தந்தை பெரியாரின் உருவச் சிலைகளோடு ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை’ அமைத்துச் சாதனை படைத்தார்!

முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கை!
மறைந்தும் மறையாத நம் கலைஞரின் பிறந்தநாள் விழாவினை
தாய்க்கழகம் 103 ஊர்களில், பெருமிதப் பூரிப்போடு கொண்டாடுகிறது!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

தந்தை பெரியாரின் உருவச் சிலைகளோடு ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை’ அமைத்துச் சாதனை படைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். மறைந்தும் மறையாத நம் கலைஞரின் பிறந்தநாள் விழாவினை தாய்க்கழகம் 103 ஊர்களில், பெருமிதப் பூரிப்போடு கொண்டாடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் அடையாளப்படுத்திய நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (3.6.2026).

பல்கலைக் கொள்கலனாகத் திகழ்ந்தவர்!

மாணவப் பருவத்திலேயே ஹிந்தி மொழித் திணிப்புக்­­கும், அதன்மூலம் (சமஸ்கிருத) ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பையும் நடத்த முயன்ற காலத்தில் (1937–1938) தனது 14 ஆவது வயதில், ‘புலி வில் கயல்’ பொறித்த கொடியைக் கையிலேந்தி,

‘‘ஓடிவந்த ஹிந்திப் பெண்ணே கேள்! — நீ

தேடிவந்த நாடிதல்லவே! — புறப்பட்டுப் போ!’’

என்ற பாவலர் பாலசுந்தரத்தின் பாட்டினை முழங்கியவர். தந்தை பெரியார் தம் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஈரோட்டுக் குருகுல வாசத்தினால் பெரிதும் கொள்கைச் செதுக்கம், லட்சியத்தில் மாறாப் பற்றும் கொண்டு, பல்கலைக் கொள்கலனாகத் தம் – இடையறா உழைப்பின்மூலம் திராவிட இயக்கத் தொண்டராகி, பேரறிஞர் அண்ணாவின் பாசத் தம்பியாக அரை நூற்றாண்டு காலம் பயணித்தார். தன் குருநாதரான தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சட்டங்களாகவும், திட்டங்களாகவும் மாற்றி, ஒரு பெரும் சமூகப் புரட்சியை நடத்திய சரித்திர நாயகர் அவர். அவரே நமது ஒப்பற்ற, ஆற்றல்மிக்க ஆளுமை!.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரால் பாராட்டப் பெற்ற வித்தகர்!

பேச்சு, எழுத்து, நாடகம், ஆட்சி ஆளுமை, போராட்டக் களத்தில், தன்னை வார்த்தெடுத்த தலைவர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களாலேயே பாராட்டுப் பெற்ற ஒரு வியக்கத்தக்க வித்தகர் நம் கலைஞர்.

ஆரியத்தால் நம் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பிறவி இழிவான ‘சூத்திர’, ‘பஞ்சம’ பட்டங்களை ஒழித்து, இழந்த மானத்தை மீட்டெடுக்கத் தந்தை பெரியார் தனது 95 ஆம் வயதிலும் களம் காண முயன்றார். அய்யாவின் இறுதி விருப்பமான ஜாதி-தீண்டாமை ஒழிப்பின் முக்கிய அம்சமாக, ‘‘ஆதிதிராவிடர் உட்பட அனைத்து ஜாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்’’ என்ற போராட்டம் அமைந்தது.

நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்!

அப்போது, ‘‘அதைச் சட்டத்தின் மூலமே சாதித்துக் காட்டுவோம் அய்யா’’ என்று உறுதி அளித்து, அரை நூற்றாண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு அதற்கான சட்டத்தை இயற்றி, நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் நம் முதலமைச்சர் கலைஞர்!

எனினும், ‘‘முழுமையடையவில்லையே’’ என்ற ஏக்கம் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்தது. பெரியார் மறைந்தபோது, அவருக்குத் தமிழ்நாடு அரசின் முழு அரசு மரியாதை வழங்க முடி யாமல் போன ஆதங்கமும் நீடித்தது. இதையடுத்து வந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அதனைச் செயல்படுத்தி, அவ்வெற்றியை முழுமையடையச் செய்தார்.

தந்தை பெரியாரின் உருவச் சிலைகளோடு
‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை’ அமைத்துச் சாதனை படைத்தார்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், நாடெங்கும் ஜாதி ஒழிப்பிற்கான முன்னெடுப்பாக – வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் – அனைத்து ஒன்றி யங்களிலும் தந்தை பெரியாரின் உருவச் சிலைகளோடு ‘பெரியார் நினைவு சமத்துவபுரங்களை’ அமைத்துச் சாதனை படைத்தார்.

மூத்த மொழியான தமிழை ‘நீச பாஷை’ என்றும், சமஸ்கிருதத்தைத் ‘தேவ பாஷை’ என்றும் சொல்லி, ஜாதிப் பாகுபாட்டைப் போல நம் மொழியைத் தாழ்த்தி வைத்திருந்த ஆதிக்கத்தை உடைத்தவர் கலைஞர். தமிழ் மொழி ‘நீச பாஷை’ அல்ல, அது ஒரு ‘செம்மொழி’ என்று சட்டம் இயற்றி அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். அதன் பிறகே, வழக்கொழிந்த வடமொழியான சமஸ்கிருதமும் கலைஞர் போட்ட பாதையின் மூலமாக அந்தத் தகுதியைப் பெற்றது. இது சாதாரண சாதனை அல்ல!

இந்திய சமூகநீதிச் சரித்திரத்திலேயே முதன் முறையாக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கெனத் தனித்துறையையும் தனி அமைச்சகத்தையும் ஏற்படுத்தியவர்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  சமூகநீதியில் ஒளிவீச்சுத் தொடரும்படி செய்தவர்.

தாய்க்கழகத்தின் சார்பில்,
103 ஊர்களில், 103 கூட்டங்கள்!

திரைப்படங்கள், நாடகங்கள், புதினங்கள், சட்ட மன்ற நடவடிக்கைகள், போராட்டக் களங்கள், சென்னை கோட்டைக்கு முன்பே, பாளையங்கோட்டை சிறைக் கோட்டத்திற்குச் சென்று, தியாகத் தழும்புகளைப் பெற்றதோடு, காங்கிரஸ் அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையின்போது, தி.மு.க.வை ‘‘தாய்க்கோழி, தனது குஞ்சுகளைக் காப்பதுபோல’’ காத்து, தோல்விகளால் துவண்டுவிடாமல், கொள்கைச் சிங்கமாய், ஆளுமையில் அவனியோரின் பாராட்டு மழையில் நனைந்து, மறைந்தும் மறையாத நம் கலைஞரின் பிறந்தநாள் விழாவை, தாய்க்கழகம் 103 ஊர்களில் தோழமைக் கட்சிகளோடு இணைந்து நடத்துகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்குக் ‘கலைஞர் வெளிச்சம்’ பற்றி விளக்கும் நோக்கோடும், தாயின் பெருமிதப் பூரிப்போடும் இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம்!

கொள்கையாக என்றும் வாழ்கிறார் கலைஞர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

3.6.2026         

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *