* மாநிலக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவமும், மாநில அரசியலில் அவரவர் தலைமை ஏற்பதுமே சரி!
* இண்டியா கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் போக்கினை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொள்ளவேண்டும்!
மாநிலக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவமும், மாநில அரசியலில் அவரவர்கள் தலைமை ஏற்பதுமே சரி! இண்டியா கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் போக்கினை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொள்ளவேண்டும்! ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்னும் பேராபத்தை முறியடிப்பதே இண்டியா கூட்டணியின் ‘‘ஒற்றை நோக்கமாக’’ இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அய்ந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இண்டியா கூட்டணி’யின் ஒருங்கிணைப்புக் கூட்டம் டில்லியில் நேற்று (8.6.2026) ‘காண்டிடியூசன் கிளப்’பில் நடைபெற்றுள்ளது.இக்கூட்டத்தில், இண்டியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), சிவசேனா (உத்தவ்), தேசியவாதக் காங்கிரஸ் (சரத்பவார்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சிபிஅய் (எம்எல்), ஆர்எஸ்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கேரளக் காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (எம்), ஆர்எல்பி, பிஏபி, லோக் தளம், பார்வர்ட் பிளாக் மற்றும் ஷேத்காரி கம்ஹார் பக்ஷ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே, ஜேஎம்எம்மின் ஹேமந்த் சோரன் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றுள்ளனர்.
இண்டியா கூட்டணியின் மிக முக்கியமான கட்சியும், தமிழ்நாட்டில் உருவான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி மூலம் ‘இண்டியா கூட்டணி’க்கு முன்னோட்டமாகத் திகழ்ந்த இயக்கமுமான திராவிட முன்னேற்றக் கழகம் இக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. புறக்கணிக்கும்படியான நிலைமை உண்டாக்கப்பட்டது தேர்தலுக்கு முன்பும், பின்புமான காங்கிரஸ் நடவடிக்கைகள் மூலம்!
அதே போல ஆம் ஆத்மி கட்சியும் இக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை சில நாள்களுக்கு முன்பே அது தன் முடிவைத் தெரிவித்துவிட்டது.
புறக்கணிப்பிற்கு நியாயமான காரணம் இருக்கிறது!
இண்டியா கூட்டணியின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்ததுடன், அதன் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, ‘‘ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்’’ என்று உறுதியுடன் கூறி, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மொத்தமாக 40 இடங்களையும் வெற்றி பெற வைத்ததுமான திராவிட முன்னேற்றக் கழகம் நேற்றைய (8.6.2026) கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்குப் போதுமான நியாயம் இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பாசிசப் போக்குக்கு எதிரான களத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் பின் வாங்காத இயக்கம்! காரணம் பா.ஜ.க. எதிர்ப்பு என்பதற்குப் பின்னே இருப்பவை அரசியல் காரணங்களல்ல. தத்துவ ரீதியாக பா.ஜ.க.வின் அடிப்படை ஆதாரமான ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவப் பார்ப்பனப் பாசிசக் கொள்கைகளுக்கு எதிரான இயக்கம் தி.மு.க!
சமூகநீதி, சமதர்மம், மதச்சார்பின்மை, மொழி – பண்பாட்டுத் திணிப்பு, மாநில உரிமை, சுயமரியாதை, சிறுபான்மையோர் நலன், மகளிர் உரிமை, வெகுமக்களின் நலன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சாரம் ஆகியவற்றுக்கு எதிரான பாசிசப் போக்கும், பார்ப்பனிய நலன்களுக்கான அரசியல் நோக்கும் கொண்ட கட்சியே பா.ஜ.க. என்பதுதானே, அக் கட்சி எதிர்க்கப்படுவதற்கான காரணம்!
ஒற்றை நோக்கத்துடன் போராட உருவானதே
இண்டியா கூட்டணி!
ஒரே நாடு – ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்தியாவின் பன்மைத்துவத்தை ஒழித்துக் கட்டும் முயற்சி, தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை ஆகியவற்றுக்கு வழிகோலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளையும் ஓரணியில் திரட்டி, ஒற்றை நோக்கத்துடன் போராட உருவானதே இண்டியா கூட்டணி!
அந்த ஒற்றை நோக்கம் பா.ஜ.க. ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே! ஆனால், அனைத்திந்தியக் கட்சி என்ற அடிப்படையிலும், பல முறை ஆட்சி செய்த கட்சி என்ற அடிப்படையிலும் காங்கிரஸ் கட்சிக்கு, இக் கூட்டணியின் தலைமையிடத்தை வழங்கிய பிற கட்சிகளிடம் காங்கிரஸ் கட்சி எப்படி நடந்துகொண்டது என்பது தான் இப்போதைய பிரச்சினைக்கான மூலகாரணம்!
எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில், கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும், அதற்குப் பின்பும் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட முறை என்பது ஒரு கூட்டணிக் கட்சி நடந்து கொள்ள வேண்டிய அடிப்படைக் கொள்கைகளுக்கும், அறத்திற்கும் மாறானதல்லவா? அக் கட்சியின் மாநிலத் தலைமை ஒரு நோக்கில் நடந்துவந்த நிலையில், பல்வேறு நிலைகளிலும் இருந்த அதன் பொறுப்பாளர்கள் சிலர் பேசிய பேச்சுகளும், ஒரு கூட்டணியில் இருக்கும்போதே இன்னொரு கட்சித் தலைவருடன் ரகசியத் தொடர்பு கொண்டு சிலர் பேசிவந்ததும், அதனைக் கண்டும் காணாமல் இருப்பது போல் தோற்றம் காட்டிய அக் கட்சியின் இளந்தலைமையின் போக்கு, அதன் பின்னணியில் அத் தலைமையில் ஒப்புதல் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லவில்லையா? புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல!
காங்கிரஸ் கட்சிதானே கூட்டணியை உடைத்தது!
‘உறவுக்குக் கை கொடுப்போம்’ என்பதில் தி.மு.க. எத்தகைய உறுதி கொண்ட கட்சி என்பதைக் கடந்த 22 ஆண்டுகளில் காங்கிரஸ் நடைமுறைத் தலைமை புரிந்து கொள்ளவில்லையா? இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அக் கட்சியின் வலுவான நிலையை மீண்டும் கொண்டுவந்த சோனியா காந்தி அம்மையாராலும், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவாலும் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்கமாகப் பார்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஒத்துழைப்பும் எத்தகையது என்பதையும், அதன் தொடர்ச்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் காலத்தில் எத்தகைய கட்டுக்கோப்பும், கொள்கை உணர்வும் கொண்ட கூட்டணியாக வைத்திருந்தார்கள் என்பதையும் அனுபவப் பூர்வமாகப் பார்த்த பின்னும், மாநிலத்தில் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சிதானே அந்தக் கூட்டணியை உடைத்தது? அது எத்தகைய மோசமான போக்கு என்பதைக் கண் முன்னால் கண்டோமே!
இந்த நிலைதானே ஏறத்தாழ இந்தியா முழுமையும் உள்ள பல மாநிலங்களிலும் நடந்தது. மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் ஆட்சி செய்த கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் அம் மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சுகளும் சரியானவையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி வைத்துக் கொண்டு மாநிலத்தில் எதிர்க்க வேண்டிய சூழல் இருக்கும் என்று தெரிந்துதானே இரு கட்சிகளும் அதனை ஒப்புக் கொண்டன. ஆனாலும், அதை மிகுந்த தெளிவான பார்வையில் எதிர்கொள்ளாமல், பாரதிய ஜனதாவுடன் இணைத்துவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பேசியது காங்கிரஸ் அல்லவா?
தேசிய அளவில் ஒருபோக்கும், மாநிலத்தில் ஒரு போக்கும் என்றால், அதிலும் விரும்பத்தகாத பேச்சுகள் இருக்கும் என்றால், அக் கட்சியின் இரத்த நாளங்களான தொண்டர்களிடம் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? தலைவர்கள் சந்தித்து, தேநீர் அருந்தி, ஒளிப்படத்திற்குப் போஸ் கொடுத்துவிட்டால் தொண்டர்க ளிடம் ஒருங்கிணைப்பு ஏற்பட்டு விடுமா?
உத்தரப் பிரதேசம், பீகார், மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கூட காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதமும், செய்த தாமதங்களும், கூட்டணியில் விரிசலுக்குக் காரணங்களாக அமைந்ததே!
சறுக்கல் யாரால்?
கூட்டணியின் தலைமைப் பொறுப்புக்குரிய நீண்ட வரலாறு கொண்ட கட்சி, அதற்குரிய பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா? அக் கட்சியின் இளந்தலைமை மீது கொண்டிருந்த மதிப்பும், அவரை உயர்த்திப் பிடித்து, இந்தியாவின் நம்பிக்கையாக முன்னிறுத்திய தன்மையும், அதை முன்னிறுத்திய இயக்கத்திடமே அவர் நடந்துகொண்ட விதத்தால் சேதாரமாகவில்லையா? தமிழ்நாட்டு மக்களால் வளரும் தலைவராகப் பார்க்கப்பட்டவருக்கு இன்று அம் மக்களிடமே சறுக்கல் ஏற்பட்டுள்ளது அவர்களுடைய நடவடிக்கைகளால் மட்டும்தானே?
திராவிட முன்னேற்றக் கழகம் இத்தகைய முடிவை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் யாரால் தரப்பட்டது? இந்த முடிவு இண்டியா கூட்டணிக்கு வலு சேர்க்கக் கூடியதா? பலவீனப்படுத்தக் கூடியதா?
நேற்றைய கூட்டத்திலேயே சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் கட்சியின் போக்கைக் கண்டித்தும், சுட்டிக்காட்டியும் பேசியுள்ளதை அக் கட்சி மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும்; தன்னைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இண்டியா கூட்டணியின் வலிமையைச் சிதைக்கும் வேலையை காங்கிரஸ் கட்சியே செய்யக் கூடாது.
திராவிடர் கழகம் தொடர்ந்து
அறிவுறுத்தி வருகிறது!
மாநிலங்களில் எந்தக் கட்சி வலுவான கட்சியாக இருக்கிறதோ, அதன் தலைமையில் மாநிலத் தேர்தல்களைச் சந்திப்பதையும், தேசிய அளவில் காங்கிரஸ் அதன் பொறுப்பை ஏற்பதும் தானே சரியான தீர்வாக இருக்க முடியும். இதனைத் தான் திராவிடர் கழகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளம் போன்ற மாநிலங்களில் அக் கட்சி தலைமை ஏற்கலாம். ஆனால், டில்லி, மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலெல்லாம் தலையிடுவது இண்டியா கூட்டணியை வலுவிழக்கவே செய்யும்.
எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த கட்சிக்குப் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சைத் தோற்கடிக்க வாய்ப்புள்ளதோ, அக்கட்சியே அம்மாநில கூட்டணிக்குத் தலைமையேற்கும் வாய்ப்பளித்தால்தான், இண்டியா கூட்டணியின் நோக்கம் நிறைவேறும்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற ஆபத்தான பாசிசத்தை இந்தியாவின் ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றுவது என்ற ஒற்றை நோக்கம் தான் இண்டியா கூட்டணியை நிலைக்கச் செய்யும்! அதைவிடுத்து, மாநில அரசியலில் தங்களைப் ‘பழங்காலத்தைப் போல’ நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவது தனித்த நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி செயல்படுமேயானால், பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான ஒற்றை வாய்ப்பான இண்டியா கூட்டணி அதன் நோக்கத்தைச் சென்றடையாது! கடிவாளம் கட்டிய குதிரையாகச் செயல்படுவதுதான் இப்போதைய ஒற்றை வாய்ப்பு!
ஒரு பேராபத்தை எதிர்த்து நிற்கிறோம் என்ற
புரிதல் வேண்டும்!
‘நாம் எதிர்த்து நிற்பது ஓர் அரசியல் கட்சியை அல்ல; ஒரு பெரும் வலைப் பின்னலுடனும், கார்ப்பரேட் பண பலத்துடனும், அதிகார பலத்துடனும், அடியாள் பலத்துடனும், குறுக்கு வழிகளிலும் குள்ள நரித்தனத்திலும் மூழ்கி, நாட்டைப் பதம் பார்க்க எழுந்து நிற்கும் ஒரு பேராபத்தை’ என்ற உணர்வும், புரிதலும் சரியாக இருக்குமேயானால் மட்டுமே ‘இண்டியா கூட்டணி’ அது உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியும்!
தங்களது போக்கினை மாற்றி, திருத்திக் கொள்ளாவிட்டால் நட்டம் காங்கிரசுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கே நட்டம்! ஜனநாயகம் படுகுழிக்குத் தள்ளப்பட்டு, பாசிசமே மகுடம் சூடும்!
இதைச் சரி செய்வதற்கான வாய்ப்புகள் கண்முன்னே இருக்கவே செய்கின்றன. பக்குவமான அரசியல் புரிதலுடன் அதைக் கண்டு, இனியாவது தெளிவு கொள்ள வேண்டியது காங்கிரஸ் கட்சியின், குறிப்பாக ராகுல்காந்தியின் கடமை! அறிவுறுத்தவேண்டியது அதன் அனுபவம் மிக்க மூத்த தலைவர்களின் தலையாயக் கடமையாகும்!
சில்லறை வெற்றி தரும் ‘ஆரிய மாயை’யை அணைத்துக் கொண்டு, சில துதிபாடிகளை நம்பினால், அதன் விளைவாக ஏமாற்றமே மிஞ்சும்!
ஆழ்ந்து சிந்திப்பதும், செயல்படுவதும் முக்கியம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
9.6.2026
