நேபாள வெள்ளத்தில் காணாமல்
போன 275 இந்தியர்கள் நிலை
போன 275 இந்தியர்கள் நிலை
எந்தத் தகவலும் இல்லை!
காத்மாண்டு, செப். 5- நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை என ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
திபெத்தில் பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26-ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பேரிடரில், இதுவரை 1,295 பேர் பலியாகியுள்ள நிலையில், சுமார் 5,000 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேபாளத்துக்குச் சென்று அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களில் இன்னும் 275 பேரைக் காணவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஒன்றிய வெளியுறவுச் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை. இதுபற்றி நேபாள அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இதில் நேபாள அதிகாரிகளின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். இதுவரை 166 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் சீனாவில் இருந்து 1,907 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்துக்கு வந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு 95 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,290-ஆகவும் 2.56 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 24,187 கோடி) மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, அந்நாட்டின் அத்தியாவசிய கட்டுமானப் பணிகளான சாலைகள் மற்றும் தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும், குடிநீர் வழங்குவதற்கும், மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கும் அடுத்த 4 மாதங்களில் மட்டும் 52.6 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 496 கோடி) செலவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும்
இடையே கடுமையான மோதலில் 81 பேர் உயிரிழப்பு!
இடையே கடுமையான மோதலில் 81 பேர் உயிரிழப்பு!
ஏமன், செப். 5- ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றுவரும் கடுமையான மோதலில் 81 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
செங்கடல் பகுதியில் பன்னாட்டு கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த ஏமன் அரசுப் படைகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏமனின் முக்கியப் பகுதிகளான அல்-ஹுதைதா மற்றும் தாயிஸ் மாகாணங்களில் ஹூதி அமைப்பினரின் நிலைகளைக் குறிவைத்து அரசுப் படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதற்குப் பதிலடியாக ஹூதி கிளர்ச்சியாளர்களும் அரசுப் படைகளை நோக்கி பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீவிர மோதல்கள் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உட்பட மொத்தம் 81 பேர் உயிரிழந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த மோதல்களில் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில், இந்த திடீர் மோதல்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அங்குள்ள மனிதவள நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கியூபா மீது அமெரிக்கா
புதிய பொருளாதாரத் தடை
புதிய பொருளாதாரத் தடை
ஹவானா, செப். 5- கியூபாவின் பொருளாதாரத்தை முடக்கும் முயற்சியாக அந்நாட்டின் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. கியூபாவில் கடந்த 1959ஆம் ஆண்டுக்கு பிறகு, ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூபா அரசு, அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் சொத்துகளை கைப்பற்றி நாட்டுடைமையாக்கின. அத்துடன் அந்நாடு கம்யூனிசக் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா கியூபா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.
அதன்ஒரு பகுதியாக, கியூபாவின் பொருளாதாரத்தை முடக்கவும், அங்கு நிலவும் பல்வேறு நெருக்கடிகளை தீவிரப்படுத்தும் விதமாகவும் அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்துள்ளது. அதன்படி, முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் 31ஆவது பேரனான ஃபிடல் எர்னஸ்டோ மீது அமெரிக்கா நேரடியாக தடை விதித்துள்ளது. இதேபோல், அபாபெட் என்ற நிறுவனம் மீதும் தடை விதித்துள்ளது. இந்த நிறுவனம் கியூபாவின் மின்சாரக் கட்டமைப்பை பராமரிக்க தேவையான உதிரிப் பாகங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் அரசுக்கு சொந்தமான எண்ணெய்த் துறை சார்ந்த விநியோக நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது கியூபாவில் மின்சார கட்டணம் மேலும் பாதிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நாட்டில் ஏற்கெனவே மின்வெட்டு மற்றும எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்த நடவடிக்கை மக்கள் துன்பத்தை அதிகரிக்கும் என்று விமர்சிக்கப்படுகிறது.
