உணவகங்கள், தொழில் நிறுவனங்களுக்கான வர்த்தகப் பயன்பாட்டு எரிவாயு உருளைக் கட்டுப்பாடுகள் நீக்கம்

2 Min Read

புதுடில்லி ஜூன் 28– மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்து, உலகளாவிய எரிசக்தி சந்தை சீரடைந்து வருவதை அடுத்து, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் உணவகங்கள், தொழிற் சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, மேற்கு ஆசிய நாடுகளிலும் இந்தப் போர் பரவியது. இதனால், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயுஇறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவையில் சுமார் 90 சதவீதம் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பொதுமக்களின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஒன்றிய அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, வர்த்தக ரீதியிலான எரிவாயு விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த எரிவாயு வீட்டு உபயோகத்துக்குத் திருப்பி விடப்பட்டது. பின்னர் நிலைமை சற்று சீரானதும் 70 சதவீத விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், சில துறைகளுக்கு 50 சதவீத கட்டுப் பாடுகள் நீடித்து வந்தன.

தற்போது உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், எல்பிஜி சரக்குக் கப்பல்கள் இந்தியாவுக்கு அடுத்தடுத்து வரவிருப்பதாலும் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உணவகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங் கப்படும் வர்த்தகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, போருக்கு முந்தைய நிலையில் இருந்தபடியே 100 சதவீதம் விநியோகம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த ‘பல்க் எரிவாயு’ விநியோகம், தற்போது 50 சதவீத அளவுக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் சப்ளை தொடங்கப்பட்டுள்ளது.

நெருக்கடி காலத்தில் எரிவாயு உற்பத்தியைப் பெருக்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோகெமிக்கல் உற்பத்திக்குத் தேவையான சி3 மற்றும் சி4 ஹைட்ரோகார்பன்களை எரிவாயு தயாரிப்புக்கு அரசு திருப்பியது. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் பெட்ரோகெமிக்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தற்போது நிலைமை சீராகியுள் ளதால், தினசரி எரிவாயு உற்பத்தி 40,000 டன்களுக்குக் குறையாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு, மீதமுள்ள ஹைட்ரோகார்பன் ஒதுக்கீடு மீண்டும் பெட்ரோ கெமிக்கல் துறைகளுக்குத் திருப்பி விடப்படும். புதிய விநியோக நடைமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமூகமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *