சில்லாங், ஆக. 14- அருணா சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் ஊடுருவல் மற்றும் இந்தியப் பகுதிகள் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து முன்னாள் ஒன்றிய மின்சார அமைச்சரும், முன்னாள் ஒன்றிய உள்துறை செயலாளருமான ஆர்.கே. சிங் எழுப்பியுள்ள கேள்விகள் தற்பொழுது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
‘ஷெரா 5’ பெட்ரோலிங் பாயிண்ட் சீனக் கட்டுப்பாட்டில்?
அருணாசலப் பிரதேசத்தின் அப்பர் சுபன்சிறீ மாவட்டத்தில் உள்ள டாக்சிங் பகுதியில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய ஆர்.கே. சிங், அதிர்ச்சியளிக்கும் சில தகவல்களை வெளியிட்டு உள்ளார்:
இந்தியப் பிரதேசத்தில் உள்ள முக்கிய ரோந்துப் புள்ளியான ‘ஷெரா 5’ மீது சீனப் படைகள் தங்களது கட்டுப்பாட்டை ஏற் படுத்தியுள்ளன.
அப்பகுதிக்கு இந்தியப் படைகள் செல்வதற்குச் சீனத் தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அந்த ரோந்துப் புள்ளி இந்தியத் தரப்பால் கைவிடப்பட்ட நிலையில், அதை சாதகமாகப் பயன்படுத்திச் சீனப் படைகள் அங்கே தங்களது நிரந்தர இருப்பை அமைத்துக் கொண்டுள்ளன.
முன்னாள் உயர் அதிகாரியான ஆர்.கே. சிங், இந்த விவகாரத்தில் மோடி அரசின் அணுகுமுறை குறித்துப் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்:
2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அரசு இதுவரை எத்தனை பெட்ரோலிங் பாயிண்டுகளைக் கைவிட உத்தரவிட்டுள்ளது?
எல்லைப் பாதுகாப்பு தொடர்பான இந்த முக்கியமான விவகாரத்தில் ராணுவத் தலை மையும், நாட்டின் முதன்மை ஊடகங்களும் அமைதி காப் பது ஏன்? என்று அவர் வினவி யுள்ளார்.
“இன்னும் சில நாட்களில் அருணாசலப் பிரதேசத்தைச் சீனாவில் பார்ப்பீர்கள் / விடைபெறுகிறோம் இந்தியா – (Goodbye India)” என்று அருணா சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தபா நகு என்ற திபெத்திய இளைஞர் வெளியிட்ட, காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. எல்லையில் நிலவும் இதுபோன்ற அசாதாரணச் சூழலே உள் ளூர் மக்களை இத்தகைய விரக்தியான முடிவுகளுக்குத் தள்ளுகிறது என்று ஆர்.கே. சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு சார்ந்த விஷயம் என்பதால், ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு இந்த விவகாரத்தில் உண்மையான நிலை என்ன என்பது குறித்து மக்களுக்குத் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய நிலப்பரப்பு இழக்கப் பட்டது என்றோ அல்லது “மெதுவான ஆக்கிரமிப்பு” நடைபெறுகிறது என்றோ வெளியாகும் இதுபோன்ற கூற்றுகளை இந்திய ராணுவமும், வெளியுறவு அமைச்சகமும் வழக்கமாக மறுத்து வருகின்றன. இருப்பினும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரியுமான ஆர்.கே. சிங்கே இத்தகைய கேள்விகளைப் பகிரங்கமாக எழுப்பியுள்ளது அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
