ஒன்றிய – மாநில அரசுகள் எடுக்க வேண்டிய உடனடி முடிவுகள்!

3 Min Read

எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவது என்பது ஏதோ ஒரு சலுகை அல்ல,
அது மக்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கடமை!

சென்னை, ஜூன் 2 பன்னாட்டு சூழல்களையும், மேற்கு ஆசியப் பதற்றங்களையும் காரணம் காட்டி, அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. இது வெறும் வாகன ஓட்டிகளின் பணப்பையை மட்டுமே பாதிக்கும் விஷய மல்ல; ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே உலுக்கி, நடுத்தர மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு முடக்கும் ஒரு பேராபத்து என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் முதலில் உணர வேண்டும்.

எரிபொருள் விலை உயர்வு என்பது சாமானிய மக்களின் அன்றாடப் பிழைப்பில் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

மாதச் சம்பளக்காரர்கள், சிறு வியாபாரிகள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, போக்குவரத்திற்காகக் கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பகிர்மானப் பிரிவில் (Delivery boys) உள்ள பணியாளர்களின் ஒரு நாள் வருமானம் இந்த விலை உயர்வால் பாதி யாகக் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாமலும், சொந்தப் பணத்திலிருந்து எரிபொருள் போட முடியாமலும் அவர்கள் திணறி வருகின்றனர்

விவசாயத்தில் டிராக்டர்கள், நீர் இறைக்கும் பம்புகள், அறுவடை இயந்திரங்கள் என அனைத்திற்கும் டீசலே முக்கியம். டீசல் விலை உயர்வால் சாகுபடிச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது

டீசல் விலை உயர்வு என்பது நாட்டின் ஒட்டுமொத்த சரக்குக் போக்குவரத்து (Logistics) செலவையும் நேரடியாக உயர்த்துகிறது. இதன் விளைவாக, சந்தைக்கு வரும் அனைத்துப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

காய்கறிகள், பால், பருப்பு, சமையல் எண்ணெய் முதல் கட்டுமானப் பொருள்கள் வரை அனைத்தின் விலையும் 10% முதல் 15% வரை உயர்ந்துள்ளது. எளிய மக்களின் உணவுத் தட்டுகளின் அளவு சுருங்கி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மக்கள் வாழ்வாதாரம் முன்னேற ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய உடனடி முடிவுகள்

மக்களின் வாங்கும் திறனை மீட்டெடுக்கவும், பொருளா தாரத்தை முடக்கத்தில் இருந்து காக்கவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பரஸ்பர  குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு, ஒருங்கிணைந்து சில அவசரக் கால முடிவுகளை எடுக்க வேண்டும்:

ஒன்றிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் கலால் வரியை (Excise Duty) உடனடியாகக் குறைக்க வேண்டும்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகளுடன் பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்.

ஏழை, எளிய குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் முழுமையாக வழங்க வேண்டும்.

மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

மாநில அரசுகள் தங்களின் விற்பனை வரியைக் குறைத்து மக்களுக்கு நேரடி விலைக் குறைப்பை வழங்க வேண்டும்.

அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தாமல் பராமரிக்க, டீசல் மானியத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களின் கள்ளச்சந்தை மற்றும் செயற்கை விலை உயர்வைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மட்டும் இல்லை; அது சாமானியனின் அடுப்படியிலும், அவனது நிம்மதியான வாழ்விலும் பிரதிபலிக்க வேண்டும். எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவது என்பது ஏதோ ஒரு சலுகை அல்ல, அது மக்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கடமை. எனவே, ஒன்றிய-மாநில அரசுகள் பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் வரிக் குறைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முன்வர வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *