தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் பேட்டி
புதுடில்லி, செப். 25- நாட்டின் மிகப் பெரிய தேச விரோதி ஞானேஷ் குமார் என குற்றம்சாட்டியுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, அவர் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.
மேலும், அவர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் மற்றும் கால வரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கப்படும் என்று சிஜேபி எச்ச ரித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் நடைமுறைகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்திய ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளார்!
அப்போது அபிஜீத் தீப்கே, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிகப் பெரிய தேசவிரோதி. இந்திய ஜனநாயகத்துக்கு அவர் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
2024 தேர்தலில் பாஜ பெரும்பான்மை பெறத் தவறி 240 இடங்களுக்குச் சுருங்கியபோதே அவர்களுக்குப் பயம் தொற்றிக்கொண்டது. நாட்டின் மனநிலை மாறுவதையும், மாநிலக் கட்சிகள் வலிமை பெறுவதையும் அவர்கள் உணர்ந்தனர். அதன் பின்னரே, ஒன்றிணைந்து களமிறங்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையாகத் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழ்த்தப்பட்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தொகுதியில் 50,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் மம்தா 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் இருந்து ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அங்கு மு.க.ஸ்டாலின் 8,000 வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். டெல்லியில் கெஜ்ரிவால் தொகுதியில் இருந்து 40,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அங்கு அவர் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். அதேபோல், கேரளாவில் பினராயி விஜயனும் இந்த வாக்கு நீக்க நடவடிக்கையால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் ஆகியோர் தோற்றது எதேச்சையானது அல்ல. அதற்கு பின்னால் பெரிய சதி உள்ளது. எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைப்பது தான் இந்த எஸ்அய்ஆர் நடவடிக்கையின் முக்கிய நோக்கமா? எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டால்தான், அந்தத் தேர்தல் நியாயமான தேர்தல் என கருதப்படுமா? இதுதான் உங்களின் நியாயமான தேர்தலா?
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான 2023 ஆம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களின் மூன்றாவது கோரிக்கை. இதற்கென சிவில் சமூகக் குழுக்களை உள்ளடக்கிய ஒரு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
