அய்தராபாத், ஜூன் 18- தெலங்கானா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில், 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் 15.6.2026 அன்று அய்தராபாத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் 6 நாட்களும் சுழற்சி முறையில் உணவுகள் வழங்கப்படும்.
மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த உணவுப் பட்டியலில் சிறுதானியங் களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்கவும், போதிய ஊட்டச்சத்து கிடைக்கவும் சுழற்சி முறையில் பின்வரும் உணவுகள் வழங்கப்பட உள்ளன: சிறுதானிய இட்லி, ராகி கூழ், பால், தோசை, பூரி மற்றும் போண்டா ஆகியவை.
இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்ததாவது:
“எந்தவொரு குழந்தையும் பசியுடன் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, அனைத்து மாணவர்களும் அரசுக் கல்வி நிறுவனங்களிலேயே வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவை நல்வழியில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” இத்திட்டம் தெலங்கானா மாநில மக்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
