முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!

5 Min Read

முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்று பாராமல்,
தந்தை பெரியார் பிறந்த நாளாம் செப்டம்பர் 17 அன்று
காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்புவரை விரிவாக்கம்!

முந்தைய தி.மு.. அரசு கொண்டு வந்த திட்டம் என்று பாராமல்தந்தை பெரியார் பிறந்த நாளாம் செப்டம்பர் 17 அன்று காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்புவரை விரிவாக்கம்!!முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியன்று விரிவாக்கம் செய்யப்படும் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களது இந்த அறிவிப்பு பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

பள்ளிப் பிள்ளைகளுக்கான காலை உணவுத் திட்டம், முதன்முதலாக ‘திராவிட மாடல்’ ஆட்சியான தி.மு.க.வின் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் திட்டமாகும். இளம் பள்ளி மாணவர்கள், வயிற்றுப் பசி, கல்விப் பசியைப் போக்கப் பெரிதும் துணை நிற்கும் திட்டம் இது! பிற மாநிலங்களும், வெளிநாடுகளும் பின்பற்றும் முன்னோடிப் புரட்சித் திட்டமாகும்.

திரு.ஜோசப் விஜய் அவர்களது அரசு, இத்திட்டத்தை, ‘மாற்று அரசு கொண்டு வந்த திட்டம்’ என்ற குறுகிய நோக்குப் பார்வையோடு பார்க்காமல், இதனை மேலும் விரிவாக்கிச் செயல்பட வைப்பது வெகுசிறப்பு!

தந்தை பெரியார் பிறந்த நாளான
செப்டம்பர் 17 ஆம் தேதிமுதல்…

இதுவரையில் 5 ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதிமுதல் எட்டாம் வகுப்புரை நீட்டப்பட்டு, அந்த மாணவர்களும் பயனடைவர் என்பது வரவேற்கத்தக்கது.

முந்தைய தி.மு.க. (மு.க.ஸ்டாலின்) ஆட்சியில், 2023 இல் தொடங்கி, தற்போது 17.55 லட்சம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். பள்ளியில் இடை நிற்றலைத் தடுப்பதற்காக, பசி காரணமாக கவனச்சிதறல் ஏற்படாமல் பாடங்களைக் கற்கும் நல்வாய்ப்பினை உருவாக்கி, இளநிலைக் கல்வியாளர்களிடையே புத்தெழுச்சியை ஏற்பட செய்தது!

இப்போது இத்திட்டம் நீட்டப்படுவதன் காரணமாக, மேலும் பள்ளிப் பிள்ளைகள் ‘இளங்குருத்துகள்’ கல்வி பெறும் வாய்ப்பு வலுவாகும்.

இத்திட்டத்தை விரிவாக்குவதற்குத் தமிழ்நாட்டில் வெகு மக்களுக்குக் கல்வியை மறுத்த மனுதர்மத்தைத்  தோற்கடித்து, அனைவருக்கும் கல்வி நீரோடை தாராளமாகப் பயன்பெற இயக்கம் கண்டு, கொள்கைப் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளைத் தேர்வு செய்தது மிகச் சரியானது.

தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டியாகும் வளர்நிலை ஏற்பட்டிருக்குமா?

முந்தைய ‘‘குலதர்மக் கல்வி’’ ஒழிந்திடாவிட்டால், இன்று கல்வியில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டியாகும் வளர்நிலை ஏற்பட்டிருக்குமா?

எனவே, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு மிகப்பொருத்தமாகும்.

அதுபோல, ‘அரசியலில் கட்சிக் கண்ணோட்டம்’ இன்றி, முந்தைய ஸ்டாலின் அரசுத் திட்டம் அது என்று எண்ணாமல், அந்த அடிக்கட்டுமானத்தை மேலும் விரிவாக்கித் தொடருவது தமிழ்நாட்டுத் தனிப் பண்பாடு நீடிக்கும் தன்மைக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

மாணவச் செல்வங்கள்
கல்விக் கண் பெற வழிவகை செய்தன!

முந்தைய காங்கிரஸ் அரசு, தி.மு.க. அரசு, அ.தி.மு.க. அரசு, மீண்டும் தி.மு.க. அரசு என்று மாறி மாறிவந்தாலும், நீதிக்கட்சி ஆட்சியில், தியாகராயர் சென்னை மாநகராட்சி எல்லையில் தொடங்கிய பாதை விரிவடைந்து, அதன் விழுமிய பலனை மாணவச் செல்வங்கள் – ஏழ்மை, பசி அறியாது கல்விக் கண் பெற வழிவகை செய்தன.

  1. காமராசர் ஆட்சி – பகல் உணவுத் திட்டம்
  2. அண்ணா (தி.மு.க.), கலைஞர் ஆட்சி தொடர்ந்தது
  3. எம்.ஜி.ஆர். ஆட்சி (அ.தி.மு.க.) சத்துணவுத் திட்டம் என்று அழைக்கப்பட்டது.
  4. மீண்டும் கலைஞர் ஆட்சி, 2 முட்டைகள் (அ) வாழைப்பழம் என்று சத்துணவுத் திட்டத்தை விரிவாக்கியது.
  5. மு.க.ஸ்டாலின் ஆட்சியில், பகல் உணவுத் திட்டத்தோடு, காலை உணவுத் திட்டம் முதன்முதலாகக் கொண்டு வரப்பட்டது.
  6. இப்போது வந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் மேலும் விரிவடையச் செ்ய்திருப்பது தனிச் சிறப்பு.

முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, அதற்கு முன்பு தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களை மூடவில்லையே! அப்படியே தொடர்ந்ததால்தானே, ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட்டது.

தமிழ்நாடு பெரியார் மண் என்பதாலேயே!

அதுபோல, இட ஒதுக்கீடு, சமூகநீதித் திட்டங்களும் ஆட்சி மாறுதலால், தமிழ்நாட்டில் காணாமற்போகாமல், விரிவடையக் காரணம், இது பெரியார் மண் என்பதாலேயே!

இப்படி முந்தைய ஆட்சியில் செயல்படுத்திய, மகளிருக்கு ஆயிரம் மாதந்தோறும் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்பதும் தொய்வின்றி தொடருகிறது. அடுத்து தங்கள் வாக்குறுதியில், புதிய ஆட்சியின் முதலமைச்சர் கூறியபடி, மகளிர் உரிமைத் தொகையைக் கூடுதலாகத் தருவதையும் எதிர்ப்பார்க்கின்றனர்; அது விரும்பத்தக்கதாகும்!

தி.மு.க ஆட்சியில், நல்ல திட்டங்களைக் கொண்டு வரும்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான கருத்தினைப் பிரச்சாரம் செய்தார். ‘‘எங்கள் திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிவிட்டார்கள்’’ என்று அவர் சொன்னது சரியான கருத்தல்ல, அவலமான ஒன்றாகும்.

அதை இப்போது, ‘‘எங்கள் திட்டங்களை நீங்கள் லேபிள் ஒட்டிக் கொள்கிறீர்கள் என்று குற்றச்சாற்று வைக்காமல், எங்கள் அரசின் திட்டங்கள்தான் உங்களுக்கு வழிகாட்டுகின்ற – அடித்தளமாக நிற்கின்றன’’ என்று கூறுவது உண்மையாக ஆக்கப்பூர்வ ஆளுங்கட்சி, ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி என்ற இரண்டு ஆகும். எப்போதும் முன்னுதாரணமாகத் திகழக்கூடும்.

மக்கள் நலனே முக்கியம்!

மக்கள் நலனே முக்கியம்; நல்ல திட்டங்களை, மேலும் வலிவோடும், பொலிவோடும் நடத்தினால் வரவேற்பதுதானே உண்மை ஜனநாயகம்?

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செய்யப்படுவதற்குத் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளை முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்வு செய்தது மகிழ்ச்சிக்குரிய தாகும்.

அதேநேரத்தில், மற்றொரு கருத்தை, இவ்வாட்சியின் முதல மைச்சரும் முடிவெடுத்து அறிவிப்புத் தர முன்வரவேண்டும்.

தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியார் பிறந்த நாளைச் (செப்டம்பர் 17) ‘‘சமூகநீதி நாளாக’’ அரசு கொண்டாடவும், அதுபோலவே, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை ‘‘சமத்துவ நாளாகக்’’ கொண்டாடவும் அறிவித்து உறுதிமொழி ஏற்கும் ஏற்பாட்டினைச் செய்து வரலாறு படைத்தார்!

அவர் எடுத்த உறுதிமொழி, ‘அனைவருக்கும் அனைத்தும்’ உறுதிப்படுத்தும் சமத்துவ உறுதிமொழி! அதனை நாடெங்கும் எடுத்து, அந்த நாள்களைக் கொண்டாட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும், கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளை ‘கல்வி வளர்ச்சி நாளாகக்’ பள்ளிகளில் கொண்டாட முத்தமிழறிஞர் கலைஞர் அரசு போட்ட ஆணையும் சரிவர செயல்பட முதலமைச்சர் அறிவிப்புச் செய்யவேண்டும்.

அது கட்சிகளைக் கடந்த மக்கள் நல ஆட்சியாக்கிட வாய்ப்பினை ஏற்படுத்தும்!

சிந்திப்பார்களாக!

கி.வீரமணி

    தலைவர்,

திராவிடர் கழகம்

 

16.6.2026           

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *