புதுடில்லி, ஆக. 12– பெண்ணை யாறு நதிநீர் விவகாரத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனு எவ்வித முகாந்திரமும் அற்றது என்பதால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பெண்ணையாற்றின் குறுக்கே கருநாடக அரசு சட்டத்திற்குப் புறம்பாக பெரிய அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற் கொண்டு வருவதாகக் கூறி, தமிழ்நாடு அரசு சார்பில் 2018-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கருநாடகாவின் இந்தச் செயலால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் முற்றிலும் தடுக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதில் சுட்டிக்காட்டியிருந்தது.
2022-ஆம் ஆண்டிலேயே பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைப்பதாக ஒன்றிய அரசு உறுதியளித்திருந்தது. தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டதால், தீர்ப்பாயத்தை அமைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி பிப்ரவரி 2-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், ஒன்றிய அரசுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி 8.5.2026 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனு முற்றிலும் தேவையற்றது; இது நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தும் ஒரு முயற்சியே ஆகும். செயல்பாடின்றி இருக்கும் ‘மகதாயி நதிநீர்ச் சிக்கல் தீர்ப்பாயத்திற்கு’ பெண்ணையாறு பிரச்சினையை அனுப்புமாறு ஒன்றிய அரசு கோருவது, 1956-ஆம் ஆண்டைய மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ச் சட்டப் பிரிவு 262-க்கு முற்றிலும் முரணானது.
1956-ஆம் ஆண்டுச் சட்டத்தின் படி, புதிய புகார்கள் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும் போது, இந்தியத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் நியமனத்தின் போது பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மட்டுமே இருக்க வேண்டும்.
பெண்ணையாறு விவகாரத்தில் புதிய தீர்ப்பாயத்திற்கு ஒரு தலைவர் மற்றும் இரண்டு நீதிபதிகளை ஒன்றிய அரசு உடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும்.
புதிய தீர்ப்பாயம், ஏற்கெனவே உள்ள மகதாயி தீர்ப்பாயத்தின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்று முதல் 2 மாதங்களுக்குள் இத்தீர்ப்பாயத்தை அமைத்து நீதியை நிலைநாட்ட ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் வலியுறுத்தியுள்ளது.
