ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி: மத்தியப் பிரதேசத்தின் நகர்ப்புர மேம்பாட்டுத் துறை அமைச்சர் கைலாஷ் வர்கியா “எங்களைக் காபிர்கள் என இகழுகின்ற முஸ்லிம்கள் இந்துக்களின் சாலைகளில் நடக்கக் கூடாது; அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறக் கூடாது” என்று இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாகாதா? அவரது பதவி பறிக்கப்படுமா?

– கோ.குமரன், புழுதிவாக்கம்.

பதில்: அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டமாவது? புடலங்காயாவது? எல்லாம் ‘ஜெய்ராம்’. அம்மாநில முதலமைச்சர் குடிசை வீடுகளை வளைத்தது முதல் ஊழல் நாற்றம் தாங்க முடியாத நிலை. முன்பு ‘வியாபம்’ ஊழல். இவர்கள்தான் ஊழல் அற்ற ஆட்சியை நாட்டிற்கே வழங்கும் நற்குணவாளர்கள் என்பார் அவர்களின் நடைமுறைத் தலைவர் பிரதமர் மோடி! இஸ்லாமியர்களை அவர்கள் வருத்தும் பாடு தெரிந்தும் அவர்களிடமும் சலாம் போடுவோர் அங்கும் உள்ளனரே!

கேள்வி: கவியரசர் கண்ணதாசனின் 100ஆவது பிறந்த நாளில் (24.6.2026) பகுத்தறிவு – ஆன்மிகவாதி என ஒப்பீடு செய்து அவரைப் பற்றித் தாங்கள் கூற விரும்புவது என்ன?

– பா.கவிப்பிரியன், திருவள்ளூர்

பதில்: தொடக்கத்தில் வைதீகராக இருந்தவரை பகுத்தறிவுவாதியாக்கியவர்கள் கலைஞரும், தோழர் ஈ.வெ.கி.சம்பத் போன்றவர்களும். பிறகு என்ன நெருக்கடியோ ஆன்மிகத்திற்குப் பாய்ந்துவிட்டார்!“மனிதன் மாறிவிட்டான் – அவன் மதத்தில் ஏறிவிட்டான்!” என்ற அவரது பாடலில் முன் கட்டமும், பின் கட்டமும் போல! என்றாலும் தமிழ்நாட்டின் தலைசிறந்த வெள்ளை உள்ளம் படைத்த கவிஞர். அவர் நூற்றாண்டை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்!

கேள்வி:சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆளுநர் உரை மீதான பதிலுரை ஏற்புடையதா?

– மா.சிவகுரு, திருத்தணி

பதில்: அவையின் மாண்பு அறிந்தவர் எவரும் அதை ஏற்க மாட்டார்கள். ஆனால், அவரால் தேர்வு செய்யப்பட்ட பேரவைத் தலைவரைத் தவிர!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி: அயோத்தி இராமன் கோயில் நிர்வாக ஊழலில் ஈடுபட்டவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? சிறை செல்வார்களா?

– தி.விஜயகுமார், சோத்துப்பாக்கம்

பதில்: அயோத்தி இராமனை ‘அபேஸ் இராமனாக்கியவர்களை’ அந்த இராமனால் எப்படி தண்டிக்க முடியாதோ அதே நிலைதான். கடைசியில் எல்லாம் பூசிமெழுகி ‘ஹரேராம்’ ஆக்கி விடுவார்கள் ஒரு வழியாக!

கேள்வி: ஈசல்போல், ஆட்சியைப் பிடித்த புதிய கட்சிக்குத் தாவும் கட்சியினர் பற்றித் தங்கள் கருத்து?

– கோ.தருமராஜ், திருச்சி

பதில்: வேடந்தாங்கல் பறவைகள்கூட ஒரு குறிப்பிட்ட காலம் தங்கும். இவர்கள் நிலை அப்படிக் கூட இல்லை. “ஆசை வெட்கமறியாது – ‘பதவி ஆசை’ எதையும் அறியாது!”

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி: “நடைபாதைகளில் நடப்பதற்கான சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமை, அது மோட்டார் வாகனப் போக்குவரத்தை விட முன்னுரிமை பெற்றது” என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தந்துள்ள உறுதியான தீர்ப்புக்குப் பிறகாவது – தமிழ்நாடு அரசினர் நடைபாதைகளில் ஏராளமாக மலிந்துள்ள கோயில்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

– ஆ.வினோத், சென்னை-11

பதில்: அதற்குக் கும்பாபிஷேகம் நடத்தாம லிருந்தால் போதும்; எத்தனையோ உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் ஊறுகாய் ஜாடியில் ஊறி ஊறிக் கிடக்கின்றவே!

கேள்வி: தொடர்ச்சியாக நிகழும் ‘நீட்’ மரணம் – இதற்கு முடிவுதான் என்ன?

– வா.மணியரசன், ஆவடி

பதில்: ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை மாற்றுவதுதான் ஒரே வழி என்பதை நாடும், இளைஞர்களும் – மாணவர்களும் உணரும் நிலை மேலும் பெரிதாகும்போதுதான் விடிவு!

கேள்வி: தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் சமூக வலைதளச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது முறையா?

– வே.காளிதாஸ், மதுரை

பதில்: பாசிசத்தைப் பாயாசம் எனக் கருதிய கண்டனத்திற்குரிய ‘அதிகார’ போதை!

கேள்வி: சமூகநீதிக் காவலர் மேனாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்களைப் பற்றித் தாங்கள் நினைவு கூறும் செய்தி என்ன?

– கா.மேனகா, அரும்பாக்கம்

பதில்: அந்த மாமனிதர் தனது உடல்நிலை தளர்ந்து டில்லி அப்போலோ மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூட, பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு பல கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு அளிக்கும் மனுவில், படுக்கையில் சிகிச்சை நடக்கும் நிலையிலேயே பேனாவை வாங்கி கையெழுத்துப் போட்டுத் தந்த காட்சி எங்களை விட்டு அகலாததோடு, சைதாப்பேட்டை கண்டனக் கூட்டத்தில் – “நான் வெளியே இருந்திருந்தால் புல்டோசர் முன் படுத்திருப்பேன்” என்று முழங்கியது மறக்க முடியாதது!

கேள்வி: ராஜஸ்தான் ஜபல்பூரில் ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கிய பட்டங்களில் ‘இந்தியா’வை ‘பாரத்’ என குறிப்பிட்டுள்ளார்கள். கல்வி நிறுவனங்களுக்கு இதுபோன்ற
ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் என்ன?

– ச.மணிமொழி, ஆலந்தூர்

பதில்: “இந்தியாவை” பல வகையில் காணாமல் போகச் செய்யும் முயற்சிகள் இப்போது பகிரங்கமாகவே நடத்தப்படுகின்றன; அவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகள். மாநிலங்களின் பெயரை மாற்றவே நாடாளு மன்றத்தில் தனிச் சட்டம் தேவைப்படும் நிலையில், நாட்டின் பெயரை இப்படித் தானாகவே மாற்றுவது அதுவும் பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாவில், அதிலும் ஒரு குடியரசுத் தலைவர் நிகழ்வில் இதுபோன்று என்றால் இதைவிட அரசியலமைப்புச் சட்ட விதியை அப்பட்டமாக மீறும் செயல் வேறு உண்டா? ஊடகங்கள் எல்லாம் ‘கப்சிப்’. வாழ்க ‘பாரத்’ ஜனநாயகம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *