கேள்வி: “வி.வி.பேட்டில் இருக்கும் காகிதச் சீட்டையும் தேர்தல் ஆணையம் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றி அனைத்து வகையான ஆலோசனைகளையும், வழங்கத் தயாராக இருக்கிறோம்” என அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தினைத் தெரிவித்து வருகின்றனரே?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1
பதில்: அவர்களது அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வரவேற்க வேண்டும். “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்” என்ற பழமொழி போல், “மடியில் கனமில்லை” என்றால் தேர்தல் ஆணையம் திறந்த மனத்தோடு இதனை ஏற்க முன்வர வேண்டும்.

கேள்வி: மேற்கு வங்க மேனாள் முதலமைச்சர் மம்தாவை மய்யப்படுத்தி இரண்டு விசாரணை ஆணையங்களை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அமைத்துள்ளாரே – பொது நலத்தினாலா? பழிவாங்கும் நடவடிக்கையா?
– ச.மலர்விழி, கோவை
பதில்: இதைச் சாதாரண எளிய மக்கள்கூட புரிந்து சொல்வார்கள், பச்சைப் பழிவாங்கல் படலத்தின் தொடக்கம் என்பதை!
கேள்வி: உலகப் பொது அமைதிக்குக் குந்தகமாக ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திருந்துவது எப்போது?
– க.இராசேந்திரன், வால்பாறை
பதில்: “மூர்க்கனும் முதலலையும் தங்கள் இயல்பிலிருந்து மாறித் திருந்துவது” எப்போதோ, அப்போது இவரும் திருந்தக் கூடும்!
கேள்வி: தி.மு.க.விற்கு எதிராகப் பலரும் ஒருமுகமாக நின்று பரப்புகின்ற வதந்திகளையும், அவதூறுகளையும் எளிதாக மக்கள் நம்புவது ஏன்?
– ச.நாகராஜன், கொளத்தூர், சென்னை
பதில்: அவதூறுகளும், பொய்ச் செய்திகளும் எப்போதும் காற்று வேகத்தில் பரவும். உண்மையோ நிதானமான ‘பாதயாத்திரை’தான் செய்யும் – அறிந்த தத்துவம்தானே!

கேள்வி: வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளபோது ஏன் வாக்களிக்கக் கூடாது? அவர்களைச் சிறையில் அடைப்பது சரியா?
– கே.விஜயகுமார், வேலூர்
பதில்: அவர்களுக்குக் குடிஉரிமை, நம் நாட்டிற்கு வந்து வாக்களிக்கும் உரிமை இருந்தால் ஒழிய, வாக்களிப்பது தவறு – சட்டப்படி! இதுபற்றி அந்த நாட்டுத் தகுதி, நம் நாட்டுத் தேர்தல் சட்ட விதிகள் – இவைகளைப் பொறுத்தே சரியான விடை சொல்ல இயலும்! நம் நாட்டில் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர் வாக்களிக்க அனுமதியில்லை.
கேள்வி: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ஆந்திராவில் பிறக்கும் 3ஆவது குழந்தைக்கு 30 ஆயிரம், 4ஆவது குழந்தைக்கு 40 ஆயிரம் என்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவின் அறிவிப்பு ஏற்கக் கூடியதா?
– எம்.வரதராஜுலு, ஊத்துக்கோட்டை
பதில்: விவேகமற்ற அரைவேக்காட்டு அபத்த முடிவு. ஒன்றிய அரசின் கொள்கை முடிவான குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிரான போக்கு இது என்பது ஒருபுறம் என்றால், மகளிரை வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மாற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!ஒன்றிய நிதி வசதி வளர்ந்த மாநிலங்களுக்குக் கிடைக்காது என்ற கொள்கைக்காக மாநில அரசுகள் வளர்ச்சியற்று பின்தங்கியிருந்தால்தான் அதிக பணம் வரும் என்று சொல்லப்படுவதை ஏற்று, தம் மாநிலம் வளர்ச்சி அடையக் கூடாது என்று சொல்வாரா சந்திரபாபுகாரு?

“மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை” என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றல்லவா போராட வேண்டும்.தலைக்குக் குல்லவா? குல்லாவுக்கு ஏற்ப தலையை வெட்டலாமா?
விசித்திரம் – வேடிக்கை – வேதனை!
கேள்வி: மருத்துவர் பரிந்துரையில்லாத மருந்து விற்பனை, சட்ட விரோத ‘ஆன்லைன்’ மருந்து விற்பனை இவற்றைத் தடுப்பதில் ஒன்றிய அரசு மெத்தனமாக இருப்பது எதனால்?
– ச.சித்ரா, திருவொற்றியூர்
பதில்: அது சிதம்பர ரகசியம் – அது அவாளுக்கு மட்டுமே தெரியும்போல்.
கேள்வி: தமிழ்நாட்டில் 1931 அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள சாதனைக்கு மூல காரணமாக எதை, யாரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்?
– கு.யுவராஜ், செங்கற்பட்டு
பதில்: சரியான பதில் – ‘திராவிட மாடல்’ ஆட்சி; மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனைச் சரித்திரம்.

கேள்வி: என்னதான் பக்தி கோஷம் போட்டாலும் “இதெல்லாம் மூடநம்பிக்கை” என்று அவர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பார்ப்பனர்களே சொல்லும் நிலை யாரால், எப்படி வந்தது?
– கி.மாசிலாமணி, மதுராந்தகம்
பதில்: பெரியாரால் வந்தது!
கேள்வி: காட்சி ஊடகத்தின் (கைப்பேசி, இணையம், தொலைக்காட்சி) தாக்கம் அதிகரித்துள்ளதால், அச்சு ஊடகமான செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள் படிப்பது குறைந்துவிடுமா? எதிர்காலத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும்?
– க.சாக்கியன், காஞ்சி
பதில்: அறவே குறைந்துவிடாது என்றாலும், பாதிப்பு வெகுவாகவே இருக்கக் கூடும்! இப்போதே அச்சுப் புத்தகங்களுக்குப் பதில் “ஆடியோ” புத்தகங்களையே வாங்கும் நிலை வளர்ந்து வருகிறதே!
