விமான நிலைய இயந்திரத்தின் குளறுபடி மசாலா பொடியை ஹெராயின் என்று கூறி தொழிலதிபர் 57 நாட்கள் சிறையிலடைப்பு!

உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

போபால், மே 24- மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்திலிருந்து டில்லிக்குச் செல்வதற்காகத் தொழிலதிபர் அஜய் சிங் என்பவர் தனது லக்கேஜ்களுடன் வந்துள்ளார்.

அங்கிருந்த சிஅய்எஸ்எஃப் அதிகாரிகள் நடத்திய வழக்கமான சோதனையின் போது, அஜய் சிங்கின் பையிலிருந்த பிராண்டட் மசாலா பாக்கெட்டுகளை ‘எக்ஸ்புளோசிவ் டிரேஸ் டிடெக்டர்’என்ற இயந்திரம் மூலம் சோதித்தனர்.

அப்போது அந்த இயந்திரம், அவர் வைத்திருந்த மசாலா பொடியில் ஹெராயின் இருப்பதாகவும், கரம் மசாலா பொடியில்  ரசாயனப் போதைப் பொருள் இருப்பதாகவும் தவறான முடிவைக் காட்டியுள்ளது.

இயந்திரத்தை நம்பி அவசரக் கைது

இந்த ஆரம்பக்கட்ட ரிப்போர்ட்டை மட்டுமே நம்பிய அதிகாரிகள், அஜய் சிங்கை உடனடியாகக் காந்தி நகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்  கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.

அதரப்பழசான மாநில ஆய்வகம்

பறிமுதல் செய்யப்பட்ட மசாலா பாக்கெட்டுகள் உண்மைத்தன்மையை அறிய போபாலில் உள்ள மாநிலத் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், பல நாட்கள் மாதிரிகளை அப்படியே வைத்திருந்த லேப் அதிகாரிகள், “எங்களிடம் இந்தப் போதைப்பொருளைச் சோதிப்பதற்கான போதிய நவீன உபகரணங்கள் இல்லை” என்று கூறி மாதிரிகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர்

சமையல் மசாலா பொடி

இதையடுத்து, அந்த மாதிரிகள் அய்தராபாத்தில் உள்ள மத்தியத் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட இறுதிப் பரிசோதனையில், அதில் எவ்விதப் போதைப் பொருளும் இல்லை; அது வெறும் சமையல் மசாலா பொடி தான் என்பது உறுதியானது.

ஆனால், இந்த ரிப்போர்ட் வருவதற்குள், எந்தத் தவறும் செய்யாத அஜய் சிங் 57 நாட்கள் சிறை தண்டனையை அநியாயமாக அனுபவித்துவிட்டார்

இந்த வழக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தீபக் கோட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டு கோபமடைந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள்:இயந்திரங்கள் இறுதி ஆதாரம் அல்ல: விமான நிலையங்களில் இருக்கும் ETD இயந்திரங்கள் வெறும் ஆரம்பக்கட்டச் சந்தேகத்தை மட்டுமே காட்டக்கூடியவை. இறுதி தடய அறிவியல் (FSL) அறிக்கைக்குத் தான் சட்டப்பூர்வ முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

வாழ்வுரிமை பறிப்பு

மாநிலத்தில் ஒரு தரமான மற்றும் நவீன தடய அறிவியல் ஆய்வகம் கூட இல்லாததால், ஒரு நபர் 57 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். இது அவரது அரசியல் சாசன வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாகும்.

ரூ.10 லட்சம் இழப்பீடு

அநியாயமாகச் சிறை சென்ற தொழிலதிபர் அஜய் சிங்கிற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

திருச்சியில் பயிற்சி செவிலியர் மரணம்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை
மருத்துவர்கள் குழு

நேரில் ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

திருச்சி, மே 24- திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மரணம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.

மருத்துவக் கண்காணிப்பாளர்
தலைமையில் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பாஸ்கர் தலைமையிலான இந்தச் சிறப்புக் குழுவினர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விரிவான ஆய்வு நடத்த உள்ளனர்.

குழுவின் முக்கிய பணிகள்

மரணத்திற்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துதல், விசாரணை நிறைவடைந்த பின், முழுமையான அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்தல் குழுவின் முக்கிய பணிகளாகும்.

பயிற்சி செவிலியரின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டிருப்பது, இச்சம்பவத்தின் தீவிரத்தைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *