ஆப்கனில் புர்கா விதிகளை மீறியதாக 30 பெண்கள் கைது – அய்.நா அமைப்பு தகவல்

காபூல், ஜூன் 14- ஆப்கானிஸ் தானில் புர்கா விதிகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்கும் அய்நா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புர்கா அணிய வேண்டும், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தக் கூடாது போன்ற உத்தரவுகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஜூன் 9ஆம் தேதி தலிபான்களால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலும், இந்த நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன.
இந்த நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதில், குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அய்நா மனித உரிமைகள் கவுன் சிலால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை வல்லுநர்கள் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், இதற்காக உயிரிழப்பை ஏற்படுத்தும் வன்முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. ஆப்கானிஸ்தானில் நடைமுறை அதிகார மய்யமாகத் திகழும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் கையெழுத்திட்டுள்ள பன்னாட்டு மனித உரிமைகள் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
சமத்துவம், அமைதியான முறையில் ஒன்று கூடுதல், கருத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், தடுப்புக் காவலில் இருந்து பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகள், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் நிலைமை மேலும் மோசமடைவதை தடுப்பதற்கும் அவசியம்” என தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அய்நாவின் பணிகளை வழிநடத்தும் துணை சிறப்புப் பிரதிநிதி ஜார்ஜெட் காக்னான் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் கைது செய்யப்படுவது அல்லது தடுத்து வைப்பது சமூகத்தில் அவருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இதனால், விடுதலையான பிறகும் அவர்கள் குடும்ப வன்முறைக்கும் சமூக வன்முறைக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *