தென்காசி, மே 21 தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியனைச் சுற்றி திடீரெனத் தோன்றிய அரிய ஒளிவட்டத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
நேற்று (20.5.2026) ஆலங்குளம், சுரண்டை, பாவூர் சத்திரம் ஆகிய பகுதிகளில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த அதிசய நிகழ்வு நீடித்தது. அதேபோல், சங்கரன்கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில் சூரியன் உச்சிக்கு வந்தபோது, சுமார் 20 நிமிடங்கள் இந்த ஒளிவட்டம் தெளிவாகக் காட்சியளித்தது. சமூக வலைதளங்களில் வைரல்: வானில் தெரிந்த இந்த அரிய இயற்கை நிகழ்வை அப்பகுதி மக்கள் தங்களது கைப்பேசிகளில் ஒளிப்படம் மற்றும் காட்சிப் பதிவுகளாக எடுத்து சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்தனர். இந்தத் தகவல் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களும் சிறுவர்களும் வீடுகளின் மொட்டை மாடிகளுக்குச் சென்று வானில் தெரிந்த அதிசய சூரிய ஒளிவட்டத்தை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
