தமிழ்நாட்டிற்குக் கருநாடகம் அளிக்கவேண்டிய காவிரி நீரில் இவ்வாண்டு பற்றாக்குறை 6.3 டி.எம்.சி.
ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து இதற்கொரு தீர்வு காண வேண்டாமா?
‘அகண்ட’ காவிரி தமிழ்நாட்டை விட்டு ‘அகன்ற’ காவிரியாகிவிட்டதே!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து இதற்கொரு தீர்வு காண வேண்டாமா?
‘அகண்ட’ காவிரி தமிழ்நாட்டை விட்டு ‘அகன்ற’ காவிரியாகிவிட்டதே!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி அறவே பாதிக்கும் வகையில், கருநாடக அரசு, தமிழ்நாட்டிற்குரிய நீரைத் தர மறுக்கும் நிலையில், ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இதற்கொரு நியாயமான, சட்ட ரீதியான தீர்வைக் காணவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் – குறிப்பாக, காவிரி டெல்டா விவசாயிகளின் தொடர் துன்பங்களையும், இயற்கைச் சோதனை களையும் கருநாடக ஆட்சியாளர்களாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் இருப்பதில், அதிகவேகத்துடன் செயல்படவும், இழுத்தடிக்கவும் தவறுவதே இல்லை. தற்போது காவிரி ஆணையமோ ஒரு சார்பு ஆணையம்போல் தோன்றும் வண்ணம், பங்கீட்டை அமுல்படுத்தக்கூட வற்புறுத்தி கவனம் செலுத்தாத நிலை உள்ளது!
இவ்வாண்டு மிகப்பெரிய சோதனைக்குமேல் சோதனை! விளைவு…? விவசாயிகளின் வேத னைக்குமேல் வேதனையும், துன்பமும் நாளும் பெருகி, நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே முழுமையாகப் பறிக்கும் வண்ணம் பல்வேறு தொடர் துன்பங்கள்!
காவிரி நீர்ப் பங்கீடு சிக்கல்!
- ‘‘மேட்டூர் அணையை வழக்கமான ஜூன் 12 வாக்கில் திறந்துவிட்டு, நமக்குக் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு ஏற்படும்’’ என்ற விவசாயிகளின் நம்பிக்கைப் பொய்த்துப் போனது.
- தென்மேற்குப் பருவழை சரியாகப் பொழிய வில்லை என்ற இயற்கையின் வஞ்சனை.
- காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் கருநாடக அரசு தரும் தீராத சிக்கல்
போன்றவற்றை – விளக்கமாகத் தமிழ்நாடு அரசும், புதிய முதலமைச்சரும் புரிந்துகொண்டு, உற்ற தீர்வு கண்டாக வேண்டியது அவசர அவசியம் ஆகும்!
காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு (2026) ஜூன் மாதத்தில் கரு நாடகாவிலிருந்து, தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீருக்குப் பதிலாக, பிலிகுண்டுலு எல்லையில் வெறும் 2.915 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 6.3 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், விவசாய சாகுபடிப் பரப்புச் சுருங்கி உணவு உற்பத்திக் குறையும் விரும்பத்தகாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
புதிய ஆட்சியினர் புரிந்துகொள்ளவில்லையா?
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, குறுவைக்காக ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்து, 3.55 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும் என்ற போதே, நமது அனுபவப்பட்ட விவசாயப் பெருமக்கள், ‘‘தண்ணீர் இல்லாது எப்படி இது சாத்தியப்படும்’’ என்ற அவர்களது நியாயமான சந்தேகத்தை எழுப்பினர். புதிய ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை!
தஞ்சை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இவ்வாண்டு 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி சாத்தியப்படக் கூடும் என்கின்றனர்.
முன்பு ஆறுகள், பாசன வாய்க்கால்கள் மற்றும் சில முயற்சிகள்மூலம் பாசன வசதி பெற்று வந்த நிலங்கள், டெல்டா மாவட்டங்கள் வெறும் தரிசு நிலங்களாகவே இப்போது காட்சியளிக்கின்றன என்பது கொடுமையிலும் கொடுமை!
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு 1.94 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இவ்வாண்டு இப்போது வெறும் 89,000 ஏக்கர் நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது!
மற்றொரு கொடுமையும் சுட்டிக்காட்டத்தக்க தாகும்.
தடையற்ற மும்முனை மின்சாரமும் கிடைப்பதில்லை!
நிலத்தடி நீரைப் பயன்படுத்தியும் சில பகுதி களில் குறுவைப் பயிர் செய்து வரும் விவசாயிகள் நிலங்களுக்குத் தடையற்ற மும்முனை (Three-Phase) மின்சாரம் கிடைப்பதும் இல்லை.
புவி வெப்ப மயமாகும் எல்–நினோ காரணமாக, கடுமையான வெப்பத்தினால், பயிர்கள் வாடிக் கருகி வருவதோடு, நிலத்தடி நீரும் வெகுவாகத் தாழ்ந்து வருவது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் நிலை!
பயிர் கருகி வரும் காட்சி, வள்ளலாரின் பழைய பாட்டை மாற்றிப் பாடச் சொல்லும் வேதனையின் வெடிப்பாகிறது!
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்பதை மாற்றி, ‘கருகியப் பயிரைக் கண்டு, எமது விவசாயிகள் இதயத்தில் கண்ணீர் வடிக்கும் நிலை அய்யகோ!’ என்று பாடிட வேண்டும் போல. நாளும் இந்த வேதனை விரியும் நிலையே காட்சியாகிறது!
விவசாயிகளின் கிராமப் பொருளாதாரம் வெங்கொடுமைச் சாக்காட்டினை நோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்த, ஒன்றிய – மாநில அரசுகள் உடனடியாக தக்கப் பரிகார நடவடிக்கைகளை எடுக்கவேண்டாமா?
மேட்டூர் அணையில்
நீர் இருப்புக் கவலைக்குரியது!
நீர் இருப்புக் கவலைக்குரியது!
மேட்டூர் அணை நீர் நிலவரம்பற்றி அறி யும்போது, அது விவசாயிகளின் கவலையை மிகவும் அதிகப்படுத்துவதாகவே உள்ளது.
93.47 டி.எம்.சி. நீர் இருப்பு இருக்கவேண்டிய இடத்தில், தற்போது வெறும் 38.6 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது.
கருநாடக அரசுக்கோ, கருணை மறந்த அணுகு முறையே அன்றும், இன்றும்!
குறுவை சாகுபடி மட்டுமல்ல, சம்பா சாகுபடியும் இப்போது எப்படி நடக்கும் என்ற அச்சத்தையே தருகிறது.
உடனடியாகத் தமிழ்நாடு அரசு, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக டெல்டா மாவட்டங்களை அறிவித்து, விரைந்து உரிய நிவார ணங்களையும், உதவிகளையும் தர வேண்டியது அவசர அவசியம் மிக்கதாகும்.
டெல்டா விவசாயிகளின் மற்றொரு வேதனை – நெல் கொள்முதல் பற்றிய தமிழ்நாடு புதிய அரசின் திட்டவட்ட கொள்கை – நிலைப்பாடு – செயல் வேகம்பற்றிய குழப்பம்!
மழை, வெள்ளம் பாதிப்புக்கிடையில் கிடைத்த அறுவடையில் நெல்லுக்குரிய விலையும், அது விற்பனை செய்யப்பட வேண்டிய கட்டத்தில், பருவமழை பாதிப்பினால் ஏற்படும் பாதுகாப்பின்மை யும் டெல்டா விவசாயிகளை அச்சுறுத்துகின்றன!
இதற்குச் சரியான வகையில் தமிழ்நாடு அரசும், கொள்முதல் அமைச்சுத் துறையும் உரிய தீர்வினை உடனடியாக ஏற்படுத்துவதும் அவசரம்,
அவசியம்!
என்ன செய்யப் போகிறது
தமிழ்நாடு அரசு?
தமிழ்நாடு அரசு?
காவிரி நீர்ப் பங்கீடு சரிவர நடைபெற வேண்டும். இதுபோதாது என்று ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ போன்று, மேகதாது புதிய அணைத் திட்டம் என்பதன்மூலம் அகண்ட காவிரி, தமிழ்நாட்டை விட்டு அகன்ற காவிரியாகும் நிலை!
இந்த சட்ட விரோத, நியாய விரோத நட வடிக்கைகளை சரியான வகையில் தடுத்து நிறுத்தவேண்டாமா?
தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.7.2026
