புதுடில்லி, மே 23- தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களையும், இலவசங்களையும் அறிவித்தன. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்கள் அறிவிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய்சுகின் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்:
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இத்தகைய கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் ஒட்டுமொத்த பொதுமக்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.
தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் இதுபோன்ற இலவச வாக்குறுதிகள் அளிப்பதைத் தடுக்கும் விதமாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவசங்களை ‘லஞ்சம்’ என்று சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
உடனடி உத்தரவு பிறப்பிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்:
மேற்கண்ட மனு நேற்று (22.5.2026) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தனது உத்தரவில், “இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் உடனடியாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பித்துவிட முடியாது. இதுகுறித்து மிகவும் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய கோடைக்கால விடுமுறை முடிந்த பின்னர், தேர்தல் இலவசங்கள் தொடர்பான அனைத்து மனுக்களும் பட்டியலிடப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்து வழக்கைத் ஒத்திவைத்தார்.
