புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சி, அதன் கொள்கை எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தமிழ்நாடு உற்று நோக்குகிறது!

5 Min Read

பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்!
விமர்சனங்களை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் உரிமை; அது தரந்தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்று தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி
ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக நடந்துவரும் பண்பாளர் மு.க.ஸ்டாலின் அவர்களது நயத்தக்க நாகரிகத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு!

பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகளைத் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது என்றும், விமர்சனங்களை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் உரிமை என்ற நிலையில், அது தரந்தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்பதில் கவனச்சிதறல்கள் இன்றி நடந்துகொள்ள வேண்டும் என்று தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக நடந்துவரும் பண்பாளர் மு..ஸ்டாலின் அவர்களது நயத்தக்க நாகரிகத்திற்குச் சரியான எடுத்துக்காட்டாகும் என்றும், புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சி, அதன் கொள்கை எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தமிழ்நாடு உற்று நோக்குகிறது என்றும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் முழு அமைச்சரவை 35 பேர் கொண்ட தாக அமைந்துள்ளது. நேற்றைய (22.5.2026) பதவியேற்புடன் சேர்த்து மூன்று நிகழ்வுகள் முடிந்து, அமைச்சர்களின் துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொறுப்பு ஆளுநர் பிடிவாதம் காட்டிய நிலையில், ஆளுங்கட்சிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை அளிக்காத நிலையில், 108 இடங்களை மட்டுமே பெற்றது அக் கட்சி.

புதிய ஆட்சிக்குத் தங்களது ஆதரவை — நிபந்தனையற்றுத்
தருவது என்று அறிவித்தனர்!

அதிலும் திரு.ஜோசப் விஜய் அவர்கள், இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நடைமுறையில், அதன் எண்ணிக்கை 107 தான் என்ற நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் மறைமுகமாகவோ, நேரிடை யாகவோ ஆளுநர் (அ) குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது, யார் வரவேண்டுமென்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் உறுதி காட்டியதால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தி.மு.க. தலைமையின் கருத்தறிந்த நிலையில்,  தங்கள் முடிவுகளை வெளியிட்டனர். பிறகு புதிய ஆட்சியான த.வெ.க. ஆட்சிக்குத் தங்களது ஆதரவை — நிபந்தனையற்றுத் தருவது என்று அறிவித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள், அதன் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் தலைமையில், நீண்ட விவாதங்களைக் கட்சிக்குள் நடத்தி, புதிய முதல மைச்சர் அழைப்பை ஏற்று, ஓர் அமைச்சர் பதவியை ஒப்புக்கொள்வது என்று முடிவு எடுத்தனர்.

அதுபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பும் விவாதித்து, புதிய அமைச்சரவையில் சேருவது என்று முடிவெடுத்தது. நேற்று (22.5.2026) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திண்டி வனம் தொகுதியில் வெற்றி பெற்ற தோழர் திரு.வன்னிஅரசு அவர்களுக்கு சமூக நீதித் துறை (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை)யும்,  தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திரு. அ.மு. ஷாஜகான்  அவர்களுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் தற்போது திரு.ஜோசப் விஜய் அவர்களது தலைமையில் உள்ள  கூட்டணி ஆட்சிக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு மேலே இரண்டு இடங்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது!

சமத்துவ, சமூக நீதிக்கும் எதிரானதாக அமைந்துவிடக் கூடாது என்பதால்தான்…

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கும் உரிமை முதலமைச்சருடையது என்ற உண்மை அறியாதவர்கள் அல்ல நாம். அது முக்கிய லட்சியங்களுக்கு, ஜாதி-தீண்டாமை ஒழிப்புக்கும், சமத்துவ, சமூக நீதிக்கும் எதிரானதாக அமைந்துவிடக் கூடாது என்பதால்தான், நாம் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பார்ப்பனர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதையும், அதன் துறை அதிகாரியும் பார்ப்பனராகவே அமைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினோம்.

50 ஆண்டுகள் சட்டப் போராட்டம் தி.மு.க. ஆட்சிகளில் நடந்து, உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்று — ஜாதி, தீண்டாமை ஒழிப்புத் திட்டமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டத்தை மேலும் தொடரவேண்டிய பணிகளில் தொய்வு ஏற்படுத்தும் என்பதை முன்னெச்சரிக்கையாகச் சுட்டிக்காட்டினோம்.

இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, வருமுன் காப்பது அவசியம் என்பதால், சுட்டிக்காட்டிய தற்கு — அவர்களுடைய செயல்முறை எப்படி என்ப தைப் பொறுத்திருந்து பார்ப்போம்! (முதன்மைச் செயலாளர் மாற்றப்பட்டிருக்கிறார் என்ற செய்தி நேற்று (22.5.2026) வந்திருக்கிறது. வரவேற்கத்தக்கது)

நமது இனிய வாழ்த்துகள்!

பதவியேற்ற அமைச்சர்களுக்கும், குறிப்பாக தி.மு.க. கூட்டணியிலிருந்து, அதன் மதச்சார்பின்மை பட்டுப்போகக் கூடாது; ஆர்.எஸ்.எஸ். — பா.ஜ.க. ஆட்சிக்கு வழியேற்பட்டு விடக்கூடாது என்ற  நோக்கத்தோடும் பதவியேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைச்சர் நண்பர் வன்னிஅரசு அவர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அமைச்சர் திரு.அ.மு.ஷாஜகான் அவர்களுக்கும் நமது இனிய வாழ்த்துகளைத் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது!

அதேநேரத்தில், திரு. அ.மு. ஷாஜகான் அமைச்ச ரானவுடன், அறையில் ‘துவா’ செய்த நடப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதை இஸ்லாமிய நண்பர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.  இது ஒரு தவறான நடப்பு– இனி இதுபோன்று நடவாமல் பார்த்துக் கொள்ள முஸ்லிம் லீக் தலைமை அறிவுறுத்தவேண்டும்.

புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சி, அதன் கொள்கை எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தமிழ்நாடு உற்று நோக்குகிறது!

வெற்றி போதைதான் ஆட்சிக்கு முதல் எதிரி — எதிர்க்கட்சிகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

‘ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி’ என்ற நிலைப்பாடு எடுத்துள்ள தி.மு.க.வின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு, ஜனநாயகத்தின் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்ளாமல், ஆளுங்கட்சிக்கு மிகுந்த தன்னடக்கம் தேவை.

ஊடகப் பிரிவினரும், அரசியல் முதிர்ச்சி அடையாத சில ‘அவசர’ங்களும், தி.மு.க. கூட்டணியிலிருந்து பலரும் வெளியேறி, அதனை பலவீனமடையச் செய்து, தி.மு.க.வைத் தனிமைப்படுத்திவிட்டதாக ‘அற்ப’  சந்தோஷத்துடன் செய்திகளைப் பரப்புகின்றனர்!

பலவீனமடையாது – ‘பேருரு’ எடுக்கும்!

தி.மு.க. ஒருபோதும் இதுபோன்ற மாறுதலால் பலவீனம் அடையாது; மேலும் பலத்துடன், அதன் வளர்ச்சியில் ‘பேருரு’ எடுக்கும் என்பதை அனுபவ அறிவுடையவர்கள் அறிவார்கள். அதன், கடந்த கால சரித்திரம் அதற்குத் தக்க சான்று.

பல நேரங்களில், மவுனமான புன்னகை – பல மணிநேர பதற்ற ஆவேச பேச்சின் பதிலைவிட, மிகப்பெரிய சக்தி வாய்ந்தவை!

அரசியல் காற்று, ஒரே திசையில் என்றும் அடிப்பதில்லை என்பதை அனுபவத்தால் பழுத்தவர்க ளுக்கு என்றும் புரியும்!

நயத்தக்க நாகரிகத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு!

விமர்சனங்களை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் உரிமை என்ற நிலையில், அது தரந்தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்பதில் கவனச்சிதறல்கள் இன்றி நடந்துகொள்ள வேண்டும் என்று தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக நடந்துவரும் பண்பாளர் மு.க.ஸ்டாலின் அவர்களது நயத்தக்க நாகரிகத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு ஆகும்.

கி.வீரமணி

தலைவர்,

  திராவிடர் கழகம்

 

சென்னை

23.5.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *