இது இயல்பாக உருவாகக் காரணம் மனம் இயைவது. அவர்களின் எண்ணங்கள் அணுகுமுறை, பேசும் விதம், நம்மைப் புரிந்துகொள்ளும் விதம் ஆகியவை நம்முடன் ஒத்துப்போகும்போது அதிக காலம் பழகாமலேயே நெருக்கம் உருவாகலாம். சிலரிடம் அது உருவாகாமல் போகக் காரணம் நம்பிக்கையின்மை, கடந்தகாலக் கசப்புகள் போன்றவை. அதைவிட முக்கியமானது ஈகோவும், உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாததும்தான். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் மதிக்காதது மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.
உணர்வுப்பூர்வமான இணைப்பு என்பது அதிகமாகப் பேசுவதால் உருவாவதன்று, “என்னை இவர் உண்மையாகப் புரிந்துகொள்கிறார்” என்ற உணர்வில்தான் உருவாகிறது. இந்த உணர்வுப்பூர்வமான இணைப்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆனால் சில வேறுபாடுகளால் பெண்கள் உணர்வுப்பிணைப்பில் அதிகமாக இருப்பதாகக் காணப்படுகிறது. ஆண்கள் உணர்வுகள் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் ‘ஆண் அழக்கூடாது’, ‘ஆண் வீரம் உள்ளவன்’ என்று காலம் காலமாகச் சொல்லி வளர்க்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான ஆண்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கக் கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களிடம் உணர்வுப்பூர்வமான இணைப்பு குறைவாக இருப்பது போன்ற தோற்றம் இருக்கலாம். ஏதாவது இழப்பிற்காக ஆண், பெண் இருவருமே கதறி அழுதாலும் ‘அய்யோ, அந்த ஆண் எப்படி அழுதான் தெரியுமா’ என்று அவனின் இயல்பான உணர்வுப்பூர்வமான கண்ணீரைக் கூட, கதறலைக்கூடப் பேசுபொருளாக்குவது சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘ஆண்’ எனும் கட்டமைப்பு.
பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் உறவுகளைப் பேணவும் சமூக ரீதியாக அதிகம் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். எனவே, உணர்வுகளைப் பகிர்வதும் மற்றவர்களின் உணர்வுகளைக் கவனிப்பதும் வெளிப்படையாக அதிகமாகத் தோன்றுகிறது. ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்துபவர்தான் உணர்வால் இணைந்தவர் என்றும் சொல்லிவிட முடியாது.
உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஆன பெண்கள் தங்கள் எண்ணங்களை, ஆசைகளை எந்தவிதத் தயக்கமோ பயமோ இன்றி வெளிப்படையாகப் பேசுவார்கள். இவர்கள் ‘என்னை புரிந்து கொண்டவர்கள்’ என்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். மனதளவில் பாதுகாப்பு (Psychological safety) பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் அன்பும் பாசமும் கூடுதலாக இருக்கும். சண்டைகளே வந்தாலும் விரைந்து சமாளிக்கக் கூடியவர்கள். ‘நாம் இருவரும் எதிரிகள் இல்லை, நம்மை எதிரியாக்குவது நம்முன் இருக்கும் பிரச்சினையே’ என்று எளிதில் கடந்து செல்வார்கள்.
அவர்கள் பெரும்பாலும் தனிமைப்பட மாட்டார்கள், தனிமையாக இருப்பதாகவும் உணரமாட்டார்கள் என்பது வெகு சிறப்பானதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக ‘எமோஷனல் கனெக்ட்’ ஆனவர்களிடம் இருக்கும்போது “நான் நானாக இருக்கிறேன்” என்ற ஒரு நிம்மதியான மனநிலை இருக்கும். ஆனால், உணர்வுப்பூர்வமான பிணைப்பு இல்லாதவர்கள் மனம் திறந்து பேசாமல் இருப்பார்கள். எண்ணங்கள், ஆசைகள், பயங்கள் அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். எத்தனை பேர் சூழ்ந்து இருந்தாலும் தான் தனிமையாக இருப்பதாகவும் உணர்வார்கள்.
தன்னை யாருமே புரிந்துகொள்வதில்லை என்கிற உணர்வோடு இருப்பார்கள். எதையுமே பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்; ஏனெனில் யாரிடமும் நம்பிக்கை வராது. இது என்னவாகும் எனில் நாளாக நாளாகப் பேசாமல் விட்ட உணர்வுகள் மனக்கசப்புடன் சேர்ந்து வெறுப்பையே உருவாக்கும், அந்த உறவு விலகவும் செய்யும். ஈடுபாட்டுடன் வேலைகளைச் செய்வதற்குப் பதில் கடமைக்காக இயங்குகிறவர்களாக இவர்கள் இருப்பார்கள். ஆக மொத்தத்தில் அன்பு இருந்தும் பகிரத் தெரியாதவராய், அதை வெளிப்படுத்தும் திறன் இல்லாதவராகவே மாறி மனப்பூர்வமான நெருக்கத்தைத் தொலைத்து விடுவார்கள்.
உணர்வுப் பிணைப்பு உள்ள பெண்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்வார்கள். தாம்பத்திய உறவின்போதுகூட எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை எந்தவிதத் தயக்கமின்றிப் பேசுவார்கள். தாம்பத்திய உறவில் இருவருக்குமான எல்லைகளை மதிக்கக் கூடியவர்களாகவும், இருவரின் சம்மதம், வசதி, விருப்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உடல் நெருக்கத்தை மிகச்சிறந்த அன்பின் வெளிப்பாடாக உணர்வார்கள். வெறும் உடல் தேவையாக மட்டும் பார்க்காமல், பாசம் மற்றும் நெருக்கத்துடன் அணுகுவார்கள். அவசரப் படாமல் ஒருவரின் உணர்வைக் கவனிப்பார்கள். தங்கள் தேவைகள், எதிர்பார்ப்புகளைப் பற்றி வெளிப் படையாகப் பேசுவார்கள் – ‘நான் உன்னிடம் இன்னும் நெருக்கமாக இருக்க என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்கக் கூடியவர்களாக இருப்பார்கள். துணையிடம் எல்லாம் சொல்லலாம், அவர் தன்னைக் கேலி செய்ய மாட்டார், தவறாக மதிப்பிட மாட்டார் என்கிற பாதுகாப்பான உணர்வோடு இருப்பார்கள்.
உணர்வுப் பிணைப்பு இல்லாதவர்கள் உடல் நெருக்கம் இருந்தாலும் மனநெருக்கம் இல்லாதவர்களாக இருப்பார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசி விடாத காரணத்தால் விருப்பு வெறுப்புகள் தெரிய வாய்ப்பு குறைவு. உடலுறவு என்பதுகூட அன்பின் வெளிப்பாடாக இல்லாமல் அன்றாட கடமை என்பது போலாகும். துணை பக்கத்திலேயே இருந்தாலும் மனதளவில் தனிமையையே உணர்வார்கள்.
