20ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த பெண்கள்

5 Min Read
- Advertisement -

20ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா மாகாணங்களில் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 4 வரை நடை பெற்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியை ஜப்பான் நடத்துவது இது 3ஆம் முறையாகும். இதற்கு முன்னர் 1958இல் டோக்கியோவிலும், 1994இல் ஹிரோஷிமாவிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் நடத்தியிருந்தது.

தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் இரண்டும் பாலோமா மிசுஹோ மய்தானத்தில் கோலாகலமாக நடந்தது. இந்தியாவில் இருந்து இம்முறை 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என 501 பேர் ஆசிய விளையாட்டில் பங்கேற்றனர். இந்திய அணி 36 வகையிலான விளையாட்டுகளில் கலந்துகொண்டது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 வீரர்கள், 14 வீராங்கனைகள் என 35 பேர் இடம் பெற்றனர்.

கோல்ஃப் போட்டியில் பிரணவி தங்கம் வென்றார்

மைசூருவைச் சேர்ந்த 23 வயதான பிரணவி அர்ஸ் கோல்ஃப் போட்டியில் நான்கு நாள்களில் மொத்தம் 15-அண்டர் 265 என்ற கணக்கில் போட்டியை நிறைவு செய்து, மற்ற போட்டியாளர்களை விட ஒரு ஸ்டோக் முன்னிலையில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிர் அரங்கம்

அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இதில் இறுதிச் சுற்றில் 6, 10 மற்றும் 13ஆவது துளைகளில் பிரணவி பர்டிகளைப் பதிவு செய்தது முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணியில் அதிதி அசோக், தீக் ஷா தாகர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதிதி அசோக், தொடர்ச்சியாக 5 பர்டிகளை அடித்து, ஒரு டபுள் போகி மற்றும் ஒரு போகி ஆகியவற்றுடன் தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டார்.

மகளிர் அரங்கம்

தனிநபர் பிரிவில் அதிதி அசோக் ஒட்டுமொத்தமாக 282 புள்ளிகளுடன் 14ஆம் இடத்தைப் பகிர்ந்து கொண்டார். தீக்‌ஷா 23ஆம் இடத்தைப் பகிர்ந்து கொண்டார். அணிப் பதக்கங்களைத் தீர்மானிக்க இரண்டு சிறந்த வீராங்கனைகளின் புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி இந்தியா 546 புள்ளிகளுடன் நிறைவு செய்து 2-ஆம் இடம் பிடித்தது.

வில்வித்தையில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் கும்கும் அனில் மோஹோத்

வில்வித்தையில் மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் கும்கும் அனில் மோஹோத், தென் கொரியாவின் ஓ இஜ்-யினை எதிர்கொண்டார்.

கும்கும் 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டு வரலாற்றில் வில்வித்தையில் ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு குவாங்ஸோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் வெள்ளிப் பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. முன்னதாக கும்கும் அனில் மோஹோத் கால் இறுதியில் நடப்பு உலகச் சாம்பியனான காங் சேயுங்கை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் உலகச் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், முன்னாள் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் ஜிங்கி ஜித்துவை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

மகளிர் அரங்கம்

நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் கும்கும் அனில் மோஹோத்துக்கு இது 3-ஆம் பதக்கமாக அமைந்தது. அவர், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் அங்கிதா பகத், கீர்த்தி ஆகியோருடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கலப்பு அணிகள் பிரிவில் தீரஜ் பொம்மதேவராவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார். தற்போது தங்கப் பதக்கம் வென்றதன் வாயிலாக கும்கும் அனில் மோஹோத் வரும் 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா

மகளிருக்கான குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், சீனாவின் ஸியி பாவுடன் மோதி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது தாகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தணிந்தது. முத்தாய்ப்பாக இந்த தங்கப் தக்கத்தை லவ்லினா போர்கோஹைன் தனது பிறந்த நாளில் வென்றது சிறப்பம்சமாக அமைந்தது. நேற்று அவருக்கு 29-ஆம் பிறந்த நாளாகும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் லவ்லினா போர்கோஹைன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன் வாயிலாக ஆசிய விளையாட்டு வரலாற்றில் மகளிர் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற 2-ஆம் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் லவ்லினோ போர்கோஹைன். இதற்கு முன்னர் 2014-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரிகோம் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

வென்றபின் பேசிய லவ்லினா போர்கோஹைன், “எனது பிறந்தநாள் சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பிறந்தநாளுக்கு நானே தங்கப் பதக்கத்தைப் பரிசாகத் தருவேன் என்று நினைத்தேன். அந்த வகையில் நான் எனக்கே ஒரு பரிசைப் பெற்றுக்கொள்வது இதுவே முதல் முறை. இதற்காக முழு மூச்சுடன் உழைத்தேன். தோற்றுவிடுவேன் என்று ஒரு வினாடி கூட நினைக்கவில்லை” என்றார்.

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற பர்வீன் ஹூடா

சீனாவின் ஹாங்சோவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் பர்வீன் ஹூடா. ஆனால், இருப்பிட விவரங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட சிறு நடைமுறைத் தவறு காரணமாக அந்தப் பதக்கம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு 22 மாத தடை விதிக்கப்பட்டதால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியையும் அவர் தவறவிட நேர்ந்தது.

இந்த சோதனை காலம் குறித்துப் பேசிய பர்வீன் ஹூடா, ‘‘ஹாங்சோ ஆசிய விளையாட்டு பதக்கம் பறிக்கப்பட்ட பின்னர் எனது உலகம் இருண்டுவிட்டது போல் இருந்தது. எல்லாமே முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், சிறிய தவறுக்காக என் வாழ்வை இழக்கத் தயாராக இல்லை. பூஜ்ஜியத்தில் இருந்து என் பயணத்தை மீண்டும் தொடங்கினேன்” என்று தெரிவித்தார்.

பறிபோன வெண்கலப் பதக்கத்தை தனது வீட்டின் சுவரில் மாட்டி வைத்திருந்தார். “பதக்கத்தின் நிறத்தை தங்கமாக மாற்றுவேன் என்ற வெறியோடு அதைப் பார்த்துக் கடின உழைப்பை கொடுத்தேன். இன்று அந்தப் பதக்கம் தங்கமாகவே என் கைக்கு வந்துவிட்டது” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் காவல் துறை உதவி ஆய்வாளராக உள்ள பர்வீன் ஹூடா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *