உரிய தீர்வு கிட்டாவிடின் அடுத்தகட்ட நடவடிக்கையில் கழகம் ஈடுபடும்!

2 Min Read

கால் மேல் கால் போட்டு அம்பேத்கர் சிலை இருக்கக்கூடாதா?
எதிர்ப்பின் பின்னணி என்ன?
மாவட்ட ஆட்சியரையும், காவல்துறையையும் அணுகி முதற்கட்டமாக ஆவன செய்க! கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

 

சேலம் ஆத்தூர் ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம்  ஒதியத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கார் அவர்களின் சிலை கடந்த 2021ஆம்  ஆண்டு அமைக்கப்பட்டது.

சிலையைத் திறக்க விடாமல் தடுத்து,
மூடி வைத்தார்கள்!

அந்த சிலை  டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  கால் மேல் கால் போட்டு அமர்திருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினம்  ஆதிக்க மனநிலை ஜாதியினர் காவல்துறையில் புகார்  கொடுத்து, அதைத் திறக்க விடாமல் தடுத்து, மூடி வைத்தார்கள்.

இந்நிலையில் கடந்த 12.7.2026 சனிக்கிழமை யன்று இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலையைத் திறந்துள்ளனர்.

சிலை திறக்கப்பட்டதால், ஞாயிற்றுக் கிழமை முழுவதும் பரபரப்பாக செய்திகள் பரவின.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலையை  மட்டும் மூடுவதின் நோக்கம் என்ன?

இதனால் மீண்டும் ஆதிக்க மனநிலை ஜாதி யினர்  ஆத்தூர் காவல்நிலையத்தில், அந்த சிலையை மூட புகார் கொடுத்தார்கள். அதன் அடைப்படையில்  காவல்துறையினர்  அம்பேத்கர் சிலையை மூடுவதற்கு முயற்சி எடுத்த நிலையில், அந்தக் கிராம இளைஞர்கள் தடுத்து, ‘‘எங்கள் ஊரில் காமராஜர் சிலை இருக்கிறது, ராஜீவ் காந்தி சிலை இருக்கிறது. ஆனால்,  இந்த நாட்டின் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலையை  மட்டும் மூடுவதின் நோக்கம் என்ன?” என்ற கேள்விகளை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கிடையே கல் வீச்சு நடந்துள்ளது. காவல்துறையினர் தடி யடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து, சுமார் பதி னைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்தகட்ட பணியைக்
கழகம் மேற்கொள்ளும்

சேலம் ஆத்தூர் மாவட்டக் கழகப் பொறுப்பா ளர்கள், முறையாக மாவட்ட ஆட்சியினரையும், காவல்துறையினரையும் அணுகி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகனின் சிலை திறக்கப்படுவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உரிய பயன் கிடைக்காத  நிலை ஏற்படின், அடுத்தகட்ட பணியைக் கழகம் மேற்கொள்ளும்.

கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போல் அண்ணல் அம்பேத்கர் சிலை இருப்பதுதான் பிரச்சினையா? இல்லை, அம்பேத்கர் சிலையே இருக்கக் கூடாது என்ற எண்ணமா?

இந்த சிந்தனையே உயர்ஜாதி ஆதிக்கம்தானே!

தமிழ்நாடு அரசை
வலியுறுத்துகிறோம்!

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரை தங்களின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறும் தமிழ்நாடு அரசு  இதில் தலையிட்டு, அண்ணல் அம்பேத்கர் சிலையை முழுமையான வகையில் திறந்து வைக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

 

கி.வீரமணி

      தலைவர்,     

திராவிடர் கழகம்

19.7.2026        

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *