இனிக்காத சாக்லெட்!

4 Min Read

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு மெலடி சாக்லேட் வழங்கியதும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் கலாச்சாரச் சின்னங்களைச் சுமந்து நிற்கும் வகையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அசாமின் ‘முகா’ பட்டுத் துண்டும், மணிப்பூரின் ‘ஷிருய் லில்லி’ மலரை மய்யமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பட்டுத் துண்டும் கவனம் பெற்றுள்ளன. அதிலும் அவர் சாக்லெட் வழங்கிய காணொலி ‘வைரல்’ ஆகியுள்ளது. ஒரு நாட்டின் அரசுத் தலைவர் மற்றொரு நாட்டின் அரசுத் தலைவருக்கு இனிப்பான பரிசுப் பொருள்கள் வழங்கியது பிரச்சினையில்லை. ஆனால், தன் நாட்டு மக்களுக்கு அவர் கசப்பையே பரிசளித்து வருகிறார் என்பதில்தான் இருக்கிறது பிரச்சினை! கடந்த 12 ஆண்டுகளில், இந்திய ரூபாயின் மதிப்பு 40%-வீழ்ச்சி அடைந்துள்ளது.

2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முதல்முறையாகப் பொறுப்பேற்ற போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58.40 ஆக இருந்தது. மூன்றாம் முறையாகவும் தொடர்ந்து அதே மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியிலிருந்து இந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.57 (2026 மே 19 நிலவரப்படி) ஆக உள்ளது.

‘‘கடந்த அய்ந்து ஆண்டுகளாக, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை, விலைகள் குறையும் என்றும் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றும் ஒன்றிய அரசிடமிருந்து நாம் கேட்டு வருகிறோம்; ஆனால், நடைமுறையில் எதுவும் நிகழவில்லை. பொருளாதாரத்தின் மீதோ அல்லது வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பு மீதோ அரசாங்கம் எவ்வித அக்கறையும் கொள்ளாததால், இந்நாடு இன்று மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இத்தகையதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்நாடு ஒருபோதும் கற்பனை செய்திருக்காது. ஆனால், இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் தலைமைத்துவம் திசையற்று இருக்குமாயின், விரக்தி உணர்வு பெருகிவிடுகிறது. மக்களிடையே நம்பிக்கையை விதைப்பதற்கான எவ்வித நடவடிக்கையையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை.” இது 2013 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, நரேந்திர மோடி பேசியது.

முதல்முறை பிரதமர் பதவிக்குத் தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டு போட்டியிட்ட போது, அவர் முன்வைத்த முக்கியப் பிரச்சினையே இது தான். 2008-ஆம் ஆண்டு உலகம் முழுக்க எழுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 45 ரூபாயிலிருந்து 59 ரூபாயாக வீழ்ச்சியடைந்திருந்தது. இதைக் குறிப்பிட்டுப் பேசிப் பேசித் தான் ‘அறிவாளிகள்’ என்று கருதிக் கொண்டோரிடையே தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.

ஆனால், இன்றைய நிலை என்ன என்பதை நாடே அச்சத்துடன் எதிர்நோக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 90 ரூபாயைத் தொட்டபோது வியர்த்துக் கிடந்த இந்தியப் பொருளாதாரம் – இன்று 100 ரூபாயை எட்டும் நாள் ‘நாளையோ மறுநாளோ’ என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால், “தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள்; அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ளாதீர்கள்; பெட்ரோல் – டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள்; வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள்” என்று பிரதமர் பேசிய போது எல்லோருக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், கோவிட் தொற்றுக் காலமும் நினைவுக்கு வந்து மேலும் நம்பிக்கையைச் சிதைத்தன.

வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்கச்சொன்ன கையோடு அய்ந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் கிளம்பிவிட்டார் பிரதமர். இன்னொரு புறம், பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்கிறோம் என்ற பெயரில், சைக்கிளில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறோம் என்று ஒரு நாள் விளம்பர ‘ஸ்டண்ட்’ அடித்து, கேள்விக்குள்ளாகியிருந்த பொருளாதார நிலையைக் கேலிக்குரியதாக்கினர் பா.ஜ.க.வின் அமைச்சர்களும், முதலமைச்சர்களும்! பிரதமரின் இந்த அறிவிப்பு தவிர்க்கப்படமுடியாதது என்றாலும், காலதாமதமானது என்றும், சில எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியப் பண மதிப்பு வீழ்ச்சிக்கு முழுக்க இந்தியாவின் பொருளாதாரக் காரணிகள் மட்டுமே காரணமில்லை என்பதை நாம் அறிவோம். உலகில் நிலவும் மந்த நிலை, போர்ப் பதற்றம், எண்ணெய் வளம் மிக்க நிகழும் நாடுகளிலிருந்து போதிய எண்ணெய் கிடைக்காமை என்று பல்வேறு காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து உள்நாட்டில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்பது தான் அச்சம் நிலைக்கக் காரணமாகிறது. 2018 முதலே ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்து உபரியை அதிக அளவில் ஒன்றிய அரசு கேட்டு வந்தது. இது குறித்தும் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வந்த நிலையில், 2018-இல் 1.76 லட்சம் கோடியில் இருந்து, நடப்பு நிதி ஆண்டில், இது 2.8 லட்சம் கோடியில் இருந்து, 3.4 லட்சம் கோடி அளவுக்கு உயரக் கூடும் என்பது மேலும் அச்சமூட்டுகிறது. இந்நிலையில், இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பிரதமர் கொடுக்கும் மெலடி சாக்லெட்டுகள் இத்தாலிப் பிரதமருக்கு இனிக்கலாம். இந்திய மக்களுக்கு இனிக்குமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *