ராகுல் காந்தி பேட்டி
புதுடில்லி, செப்.25 பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டுக்கு எத்தகைய துரோகத்தைச் செய்துள்ளனர் என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்லியில் செய்தியாளர் களைச் சந்தித்த ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளி யாகியுள்ள செய்தி அதிர்ச்சி யளிப்பதாகக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கும், நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கும் எதிரான இந்தச் செயலுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் அவர் அரசு சாட்சியாக மாறித் தனது தேசபக்தியை நிரூபிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையத்தின் இத்த கைய முறைகேட்டுச் சதியில் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகிய மூவருமே முக்கியச் சூத்திரதாரிகளாகச் செயல்பட்டுள்ளனர் எனக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அவர்கள் நாட்டுக்கு இழைத்த துரோகம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
‘‘ஜனநாயகம் அழிக்கப்படுவதை நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இந்தத் துரோகத்தில் ஈடுபட்ட அனைவரும் சட்டப்படி தகுந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ‘400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி’ என்ற பிரதமரின் முழக்கத்தையும், ‘30 ஆண்டுகளுக்கு பாஜகவே ஆட்சியில் இருக்கும்’ என்ற அமித் ஷாவின் பேச்சையும் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, “ஜனநாயகத்தில் செயல்படும் எந்தவொரு உண்மையான அரசியல் தலைவரும் இப்படிப் பேச முடியாது. தற்பொழுது நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை வலுப்பெறத் தொடங்கியுள்ளது’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
