பேராபத்தில் இந்திய ஜனநாயகம்!

4 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அழைத்து நமக்கு நாமே பெருமை கொள்கிறோம் – அது மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே! 140 கோடிக்கும் மேல் மக்களையும், அதில் 97 கோடி வாக்காளர்களைக் கொண்ட நாடு என்பதால் கிடைக்கும் ‘வெறும் எண்ணிக்கை அளவிலான பெருமை’யே தவிர, ஜனநாயக நடப்பில் நமது நிலை என்ன?

வி-டெம் (Varieties of Democracy) என்ற ஸ்வீடனைச் சார்ந்த நிறுவனம் கடந்த பத்தாண்டுகளில், உலகளவில் ஜனநாயகச் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவைக் குறிப்பிட்டு, இதனைத் “தேர்தல் வழி சர்வாதிகார ஆட்சி” (electoral autocracy) என்று அடையாளப்படுத்தியுள்ளது.

எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (EIU) ஜனநாயகக் குறியீடு, இந்தியாவை ஒரு “குறைபாடுள்ள ஜனநாயகம்” என வகைப்படுத்துகிறது. அதன் அண்மைக்கால குறிப்பிடத்தக்க ஒப்பீட்டு ஆண்டுகளில் 53ஆம் இடத்தில் உள்ளது. 2014-இல் இந்தியா 27-ஆம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023-இல் அரசியல் கலாச்சாரம், குடிமை உரிமைகள் போன்ற அளவுகோல்களில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது இந்தியா. மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம், மதச் சுதந்திரம், கருத்துரிமை, பத்திரிகையாளர் உரிமை ஆகியவற்றில் இந்தியா பாதாளத்திற்குப் போய்விட்டதை உலகப் பார்வையாளர்கள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் பல கணித்துள்ளன.

ஆனால், அப்போதைய எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் பார்வைப் படி, தேர்தல் செயல்முறைகளில் ஒப்பீட்டளவில் இந்தியா நிலையான செயல்திறனைப் பராமரிப்பதாகக் கணித்தார்கள். அதற்குக் காரணம், தேசிய, மாநில, உள்ளாட்சி என அனைத்து நிலைகளிலும் காலந்தோறும் தேர்தல்கள் நடத்தப்படுவதாகவும், சுதந்திரமான தேர்தல்களை நடத்தும் ‘இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அமைப்பு’ என்றும் கருதிக் கொண்டிருந்த சூழல் அது.

ஆனால், இப்போது அதுவே கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்முறைகளிலும், அது தேர்தல் நடத்தும் முறைகளிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாகவும், தேர்தல் நடத்தும் தேதிகளை முடிவு செய்வதிலும், அறிவிப்பதிலும், வாக்கு எண்ணும் மய்யங்களில் நடக்கும் நடவடிக்கைகளிலும், வாக்கு எண்ணும் தேதிகளில் இருக்கும் தாமதமும், வாக்காளர் பட்டியல்கள் சேர்த்தல் – நீக்குதல்களிலும், கட்சித் தாவல்கள் – கட்சிகள் உடைப்புகள் மீதான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறுஆய்வு (எஸ்.அய்.ஆர்) என்றும் ஏராளமான பிரச்சினைகள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

தன்னாட்சி அதிகாரம் மிக்க தேர்தல் ஆணையத்தில் இத்தகைய குழப்படிகள், சர்ச்சைகள் இருக்கக் காரணமில்லை. அனைவருக்கும் பொதுவாக, ஜனநாயக முறையில் ஒரு நாட்டில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை, வாய்ப்பைச் சரியாகச் செயல்படுத்த வேண்டிய அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரமிக்க ஓர் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் அல்லவா? அதன் மீது ஏன் இத்தனை சந்தேகங்கள் எழுகின்றன?

இது மட்டுமல்லாமல், தொகுதி மறுவரையறை, தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், அதன் மூலம் சில மாநில வாக்காளர்களுக்கு அதிக முக்கியத்துவமும், சில மாநிலக் குடிமக்களுக்கு இரண்டாந் தர நிலையும் தரும் வகையில் திட்டங்கள் என்று இன்னொரு புறம் நேரடியாக ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் தீவிரமாகின்றன.

இந்தக் கே(ா)டுகளெல்லாம் எந்தப் புள்ளியில்  ஒன்றிணைகின்றன என்பதைச் சாதாரண அறிவு உள்ள மக்களால் கூட அடையாளம் காண இயலுமே! அதைத் தான் ஒற்றைச் சொல்லால் ‘தேர்தல் வழி சர்வாதிகாரம்’ என்று எச்சரித்தது வி-டெம் அமைப்பு. இந்தியாவை இந்துராஷ்டிர நாடாக ஆக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் அடிப்படைவாத எண்ணம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவே, அரசியலில் மதவாதத்தை நுழைத்து, பாரதிய ஜனதா கட்சியைக் களமிறக்கினார்கள். படிப்படியாக, வட மாநிலங்களில் ராமனை வைத்து வாக்கு வேட்டையாடினார்கள். கூட்டணியில் ஆட்சியைப் பிடித்த வாஜ்பேயி காலத்திலேயே எவ்வளவு தூரம் தங்களின் ஆதிக்கக் கரங்களை நீட்ட முடியுமோ நீட்டி, இந்துத்துவ வேர்களைப் பாய்ச்சினர். பொய், புரட்டுகளை முதலீடாக்கி, 2014இல் மோடி தலைமையில் ஆட்சியைப் பிடித்த நாளிலிருந்து, இந்துராஷ்டிரத்தை நோக்கிய நகர்வுகளுக்காக, அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் தங்களின் செயல்பாடுகளை நீட்டித்ததுடன், தங்களின் நெடுங்காலக் கனவை நிலைநிறுத்த வேண்டுமானால், அதற்கு அதிகாரத்தையும் நெடுங்காலம் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடன், எல்லா வகையான முறைகேடுகளையும் சட்ட ரீதியாக, அரசு ரீதியாகச் செய்வதற்குத் தொடங்கினர். அவற்றையெல்லாம் தனித்தனியாக அனைவரும் எதிர்த்துவந்தாலும், அவர்களின் இறுதி இலக்கை நோக்கி விரைந்து கொண்டேயிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுகளே, ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர்கள் இருவர், தலைமைத் தேர்தல் ஆணையரின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆர்.எஸ்.எஸ்.சின் கெடுநோக்கத்தைச் செயலாக்க, எந்த அளவுக்கு உயர் அதிகாரம் மிக்கவர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொல்லியிருப்பதைப் போல இது ஒரு பெரிய பனிப் பாறையின் ஒரு முனை. முழுமையாக அதைக் கண்டறிந்து எச்சரிக்கையாகச் சுக்கானைச் செலுத்தாவிடில், இந்தியா என்னும் ஜனநாயகக் கப்பல் அதில் மோதிச் சிதைந்துவிடும். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *