அய்தராபாத், மே 26- தெலங்கானா மாநில தலைநகர் அய்தராபாத்தை சேர்ந்த சிறுநீரகவியல் துறை மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனைக்கு சென்று ரோபோ அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றார்.
இந்நிலையில், வூஹானில் இருந்து 3,000 கி.மீ. தொலைவில் உள்ள அய்தராபாத் மருத்துவமனையில் உள்ள மருத்துவப் பயனாளிக்கு அறுவை சிகிச்சை செய்தார். இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்கள் நீடித்தது.
அய்தராபாத் மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு, சிறப்பு ரோபோ கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அதேநேரம் வூஹானில் உள்ள மருத்துவமனையில் இருந்த மருத்துவர் சையது முகமது கவுஸ், ரிமோட் கன்ட்ரோல் மூலம் அய்தராபாத்தில் உள்ள ரோபோ கருவிகளை இயக்கி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
5ஜி தொழில்நுட்பம், 3டி ஒளிப்படக் கருவிகள் மற்றும் செயற்கைக்கோள் இணைப்பு உதவியுடன் சீனாவில் இருந்து அய்தராபாத்தில் உள்ள ரோபோ கருவிகள் இயக்கப் பட்டன. இந்திய மருத்துவத் துறையில் இது புதிய முயற்சி ஆகும் என்று மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இதுவரை சீனாவில் தூரக்கிழக்கு சாங்காய் மாகாணத்தில் இருந்து பல ஆயிரம் கிலோமிட்டர் வடக்கில் உள்ள திபெத்திற்கு அருகில் உள்ள காரகோரா என்ற பகுதியில் இருந்த மருத்துவப் பயனாளிக்கு அறுவை சிகிச்சை செய்தது சாதனையாக இருந்த நிலையில் தற்போது நாடு விட்டு நாடுகடந்து இணையவழி அறுவை சிகிச்சை செய்து அறிவியலின் அடுத்த பாய்ச்சலுக்கு மருத்துவ உலகம் சென்றுள்ளது.
