டில்லி சிறப்பு பிரதிநிதியாக
கருநாடகாவைச் சேர்ந்தவர் நியமனம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டது
சென்னை, ஜூன் 27 டில்லி சிறப்புப் பிரதிநிதியாக கருநாடகாவை சேர்ந்தவரை நியமனம் செய்து இருப்பதன் மூலம் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை த.வெ.க. அரசு விட்டு கொடுத்து விட்டது என்று தி.மு.க. எம்.பி., கனிமொழி குற்றம் சாட்டி யுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாட்டில் தகுதியானவர்களே இல்லையா?
“தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டில்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கருநாடகாவைச் சேர்ந்த ஒருவரை தவெக அரசு அமர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் இவ்வளவு திறமையாளர்கள் இருக்கும்போது, தவெகவில் அப் பொறுப்புக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவராக இல்லையா?”
கருநாடக அரசு காவிரியில் “மேகதாது அணை கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் யாருக்காகப் பேசுவார்? அவர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகச் செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கருநாடகாவின் பிரதிநிதியாகச் செயல்படுவாரா?” மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் தவெகவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனிமொழியின் இந்த அறிக்கை, தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் தவெக மற்றும் திமுக இடையே புதிய விவாதத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிவா எம்.பி.,
திருச்சி சிவா எம்.பி., வெளி யிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை விவகாரத்தை முன்வைத்து தற்போதைய தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் அவர்களின் நிலைப்பாடு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அறிக்கையில் திருச்சி சிவா குறிப்பிட்டிருப்பதாவது: “மேக தாது அணை விவகாரத்தில் கருநாடக அரசுக்கு ஒருபோதும் பணிய மாட்டோம் என்று தேர்தல் களத்திலும், பொதுமேடைகளிலும் உரக்கப் பேசிய முதலமைச்சர் விஜய், தற்போது டில்லி சிறப்புப் பிரதிநிதி நியமன விவகாரத்தில் தமிழ்நாட்டிற்காக உண்மையாகக் குரல் கொடுப்பாரா? என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.”
திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரை இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, மாநில உரிமைகளுக்கான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பது, டில்லியில் தமிழ்நாட்டின் குரலை பலவீனப்படுத்தும் செயல் என்றும், மாநில நலன்களில் இந்த அரசு காட்டும் மெத்தனப் போக்கையே இது வெளிப்படுத்துகிறது என்றும் அரசியல் வட்டாரங்களில் இந்த நியமனம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
